கும்பகோணம் தீ விபத்தின் கோரத்தை நேரில் கண்டவர், இன்று மதிப்புமிக்க பதவியில்- வாழ...
திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் முகம் தேவையில்லை! - சாத்தூரிலிருந்து ஒரு ரசிகரின் பிறந்தநாள் மடல்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
திரைப்பயணத்தின் ஆரம்பத்தை தினமும் சொல்லி அழும் வேதனையோடும், பல அவமான கேலி,கிண்டல் பேச்சுக்களையும் தாங்கிக் கொண்டு அசராமல் அடி எடுத்து வைத்து, இன்று தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வளர்ந்திருக்கும் எங்கள் நாயகன்! எங்கள் அண்ணன்! எங்கள் தோழன்! எங்கள் விஜி! எங்கள் விஜய்! அவர்களுக்கு ஓர் ரசிகனாகவும், தம்பியாகவும் என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்து!!
என் அண்ணன் தீவிர அஜித் ரசிகன். அதற்கு மாற்றாக நான் தீவிர விஜய் ரசிகன். அஜித் அவர்களின் புதுப் படம் வெளியானால் போதும் முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று விடுவான். எனக்கும் ஆசை இருந்தது விஜய் படத்திற்கு இதுபோல் போக வேண்டும் என்று! அண்ணனும் என்னை தியேட்டருக்கு கூட்டி போகவே இல்லை என்று சொல்வதை விட மறந்து விடுவான் என்றே சொல்லலாம். அவன் அவனுடைய நண்பர்களோடு மட்டுமே செல்வான்.

2019 தீபாவளி சமயத்தில் பிகில் படம் வெளியானது. எப்படியாவது இந்த படத்தை தியேட்டரில் பார்த்து விட வேண்டும் என்று மனம் அலை பாய்ந்தது. இதற்கு முன் தியேட்டர் பக்கமே நான் போனதில்லை. அம்மாவிடம் சொன்னேன். “சரி அண்ணன் கிட்ட கேட்டு பாக்குறேன் போலாம்” என்று அம்மா சொல்ல..
“ரெண்டு மூணு நாளைக்கு டிக்கெட் எல்லாம் கிடைக்காது! ஹவுஸ் ஃபுல்லா இருக்கு! ஒரு வாரம் கழிச்சு கூட்டிட்டு போறேன்!” என்று அண்ணன் சொல்ல..
எனக்கு மனசே கேட்கவில்லை! அப்படி வாய் கிழிய பேசிய என் அண்ணன் அன்றைய தினமே இரவில் படத்தை பார்த்துவிட்டு வந்தான்.
இதைப் பார்த்து எனக்கு கோபமாகவும் வந்தது, அதே சமயம் அழுகையும் வந்தது.
ஒரு வாரம் கழித்து, காலையில் தியேட்டருக்கு கூட்டி போவதாக அண்ணன் சொன்னான்.
மதியம் இரண்டு மணி காட்சிக்கு நானும் என்னுடைய அம்மா, அக்கா, அண்ணன் எல்லோரும் பேருந்தில் சாத்தூருக்கு சென்றோம். அப்பா அன்றைக்கு வேலைக்கு சென்று விட்டார்.
முதல் முறையாக தியேட்டரில் விஜய் படத்தை பார்க்க போகிறோம் என்கிற ஆர்வத்தில் பேருந்து இருக்கையில் என்னால் உட்கார முடியவில்லை. பத்து நிமிடப் பயணம் அன்று மட்டும் எனக்கு பத்து மணி நேரமாக தெரிந்தது. பஸ் ஸ்டாண்டில் இறங்கி தியேட்டருக்கு நடந்து சென்றோம். தியேட்டரின் வாசலில் விஜயின் கட்டவுட்களும், பேனர்களும், தோரணங்களும் கட்டப்பட்டு திருவிழா கோலம் போல் இருந்தது. அண்ணன் கவுண்டரில் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு வந்தான். எல்லோரும் உள்ளே சென்றோம்.
உள்ளே நுழைந்ததும் அந்த அலாதியான வாசனை என்னை எங்கோ கொண்டு சென்றது. பெரிய திரையைப் பார்த்ததும் என் கண்களை என்னாலே நம்ப முடியவில்லை. அவ்வளவு மகிழ்ச்சியோடு படத்தை பார்க்க ஆரம்பித்தேன். எல்லா இருக்கைகளிலும் பரவலாக மக்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
படம் ஆரம்பிக்கும் போதே விசில் சத்தம் காதை கிழித்தது. டைட்டில் கார்டு மற்றும் விஜயின் பெயர் வந்தபோது ‘தளபதி.. தளபதி’என்ற சத்தமும் விசிலும் விண்ணை முட்டும் அளவிற்கு இருந்தது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த அம்மாவை பார்த்தேன். கொஞ்சம் முகம் மாறி இருந்தது. எனக்கு நன்றாக விசில் அடிக்க தெரியும், இருந்தும் ஒரு கணம் அம்மாவை நினைத்து யோசித்தேன்.
