'30% வட்டிக்கு ரூ.80 லட்சம் கடன்' - மகன் திரும்பச் செலுத்தாததால் 62 வயது தாயைக் ...
BB Tamil 9 Day 99: அரோரா ரொமான்ஸ்; சாண்ட்ரா அழிச்சாட்டியங்களை சொன்ன திவ்யா; முட்டுக்கொடுத்த பிரஜன்!
வீட்டில் இருப்பவர்களும் மீண்டும் வீடு திரும்பியவர்களுக்குமான சந்திப்புகள் நீடிக்கின்றன. துஷார் வருவதற்கு முன்னால் படப்படப்பாகவும் ஆவலாகவும், வந்த பின்னர் தயங்கி பின்னால் நிற்பதும் என்று அரோரா ஒரு ரொமான்ஸ் காட்சியையே நடத்திக் காட்டினார்.
“நான் வெளியே போனதுக்கு நீ காரணம் இல்ல. Dont blame yourself” என்று அரோராவிடம் துஷார் தெளிவுப்படுத்தியது சிறப்பு.

பெண் போட்டியாளர்களிடம் திவாகர் நிறைய வழிகிறார் என்கிற புகார் முன்பே இருந்தது. ‘அண்ணே.. அண்ணே.’ என்று அழைக்கிற பாருவைக் கூட விடாமல் ‘டார்லிங்’ என்று அழைத்தவர்தான் திவாகர்.
மீண்டும் திரும்பி வந்திருக்கிற போது திவாகரின் அதே விளையாட்டு தொடர்கிறது. இது விளையாட்டாக அல்லாமல் விஷமமாகவும் இருக்கிறது. ‘வியானா குட்டி.. திவ்யா குட்டி’ என்று அவர்களின் பின்னாலேயே அலைகிறார். பதிலுக்கு யாராவது ‘யானைக்குட்டி’ என்றால் என்ன செய்வார் என்று தெரியவில்லை.
இன்றும் அதே சில்மிஷத்தை தொடர்ந்தார் திவாகர். படுக்கையில் சட்டையில்லாமல் படுத்துக் கொண்டு ‘வியானா குட்டி. திவ்யா குட்டி’ என்று கொஞ்சிக் கொண்டிருந்தார். “நாங்க கோ்ல்ஸ்லாம் சோ்ந்து ஒண்ணா படுக்கப் போறோம். நீங்க அந்த ரூம்ல படுத்துக்கங்க” என்று பெண்கள் சொன்ன போது அங்கிருந்து விலக திவாகருக்கு மனதே இல்லை.
“நாங்களே அங்க க்ளீன் பண்ணித் தரோம்” என்று சொன்னவுடன் அரைமனதாக கிளம்பினார். ஆனால் விக்ரம் வந்து காரியத்தைக் கெடுத்தார். “இது உன் இடம்தானே.. இங்கதான் தூங்கணும். மதுரைக்காரன் யாருக்கும் பயப்படாதவன்” என்றெல்லாம் விக்ரம் ஜாலியாக ஏற்றி விட ‘அதுதான் சாக்கு’ என்று அங்கேயே படுத்து விட்டார். திவாகரின் குறட்டைக்கு பயந்துதான் அவரை மூலைக்கு மூலை துரத்துகிறார்கள் போல.
விக்ரம் வந்து காரியத்தைக் கெடுத்ததால் திவ்யா அப்செட். “நான் என்னங்க பண்ணேன். ஒரு வார்த்தைததான் சொன்னேன். மனுஷன் டக்குன்னு படுத்துட்டாரு” என்று சமாளித்தார் விக்ரம்.
பெண்கள் திட்டும் வரை இளித்துக் கொண்டிருந்த திவாகருக்கு, பிரவீன்ராஜ் சொன்னவுடன் கோபம் வந்து விட்டது. இந்தச் சண்டை அப்படியே திவ்யாவிற்கும் திவாகருக்குமாக மாறியது. “இந்த வீட்டுக்கு நான்தான் முதல்ல வந்தேன். நான்தான் viral contestant.. எனக்கே இங்க இடம் இல்லையா. நீ வைல்டு கார்டு என்ட்ரிதான்” என்றெல்லாம் எகிற ஆரம்பித்தார் திவாகர். (விட்டால் பிக் பாஸிற்கு மூத்த பிள்ளையே நான்தான். இந்த வீடு எனக்குத்தான் சொந்தம் என்று சொல்வார் போலிருக்கிறது) .

