`சிங்கிள் பெட்ரூம் வீடு; அதுவும் சொந்தமில்லை' - டிரில்லியனரான எலான் மஸ்க்கின் சு...
இந்திய அணி இல்லை என்றால் என்ன? FIFA கோப்பை தொடரில் தடம் பதிக்கும் இந்திய வம்சாவளி வீரர்கள்!
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி விளையாட வேண்டும் என்பது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நீண்ட நாள் கனவாகும்.
2026 ஆண்டு உலகக் கோப்பையிலும் இந்திய அணி தகுதி பெறவில்லை என்றாலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் வெவ்வேறு நாடுகளின் சார்பாக உலகக் கோப்பை களத்தில் கால்பதிக்கத் தயாராகி, இந்திய ரசிகர்களுக்கு ஒரு புதிய பெருமிதத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளனர்.
பிரான்ஸ் அணிக்காக விளையாடிய விகாஷ் தொராசோவிற்குப் பிறகு, இருபது ஆண்டுகள் கழித்து, இந்திய வேர்களை உலகக் கோப்பை மேடையில் பறைசாற்றவிருக்கும் அந்த நான்கு வீரர்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ.
சர்ப்ரீத் சிங்
நியூசிலாந்து அணிக்காக விளையாடும் 27 வயதான சர்ப்ரீத் சிங், இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ஒரு அட்டாகிங் மிட்ஃபீல்டர் ஆவார். இவர் பஞ்சாபின் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவர்.

நியூசிலாந்து அணிக்காக இருபத்து நான்கு சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள சர்ப்ரீத் சிங், 2019 ஆண்டில் புகழ்பெற்ற ஜெர்மனி கிளப்பான பேயர்ன் முனிச் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டு, புன்டெஸ்லிகா தொடரில் விளையாடிய முதல் இந்திய வம்சாவளி வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தஹ்சின் முகமது ஜம்ஷித்
கத்தாரைச் சேர்ந்த 19 வயது விங்கரான தஹ்சின் முகமது ஜம்ஷித், கேரளாவின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஜம்ஷித் கோழிக்கோடு பல்கலைக்கழக கால்பந்து அணியில் விளையாடியவர் என்பதால், தன் மகனை கத்தாரின் புகழ்பெற்ற ஆஸ்பயர் அகாடமியில் சேர்த்து ஒரு சிறந்த கால்பந்து வீரராக உருவாக்கினார்.

தற்பொழுது அல் துஹைல் கிளப்பிற்காக விளையாடி வரும் தஹ்சின், இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டே கத்தார் நாட்டின் சிறப்பு பாஸ்போர்ட் மூலம் சர்வதேச போட்டிகளில் விளையாடும் முதல் இந்திய வம்சாவளி வீரர் என்ற தனித்துவமான பெருமையைப் பெற்றுள்ளார்.
நிஷான் வேலுப்பிள்ளை
ஆஸ்திரேலியாவின் சாக்கரூஸ் அணியில் இடம்பிடித்துள்ள 25 வயதான நிஷான் வேலுப்பிள்ளை, மெல்போர்னில் பிறந்தவர் என்றாலும் இவரது தந்தை இலங்கைத் தமிழ் மற்றும் மலேசியப் பின்னணியைக் கொண்டவர்.

மெல்போர்ன் விக்டரி கிளப்பிற்காக விளையாடும் இவர், 2024 ஆண்டில் சீனாவுக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியிலேயே மாற்று வீரராகக் களம் இறங்கி கோல் அடித்து அசத்தினார். பிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் களம் காணும் முதல் தமிழ் வம்சாவளி வீரர் நிஷான் வேலுப்பிள்ளை என்பது தமிழ் ரசிகர்களுக்குக் கூடுதல் பெருமையாகும்.
சாமுவேல் முட்டுசாமி
ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசு அணிக்காக விளையாடும் 29 வயதான சாமுவேல் முட்டுசாமி, மிக நீண்ட சர்வதேச அனுபவத்தைக் கொண்ட ஒரு மிட்ஃபீல்டர் ஆவார். பிரான்சில் பிறந்த இவரது தந்தை கரீபியன் தீவான குவாடலூப்பைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியினர் ஆவார்.

காங்கோ தேசிய அணிக்காக 57 போட்டிகளில் விளையாடியுள்ள சாமுவேல் முட்டுசாமி, கிரேக்க நாட்டின் அட்ரோமிட்டோஸ் கிளப்பிற்காக விளையாடி வருகிறார். இந்த நான்கு இந்திய வம்சாவளி நாயகர்களும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் இந்திய முத்திரையை ஆழமாகப் பதிக்கக் காத்திருக்கிறார்கள்.















