'30% வட்டிக்கு ரூ.80 லட்சம் கடன்' - மகன் திரும்பச் செலுத்தாததால் 62 வயது தாயைக் ...
'30% வட்டிக்கு ரூ.80 லட்சம் கடன்' - மகன் திரும்பச் செலுத்தாததால் 62 வயது தாயைக் கடத்திய கும்பல்
மும்பை அந்தேரி ஜுகு பகுதியில் வசிக்கும் மோனில் என்பவர் ஜாபர் குரேஷி என்பவரிடம் ரூ.80 லட்சத்தை 30 சதவீத வட்டிக்கு வாங்கி இருந்தார். ஆனால் மோனல் குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை.
இதையடுத்து ஜாபர் குரேஷியும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து மோனில் தாயார் பினாகினி பன்சாலியை (62) காரில் கடத்திச் சென்றனர். அவர்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அடைத்து வைத்து ரூ.80 லட்சம் கடன் வாங்கியிருப்பதை ஒப்புக்கொண்டதாக பினாகினியிடம் ஸ்டாம்ப் பேப்பரில் கைரேகை பெற்றுக்கொண்டனர்.

ரு.80 லட்சத்தைத் திரும்பக் கொடுக்கவில்லையெனில் உனது மகன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி மிரட்டினர். அதோடு பினாகினி கைரேகை வைப்பதை வீடியோவும் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் இது குறித்து வெளியில் சொன்னால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று கூறி பினாகினியை மிரட்டி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அடிக்கடி பினாகினிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டினர்.
இது குறித்து பினாகினி தனது கணவரிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இருவரும் சேர்ந்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜாபரின் கூட்டாளி அல்பாஸ் பெரோஸ் கசம் என்பவரைக் கைது செய்துள்ளனர்.
ஜாபர் குரேஷி தலைமறைவாகிவிட்டார். போலீஸார் கசம் வீட்டில் ரெய்டு நடத்தியதில் குரேஷி ஏராளமானோருக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதோடு பினாகினியை மிரட்டி கையெழுத்து வாங்கிய வீடியோ இருந்த மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக ஜாபர் குரேஷி அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும், அவரைத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

