“கட்டிப்பிடிக்கட்டுமா.. கல்யாணம் பண்ணிக்கட்டுமான்னு நீ கண்டபடி கேட்பே.. அதையெல்லாம் நாங்க பொறுத்துக்கலையா?” என்று திவ்யா மல்லுக்கட்ட “நீயும்தான் என்னை மரியாதையில்லாம பேசினே” என்று சண்டையை தொடர்ந்தார் திவாகர்.
பேருந்து, ரயில் பயணங்களில் பெண்களிடம் ரகசியமாக சில்மிஷம் செய்பவர்கள், அம்பலமானவுடன் ‘பப்ளிக் டிரான்ஸ்போர்ட்ல அப்படித்தான் இருக்கும். நான் என்ன வேணுமின்னா இடிச்சேன்.. அப்படின்னா நீ கார்ல வரணும்” என்று எகிற ஆரம்பித்து விடுவார்கள். திவாகரின் பாணியும் இப்படித்தான் இருக்கிறது. எந்தப் பெண்களிடம் இளித்து இளித்து வழிகிறாரோ, அவர்களிடமே உக்கிரமாக சண்டை போடுவதையும் செய்கிறார்.
இறுதியில் திவ்யா சொன்னதுதான் பாயிண்ட். “நான்தான் அவருக்கு ஸ்பேஸ் கொடுத்துட்டேன்.. ஆரம்பத்துலயே நிறுத்தியிருக்கணும்”.
நாள் 99.
Who is the hero? என்கிற ஆண்ட்ரியா அட்டகாசமாக பாடிய பாடல் ஒலித்தது. “இன்னிக்கு யாரு வருவாங்கன்னு தெரியல.. துஷார் வந்தா அரோவை கையிலேயே பிடிக்க முடியாது” என்றார் திவ்யா.
திவாகரின் இன்னொரு அலப்பறை ஆரம்பித்தது. “இப்ப சாலமன் பாப்பைய்பா வாய்ஸ்ல பேசறேன் பாரேன்..” என்று விக்ரமிடம் ஆரம்பித்து, நாம் பல் துலக்கும் போது பேசினால் எப்படியிருக்குமோ அப்படியொரு கண்றாவியான வாய்ஸில் பேசினார். இப்படியே விஜய், மதன்பாப் என்று ஒவ்வொரு குரலாக சாகடித்தார். “உனக்கு உன் குரலே சரியா வரலே” என்று கிண்டலடித்தார் விக்ரம். (திவாகரால் எப்படி இதையெல்லாம் துணிச்சலாக செய்ய முடிகிறது என்பதே புரியவில்லை!)
பாடல் ஒலிக்க துஷார்தான் வரப்போகிறார் என்று மக்கள் கலாட்டா செய்ய, கன்னம் சிவக்க காத்திருந்தார் அரோ. ஆனால் வந்தவர்கள் கலை மற்றும் பிரஜன். “சான்ட்ராவும் நானும் பிரெண்டாவோம்ன்னு நெனச்சுக் கூட பார்க்கலை” என்று சொல்லி பிரஜனிடம் சிரித்தார் விக்ரம். “பிக் பாஸ் வீட்ல எதுவேணா மாறும்” என்றார் பிரஜன்.

சான்ட்ராவிடம் சொன்ன அதே விஷயத்தை பிரஜனிடமும் சொன்னார் திவாகர். “அக்கா கிட்ட நான் கண்ணைக் காட்டிக்கிட்டே இருக்கேன். பெட்டியை எடுக்கலை” என்று அவர் ரகசியம் பேச “முடிஞ்ச கதையை ஏன் பேசணும்?” என்று எஸ்கேப் ஆனார் பிரஜன். நாட்டுப்புறக்கலை தொடர்பான தேர்வில் தான் வெற்றி பெற்றதை சொல்லி பிக் பாஸிடம் ஆசி வாங்கினார் கலை.
“சான்ட்ரா மயக்கம் வந்தத நடிப்புன்னு சொல்லிட்டாங்க.. வீட்லயே அப்படி ஆகியிருக்கு” என்று பிரஜன் வருந்த, “நான் பக்கத்துலயே பார்த்தேன். முன்ன நடந்தது பத்தி தெரியல. அவங்க மெச்சூரிட்டி அப்படித்தான்” என்று சமாதானம் சொன்னார் விக்ரம். சான்ட்ரா செய்கின்ற பல விஷயங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால்தான் அவர் உடல்நிலை விஷயமும் டிராமாவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
போலாம் ரைட் என்கிற பாடல் ஒலிக்க மீண்டும் பரபரப்பு. இந்த முறை துஷார் நிச்சயம் வருவார் என்பதால் படபடப்புடன் காத்திருந்தார் அரோ. உள்ளே வந்தவர்கள் அமித் மற்றும் துஷார். அனைவரையும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய துஷார், அரோவை மட்டும் விட்டு விட்டு ‘அவ்வளவுதானே.. நான் போகட்டுமா?” என்று கேட்டது சுவாரசியமான குறும்பு.
‘பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ?’ என்கிற கதையாக துஷாரும் அரோவும் கட்டியணைத்துக் கொண்டார்கள். “இதை வெச்சே ஜோடி 2 படம் எடுக்கலாம் போலயே” என்று ஷாட் வைத்துக் கொண்டிருந்தார் பிரவீன் காந்தி. (அப்ப பிரசாந்த் கதி?!) “18 லட்சம் போனா என்ன.. இந்த மோமெண்ட் கோடி ரூபாய்க்கு சமம்” என்று ரொமான்ஸ் போதையில் சொன்னார் அரோரா.
“நீங்களும் கனியும் போனப்புறம் வீட்டோட vibe அப்படியே மாறிடுச்சு” என்று அமித்திடம் விக்ரம் சொல்ல, “நான் கூட வியானாவை திட்டினேன். ஏன் வீட்டுக்குள்ள வந்து அப்படிப் பேசினேன்னு.. இனிமே நெகட்டிவிட்டியே இருக்கக்கூடாது” என்று அமித் சொன்னது சிறப்பான விஷயம்.

