பொங்கல் பண்டிகை: இந்த ஆண்டு சிறப்பு என்ன? - பொங்கல் பானை வைக்க நல்ல நேரம் எது?
தெலங்கானா : `கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம்' என 500 தெருநாய்களை கொன்ற பஞ்சாயத்து தலைவர்கள்
தெலங்கானாவில் கடந்த டிசம்பர் மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் போட்டியிட்டவர்கள் தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தெருநாய்கள் மற்றும் குரங்குகள் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்று குறிப்பிட்டு இருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பஞ்சாயத்து தலைவர்கள் தாங்கள் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கி இருக்கின்றனர்.
ஹேனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள சயாம்பேட், அரேபல்லி ஆகிய இரண்டு பஞ்சாயத்து பெண் தலைவர்கள், அவர்களின் கணவர்களுடன் சேர்ந்து 300 தெரு நாய்களை கொன்று குவித்துள்ளனர். இது தொடர்பாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மேலும் 200 தெருநாய்களை கொன்று புதைத்துள்ளனர். இது தொடர்பாக 5 பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொன்று புதைக்கப்பட்ட தெருநாய்களை தோண்டி எடுத்து அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர்.

பஞ்சாயத்து தலைவர்கள் தாங்கள் தேர்தலின் போது பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இது போன்று தெருநாய்களை கொன்று குவித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் இக்காரியத்தில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் அடுலபுரம் கௌதம், மச்சரெட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், ``காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள பல்வஞ்சா மண்டலத்தின் ஐந்து கிராமங்களில் கடந்த இரண்டு மூன்று நாட்களில் சுமார் 200 தெருநாய்கள் கொல்லப்பட்டதாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாக" தெரிவித்துள்ளார். மேலும் அந்த ஐந்து கிராமங்களின் பஞ்சாயத்துத் தலைவர்களின் உத்தரவின் பேரில் இந்தக் கொலைகள் நடந்துள்ளதாகவும், அவர்கள் விஷ ஊசிகளைச் செலுத்தி நாய்களை கொன்றதாக அவர் குற்றம் சாட்டினார்.
தான் பவானிபேட்டை கிராமத்திற்குச் சென்றபோது, அங்கு நாய்களின் சடலங்கள் கிடந்ததை கண்டதாகவும், இதே போன்ற கொடூரச் செயல்கள் பல்வஞ்சா, ஃபரித்பேட், வாடி மற்றும் பந்தரமேஸ்வரபள்ளி ஆகிய கிராமங்களிலும் நடந்துள்ளதாகவும் கௌதம் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான விதிமுறைகள் சரியாக செயல்படுத்தப்படாதது குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், நாய் கடி சம்பவங்களுக்கு மாநிலங்கள் கணிசமான இழப்பீடு வழங்கவும், நாய் கடிகளுக்கு நாய்களுக்கு உணவளிப்பவர்களைப் பொறுப்பேற்கச் செய்ய உத்தரவிடுவது குறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.!



















