'30% வட்டிக்கு ரூ.80 லட்சம் கடன்' - மகன் திரும்பச் செலுத்தாததால் 62 வயது தாயைக் ...
விஐடி-யில் பொங்கல் விழா: `உலகத் தமிழர்கள் கொண்டாடும் ஒரே விழா' - வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன்
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா நேற்று கோலாகலமாக நடந்தது.
மாணக்கர் நல இயக்கம், பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவுக்கு விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார்.
இதில் முளைப்பாரி வைத்து, தவில் நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இசை கருவிகள் முழங்க பொங்கல் கிராமத்திற்கு விருந்தினர்களை அழைத்து சென்றனர்.
தமிழர் மரபு படி வண்ண கோலங்கள் வரைந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புதுப்பானையில் பொங்கல் பானைக்கு புத்தரிசி இட்டு பொங்கல் விழாவை வேந்தர் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்தார்.
விழாவில் கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், சேவையாட்டம், தேவராட்டம், பறையாட்டம், பெரிய மேளம், ஜிக்காட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் மாணவ, மாணவிகளை வெகுவாக ஈர்த்தது.
வேளாண்மை கல்லூரி சார்பில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களை மாதிரிகளாக கொண்டு அமைக்கப்பட்ட பொங்கல் கிராமத்தை வேந்தர் கோ.விசுவநாதன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இதில் நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திரைப்பட பாடல்களை பாடி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.
பொங்கல் விழாவில் கிர், காங்கேயம், ஆலம்பாடி, பர்கூர் ஆகிய பல்வேறு இன மாடுகள் இடம்பெற்றிருந்தன. மேலும் வேளாண் உபகரணங்களும், அம்மி மற்றும் உலக்கை ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

விழாவில் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் பேசியதாவது:
``தமிழர்களுக்கு என்று இருக்கிற விழா பொங்கல் விழா தான். தமிழர்கள் சுமார் 160 நாடுகளில் வாழ்கிறார்கள். தமிழர்கள் என்று கருதுகின்ற அத்தனை பேரும் கொண்டாடுகிற ஒரே திருவிழா பொங்கல் திருவிழா.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து வகை நிலங்களை காட்சிப்படுத்தியது பாராட்டுக்குரியது.
தமிழர்களான நமக்கென்று தனியான குணம் உண்டு. 'தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு' என்று சொன்னார்கள். அந்த குணம் தனித்தனியாக இருப்பதல்ல. நாம் அதை சிறிது மாற்றி, அனைவரும் ஒன்றாக இருக்கக்கூடிய அளவுக்கு அந்த நிலையை உருவாக்க வேண்டும்.
நமக்குள்ளே வேறுபாடுகள் இருக்கலாம். எந்த வேறுபாடானாலும் சரி, சேர வேண்டிய நேரத்தில் ஒன்றாக சேர வேண்டும்.
தமிழர்கள் நன்றாக இருக்க வேண்டும். தமிழர்கள் நன்றாக வாழ வேண்டும். நாம் மிகச்சிறந்த ஒரு பண்பாளர்கள் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டுகிற அளவுக்கு நம்முடைய வாழ்க்கை அமைய வேண்டும். அதைத்தான் நான் இளைஞர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்று கூறியது கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல, உலகத்திலே வாழ்கின்ற எல்லா தமிழர்களுக்கும் பொருந்தும்.
அப்படிப்பட்ட ஒரு கட்டுப்பாடு இருந்தால் தான் வாழ்க்கையிலே நம்மால் வெற்றி பெற முடியும். நாம் நன்றாக வாழ்வதற்கு கல்வியைப் பெற வேண்டும். மிகச்சிறந்த கல்வியைப் பெற வேண்டும்.
நாம் சிறந்தவர்களாக வாழ்வதற்கு திருக்குறளை படித்து, வழி நின்றாலே போதும். வேறு ஒன்றுமே தேவை இல்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகிலே வேறு யாரும் எழுத முடியாத ஒரு திருக்குறளை திருவள்ளுவர் நமக்கு கொடுத்து விட்டு போய் இருக்கிறார்.
உலகிலேயே அதிகமாக 170 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 500 உரை நூல்கள் வந்திருக்கின்றன. எல்லா காலத்திலும், எல்லா நாட்டினராலும், எல்லா மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நூலாக திருக்குறள் இருக்கிறது.
1930-ல் காந்தி டால்ஸ்டாய்க்கு கடிதம் எழுதினார். அதில் அகிம்சை போராட்டத்தைப் பற்றி எழுதி, அதைப்பற்றி உங்களுடைய கருத்துக்கள் என்ன? வெள்ளையரை எதிர்த்து அவர்களுக்கு எதுவும் தொந்தரவு கொடுக்காமல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம், வருத்தாமல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை பற்றி எழுதினார்.
அதற்கு பதில் எழுதிய டால்ஸ்டாய், இப்படி செய்வது மிகச்சிறந்தது என்று சொல்லிவிட்டு, ஆனால் உங்கள் நாட்டுக்கு இது புதிதல்ல. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி அவருக்கு அனுப்பினார்.
அதுவரையிலே காந்திக்கு திருக்குறளை பற்றி தெரியாது. அதற்குப் பிறகு ஆங்கில நூலை படித்துவிட்டு, 'எனக்கு அடுத்த பிறவி இருக்குமானால், தமிழனாக பிறந்து தமிழிலேயே திருக்குறளை படிக்க வேண்டும்' என்று கூறினார்.
இப்போது உலகமயமாக்கல் பற்றி பேசி கொண்டிருக்கிறோம். ஆனால், 3000 ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று எழுதிவிட்டு போனார்.
தமிழன் நல்லவனாக, வல்லவனாக இருக்க வேண்டும். ஒன்றே ஒன்று, கல்வியிலே நாம் பின்தங்கி விடக்கூடாது. தற்போது இந்திய நாடு உயர்கல்வியிலே பின்தங்கியிருக்கிறது. உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 50 சதவீதத்தில் இருக்கிறோம்.
ஆனால், ஐரோப்பிய நாடுகள் எல்லாம் 75 சதவீதத்தை தாண்டிவிட்டனர். அமெரிக்கா 90 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. தென் கொரியாவும் ஆஸ்திரேலியாவும் நூற்றுக்கு நூறு போய்விட்டார்கள்.
நாம் அவர்களோடு போட்டி போட்டு உயர்கல்வியை பெற வேண்டும், உழைக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும். இதற்கெல்லாம் அடித்தளமாக அமைவது நம்முடைய அடிப்படை வாழ்வுரிமைகள், கொள்கைகள். அந்த கொள்கைகளை வகுத்துக் கொடுப்பதுதான் தமிழ் நூல்கள். அதை நினைவில் கொள்ள வேண்டும்."
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, வேளாண்மை துறை சார்பில் இரண்டு கையேடுகள் வெளியிடப்பட்டன.
விழாவில் துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, மாணக்கர் நல இயக்குநர் நைஜு மற்றும் பேராசிரியர்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



















