Delimitation: "நாங்கள் நடத்த விடமாட்டோம்" - தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் கொ...
திருவாரூர் மாவட்டம், அன்னியூர் அக்னீஸ்வரர் திருக்கோயில்: வெயில் கால நோய்களில் இருந்து காக்கும் ஈசன்!
கோடைக்காலத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட வேனல்கட்டி, அம்மை, கண் நோய்கள், சிறுநீர்க் கடுப்பு, சிறுநீர்த் தொற்று, அக்கி, விஷ ஜுரங்கள் எனப் பல நோய்களும் பரவத் தொடங்கும்.
இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள மருத்துவ வழிகள் பல சொல்லப்படுகின்றன. அதே நேரத்தில் ஆன்மிகமும் நமக்கு வழிகாட்டுகிறது. ஒரு தலத்தில் ஈசன் குளுமையே வடிவாகக் காட்சி அருள்கிறார்.
அந்த ஈசனை வழிபட்டால் ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு வரும், உஷ்ண பாதிப்புகள் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள் அந்த அற்புதத் தலத்தைத் தரிசிப்போம்.
கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் திருவீழிமிழலை நோக்கிச் சென்றால் அன்னியூரை அடையலாம். இங்குதான் ஈசன் அக்னீஸ்வரராக அருள்பாலிக்கிறார்.
தன்னை வழிபட்ட அக்னிக்கு, கைகளையும் நாவையும் வழங்கிய ஈசன், அக்னியைப் போலவே இங்கு வந்து வழிபடும் சகலருக்கும் நோய் தீர்க்கும் வைத்தியனாகவே இருப்பதாகவும் உறுதி கூறினாராம்.

ஈசனை மதியாது தட்சன் நடத்திய யாகத்தில் சகல தேவர்களும் கலந்துகொண்டனர். இதனால் கோபம் கொண்ட ஈசன், அனைவருக்கும் தண்டனை அளிக்க வீரபத்திரருக்கு ஆணையிட்டான்.
யாகத்தின் முக்கியப் பாகமாகக் கலந்துகொண்ட அக்னிக்கும் தண்டனையாக அவனது கைகளும் நாவும் துண்டிக்கப்பட்டன. விளைவு, அக்னியின் ஒளியும் வெம்மையும் மறைந்துபோனது. இதனால் உலக உயிர்கள் வாடத் தொடங்கின. தனது குறைகள் நீங்க அக்னி, இத்தலத்துக்கு வந்தான்.
இங்கு லிங்கப் பிரதிஷ்டை செய்து, ஒரு தீர்த்தம் உருவாக்கி, வன்னி இலைகளால் ஈசனை அர்ச்சித்து வழிபட்டான். பிறகு ஈசனின் அருளால் சாபம் நீங்கப்பெற்றான். வன்னி மரக்காடு என்பதாலும், அக்னி வழிபட்டதாலும், இவ்வூர், 'அன்னியூர்' என்றானது. ஈசனும் 'அக்னிபுரீஸ்வரர்' என்ற திருநாமம் பெற்றார். அதுவே பின்னாளில் அக்னீஸ்வரர் என்றானது என்கிறார்கள் பக்தர்கள்.
அக்னிக்கு அருளியதால் வெம்மை தொடர்பான நோய்களையும் ரத்தம் சம்பந்தமான நோய்களையும் தீர்க்கும் மருத்துவரானார். இங்கு வன்னி தலவிருட்சம், தீர்த்தம் அக்னி தீர்த்தம். இங்குள்ள வன்னி மரம் 1,600 ஆண்டுகளைக் கடந்தும் செழிப்போடு காணப்படுகிறது.

காத்யாயன முனிவரின் திருமகளாக, பார்வதி என்ற பெயரில் அன்னை சக்தி ஒருமுறை அவதரித்தாள். அப்போது ஈசனை மணக்க வேண்டி முனிவரின் வழிகாட்டலில் இங்கு வந்து தவமிருந்து, அருகில் இருக்கும் திருவீழிமிழலையில் மணம்புரிந்தார். அதனால் அன்னியூர் ஈசனுக்குப் பெண் கொடுத்த தலமானது.
இங்கே அன்னை கௌரி பார்வதி என்கிற திருநாமத்தோடு அருள்கிறாள். திருவீழிமிழலை வருபவர்கள் இங்கும் வந்து அன்னையை வழிபட திருமணத்தடைகள் நீங்கி சீக்கிரமே தகுந்த வரன் அடைவார்கள் என்பது ஐதிகம்.
சிறிய கோயில் என்றாலும் மிகுந்த சாந்நியத்துடன் அழகுற அமைந்துள்ளது. ஈசன் அக்னீஸ்வரர் என்றும் அக்னிபுரீஸ்வரர் என்றும் சுயம்பு லிங்க மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஈசனின் கருவறை வாயிலின் இருபுறமும் உள்ள துவார பாலகர்கள் கல்சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளனர்.
கருவறைச் சுவரில் திருநாவுக்கரசர், அக்னி, கௌரி, லிங்கம், காமதேனு, ரிஷபாரூடர் சிற்பங்கள் அமைந்துள்ளன. தக்ஷிணாமூர்த்தி, விநாயகர், பாலசுப்ரமணியர், கஜலட்சுமி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள சோமாஸ்கந்தர், நடராஜர் திருமேனிகள் சிறப்பானவை.
வெம்மை சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் ஈசனுக்கு கோதுமையால் செய்த நைவேத்யம் படைத்து வழிபட்டால் விரைவில் குணம் பெறுவர் என்பது நம்பிக்கை. ஈசனுக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்தும் தாமரை மலர்களைச் சமர்ப்பித்தும் பலன் பெறுகிறார்கள் பக்தர்கள்.

அக்னிபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, அந்த அபிஷேக நீரை, விபூதி கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 11 நாள்கள் அருந்திவர, ஈசன் அருளால், பூரண ஆரோக்கியம் பெறுவர் என்பது நம்பிக்கை.
ரத்தக்கொதிப்பு மற்றும் உஷ்ண நோய்கள் கொண்டவர், சுவாமிக்கு அபிஷேகம் செய்து தயிர்சாதம் நைவேத்தியம் செய்தாலும் பலன் பெறுவார்களாம்.
வாஸ்து சம்பந்தமான பரிகாரம் செய்யும் தலமாகவும் இக்கோயில் விளங்கிவருகிறது. வீடு கட்ட முடியாமல் தவிப்பவர்கள், நிலம் சம்பந்தமான பிரச்னைகள் கொண்டவர்கள் இங்கு ஏழு புதிய செங்கற்கள் கொண்டு வந்து வைத்து வணங்கிப் பரிகாரம் செய்கிறார்கள்.
வியாபாரத் தலங்களில் வாஸ்து குறைபாடு உள்ளவர்களும் இங்கு வந்து பரிகாரம் செய்ய, வியாபார விருத்தி அடைகிறார்கள்.





















