சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் எப்போது வரை மழை? |லேட்டஸ்...
திருவள்ளூர் மாவட்டம்,மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்: மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம்!
தேவர்களும் முனிவர்களும் ஏன் மகாவிஷ்ணுவும் பிரம்மனும் காணவிரும்புவது ஈசனின் நடனக் காட்சி. அப்படிப்பட்ட அந்த அற்புதமான காட்சியை ஈசனும் அவரை நோக்கித் தவம் செய்பவர்களுக்கு காட்டி அருளினார்.
அப்படி அவர் திருவாலங்காட்டில் நடனமாடியபோது நந்தி மிருந்தங்கம் வாசித்தார். இசையில் மூழ்கி அவர் கண்மூடியே வாசித்துமுடித்தார். கண் திறந்ததும்தாம் காணக்கிடைக்காத திருநடனக் காட்சியைக் காணத் தவறிவிட்டோமே என்கிற வருத்தம் உண்டானது.
தனக்கும் திருநடனக் காட்சி வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அப்போது ஈசன் அவரிடம், மெய்ப்பேடு என்னும் தலத்துக்குச் சென்று தவம் செய்யுமாறும் அதன்பலனாக விரைவிலேயே திருநடன தரிசனம் கிடைக்கும் என்று கூறியருளினார். அதன்படி நந்தி வந்து தவம் செய்து சிவதரிசனம் பெற்ற தலம்தான் மெய்ப்பேடு என்று போற்றப்படும் மப்பேடு.
திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி - பேரம்பாக்கம் மார்க்கத்தில், பூந்தமல்லியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மப்பேடு. சென்னையிலிருந்து சுமார் 38 கி.மீ. தூரம். நந்திக்கு சிங்கீ என்கிற பெயரும் உண்டு. நந்தி வழிபட்ட ஈசன் என்பதால் இந்த ஈசனுக்கு சிங்கீஸ்வரர் என்கிற திருநாமமும் உண்டானது.

பஸ்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த திருமால், இந்தத் தலத்துக்கு வந்தே மீண்டும் சுயரூபம் கொண்டாராம். அதனால் இந்த ஊர் மெய்ப்பேடு என்று மாறி (மெய் - உண்மை, பேடு - வடிவம்). பிறகு `மப்பேடு’ என்று மருவியதாகச் சொல்வார்கள்.
ஈசன் இருக்கும் இடத்தில் சக்தி இல்லாமல் இருப்பாளா... அன்னையும் இங்கே ஆனந்தமாக எழுந்தருளியிருக்கிறாள். இங்கே அவளுக்கு புஷ்ப குஜாம்பாள் என்று திருநாமம். சுவாமி சந்நிதியின் வலது புறத்தில், சதுரமான கருவறையில் நின்ற கோலத்தில்-கிழக்கு முகமாய் அருளாசி வழங்குகிறாள், புஷ்பகுஜாம்பாள்.
இந்த அம்பிகை கொள்ளை அழகு. அவளை தரிசித்தாலே நம் மனக்கவலைகள் நீங்கிவிடும். மேலும் பேசுவதில் பிரச்னை இருக்கும் குழந்தைகளை இங்கு அழைத்துவந்து இந்த அன்னையை வழிபட்டால் விரைவில் மடை திறந்த வெள்ளம்போல் அவர்கள் பேசும் நலம் பெறுவார்கள் என்கிறார்கள் பக்தர்கள். சுவாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தென்கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அழகுடன் கம்பீரமாக நம்மை வரவேற்கும். ராஜகோபுரம் முழுவதுமே கலைநயம் மிக்க சுதைச் சிற்பங்களைக் கொண்ட சிற்பப் பெட்டகமாக விளங்குகிறது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு அழகுற அமைந்துள்ளது ஆலயம்.
மகா மண்டபத்தின் முன்பு செவ்வக வடிவ முன்மண்டபம் அமைந்துள்ளது. தென்புற நுழைவு வாசலில் நடராஜர் சபை. ஆலயத்தின் நீண்ட பிராகாரத்தில் ஆஸ்தான விநாயகர், இடம்புரி விநாயகர், வள்ளி மற்றும் தெய்வானையுடன் முருகப்பெருமான், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள், வீரபாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.

மூலவரின் கருவறைக் கோஷ்டத்தில் பிரம்மாவின் திருவுருவம் காணப்படுகிறது. வியாழக்கிழமைதோறும் பிரம்மாவுக்கு அர்ச்சனை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால், நம் தலையெழுத்து நல்லவிதமாக மாறி, வாழ்க்கை சிறக்கும் என்கிறார்கள்.
பிரதோஷ காலத்தில், நந்தி மண்டபத்தின் முன்பாக உள்ள `நவ வியாகரணக் கல்’ என்ற சிறிய கருங்கல்லின் மீது ஏறி நின்று, ஒருசேர நந்தியையும் ஈசனையும் வழிபட்டால், நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை சோம வாரம், பிரதோஷம், ரேவதி நட்சத்திரம் போன்ற தினங்களில் இப்படி தரிசிப்பது கூடுதல் சிறப்பு.
இரண்டாம் ஆதித்த கரிகால சோழன் காலத்தில் இங்கே திருப்பணிகள் நடந்துள்ளன. இதற்கு சாட்சியாக இங்கே கல்வெட்டு ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆலயம் கி.பி. 967-ல் இரண்டாம் ஆதித்த கரிகால சோழனால் கட்டப்பட்ட தகவலும் உள்ளன.
மூல நட்சத்திரக் காரர்களுக்கு முன்னேற்றம்
இந்த ஆலயம் மூல நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகாரத் தலம். மூல நட்சத்திரம் சரஸ்வதிக்கும் அனுமனுக்கும் உரிய நட்சத்திரம். கல்வியும் வலிமையும் வழங்கும் இவ்விரு தெய்வங்களுக்கும் உகந்த இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சகல நலன்களும் கிடைக்கும். வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேற்றம் காண்பார்கள் என்கிறது தலபுராணம்.
எனவே, மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்குவதற்காக, தொடர்ந்து ஐந்து மூல நட்சத்திர நாள்களில் இந்த ஆலயத்துக்கு வந்து, சிங்கீஸ்வரர் சந்நிதியில் ஐந்து நெய்விளக்குகள் ஏற்றி அர்ச்சகரிடம் கொடுத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்துகொள்ளவேண்டும்.

இங்குள்ள வீரபாலீஸ்வரர் காரியத் தடைகளை விலக்குபவர். இவரின் சந்நிதிக்கு முன்பு நின்று வீணை இசைத்து அனுமன், ஈசனின் அருளைப் பெற்றதாகத் தலபுராணம் தெரிவிக்கிறது.
இங்குள்ள வீணை ஆஞ்சநேயர் விசேஷமானவர். சீதாதேவியைத் தேடிக்கொண்டு தென்திசை சென்றபோது, இந்தத் தலத்துக்கு ஆஞ்சநேயர் வந்தார். அப்போது இப்பகுதி மக்களின் வேண்டுதலுக்காக அமிர்தவர்ஷினி ராகத்தை இசைத்துப் பாடி மழையை வரவழைத்துப் பஞ்சம் போக்கினார் என்றும் சொல்லப்படுகிறது.

