வாயில் ஊதுபத்தியை வைத்து பட்டாசை பிடித்து கூர்கா போலீஸ் ஒருவரின் முகத்தின் மீது பட்டாசை தூக்கி போட்டு,“ஹாப்பி தீபாவளி நண்பா!” என்று சொல்லியபடி விஜய் திரும்பும் அறிமுகக் காட்சியை பார்த்து என்னை அறியாமலேயே நானே விசில் அடித்து கத்தி விட்டேன். இதைப் பார்த்த அம்மா எனது தொடையை தட்டி முறைத்தார். இருந்தும் அந்த ஆரவாரத்தில் அம்மாவை கண்டு கொள்ளாமல் படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.
இடது பக்கம் அமர்ந்திருந்த எனது அக்கா நான் சந்தோசமாக விசில் அடித்து ஆரவாரம் செய்ததை வியப்போடு பார்த்தபடி இருந்தாள். அவளுக்கும் விஜய் படங்கள் என்றால் பிடிக்கும்.
இளைஞர்கள் தான் கத்துகிறார்கள் என்று பார்த்தால், அதற்கு இணையாக பெண்களும் விசில் அடித்து, சத்தம் போட்டு படத்தை கொண்டாடினார்கள்.
படத்தில் நிறைய சீன் பிடிக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த அனிதாவை ஒருவன் பைக்கில் நின்றபடி கூப்பிடுவான். பார்க்க வந்த அனிதாவிடம் தனது காதலை சொல்வான். ஏற்க மறுத்த அனிதாவை கொஞ்சம் கூட யோசிக்காமல் அடுத்த நிமிடமே ஆசிட் முட்டையை முகத்தில் அடிப்பான். வலியில் துடிதுடித்து கீழே அனிதா விழுவாள். தோழிகள் ஓடி வருவார்கள். அப்போது அனிதா பக்கத்திலேயே ஒரு செய்தித்தாள் எரிந்து கொண்டிருக்கும். அந்த செய்தி தாளில் பெண்கள் பாதுகாப்பாக வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 108-ஆவது இடம் என்ற தகவல் போடப்பட்டிருக்கும். இந்த காட்சிகளைப் பார்த்ததும் எனக்கு திக்கென்று ஆனது. ‘நா மட்டும் அனிதா பக்கத்துல இருந்திருந்தேனா கல்ல கொண்டு அவன் மண்டைய ஒடச்சி பொளந்திருப்பேன்!!’என்றெல்லாம் என் மனதில் ஓடியது.
“மாதரே..மாதரே..மாதரே.. மங்கையே.. மங்கையே..மங்கையே..”என்ற பாட்டு ஓடும் பொழுது நான் என்னுடைய அக்காவையே தான் பார்த்துக் கொண்டிருந்தேன். இதைப் பார்த்த அக்கா திரும்பி என்ன? என்பதை தலையை மேலே தூக்கி கேட்டாள்!
ஒன்றுமே நான் சொல்லவில்லை.
படம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது. அனிதாவின் வீட்டிற்கு சென்று அவளை கால்பந்து விளையாட கூட்டிச் செல்வதற்காக விஜய்யும், நயன்தாராவும் செல்வார்கள்.
கதவை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்த அனிதாவிடம் போய் பேசுவார்.
விஜய் பேசிய அந்த பேச்சில் ஒரு வசனம் மட்டும் இன்னும் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. “திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் முகம் தேவை இல்லமா..!”என்ற வார்த்தை தான்.
அதன்பிறகு படத்தில் விவேக் அவர்களின் காமெடிகளும் நன்றாக இருந்தது. அதிலும் குறிப்பாக அவர் பாண்டியம்மாவை பார்த்து, “பாண்டியம்மா வெறியான படுத்திரும் ஹரியானா!!”என்று சொல்லுமிடம் ரசிக்கும்படியாக இருந்தது.
இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போகலாம்.
விஜயைப் பார்த்து அவரின் அப்பா, பிகிலே…கப்பு முக்கியம் பிகிலே…என்று சொல்லும் இடங்கள் எல்லாம் விசில் பறந்தது.
காலமே..காலமே.. என்னை எங்கு கொண்டு போகிறாய்.. மன்னவன் சாகிறான்…கைகள் கட்டி பார்க்கிறாய் என்ற பாடலைக் கேட்டதும் எனது அப்பா ஞாபகம் தான் வந்தது.
விஜய் அந்த படத்தின் இறுதியில் தமிழ்நாட்டுடைய பெண்கள் கால்பந்து அணி தலைவராக இருந்து பல சவால்களைக் கடந்து, இறுதியில் அணியை வெல்ல வைப்பார்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்த படம் எனக்கு விஜய் படங்களிலேயே ஒன் ஆப் தி பெஸ்ட் மூவி..! என்றே சொல்லலாம்.
படத்தைப் பார்த்துவிட்டு, சிங்க பெண்ணே.. சிங்க பெண்ணே.. ஆணினமே உன்னை வணங்குமே!! என்ற எண்ணத்தோடு வெளியே வந்தேன்.
விஜயின் திரையுலகம் வெறும் நடிப்பை சார்ந்தது மட்டும் அல்ல.. சமுதாய மக்களிடம் நல்ல எண்ணங்களை விதைக்கக்கூடிய பேருலகமாக மாறி உள்ளது.. என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை!
நன்றி!
செ.ஹரிஷ்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

