துஷாரும் அரோவும் தனியாக பேச அமர்ந்தார்கள். “நான் போனதுக்கு நீ காரணம் இல்ல. நான்தான் காரணம். எனக்கு தெளிவு பத்தலை. அந்தச் சுமையை நீ சுமக்காத. நீ உன்னுடைய உழைப்பால வந்திருக்க. நல்லா விளையாடற. பார்க்க நல்லாயிருக்கு” என்று துஷார் ஆறுதல் சொன்னது நன்று.
“உன்னை நான்தான் அனுப்பிச்சேன்னு சொல்லியே என்னை அழ வெச்சாங்க. உன் முகம் மாதிரி மத்ததெல்லாம் எனக்கு மறந்தே போச்சு. அதனால நீ எப்படி இதை எடுத்துக்குவேன்னு தெரியல. என் கிட்ட பேசுவியா.. இல்லையான்னு கூட தெரியல” என்று அரோ உருக “என்னைப் பத்தி தெரியாதா?” என்று சிரித்தார் துஷார்.
இன்னொரு பக்கம் அமித்தும் விக்ரமும் தனியாக பேசிக் கொண்டிருந்தார்கள். “பாவம் தனியா உக்காந்து இருக்காங்களேன்னு சான்ட்ரா கூட ஒரு வாரம் பேசினேன். நாமினேட் ஆயிட்டேன். அப்புறம் பார்த்தா “என் கூட அமித்தான் வந்து வந்து பேசினார்’ன்னு மாதிரி சொன்னாங்க.. பார்த்தவுடன் ஷாக் ஆயிடுச்சு. இனிமே சான்ட்ரா பக்கம் பெரிய கும்பிடுதான்” என்று அனத்தினார் அமித்.
“இனிமே யாரையும் நாம ஜட்ஜ் பண்ணக்கூடாது. அதுதான் இந்த வீடு எனக்கு கத்துக் கொடுத்த பாடம்” என்று தத்துவம் பேசினார் விக்ரம்.
கடைசி வாரத்தின் முதல் டாஸ்க். ஒரு குடுவையில் ‘முழுமையடையாத வாக்கியம்’ கொண்ட சீட்டுக்கள் இருக்கும். அதை எடுத்து ஒவ்வொருவரும் நிரப்பி பேச வேண்டும். ‘இந்த வீடு தந்த அனுபவம்’... என்கிற வாக்கியத்திற்கு ‘நம்பிக்கை’ என்றார் வியானா. (ஆனா அது நெகட்டிவ் நம்பிக்கையா இருக்கே?!) ‘இப்படியெல்லாம் நடக்குமா?” என்பதற்கு “நல்லா ஆட ஆரம்பிக்கிற சமயத்துல வெளியே போறா மாதிரி ஆயிடும். அதுக்கு நானே உதாரணம்’ என்றார் பிரஜன்.

‘கற்றுக் கொண்ட பாடம்’ என்கிற வாக்கியத்திற்கு ‘கார் டாஸ்க் சம்பவத்துல ரொம்ப பயந்துட்டேன். அப்படில்லாம் பயப்படாத துணிச்சலா ஹாண்டில் பண்ணுன்னு திவ்யா அட்வைஸ் பண்ணாங்க. இனிமே தைரியமா இருப்பேன்’ என்றார் அரோ. ‘எல்லோருமே நல்லவங்கதாங்க. யார் மேலேயும் நாம தீர்ப்பு எழுதத் தேவையில்லை’ என்றார் விக்ரம்.
“எல்லோரையும் நம்பலாம்’ என்று சபரி பாசிட்டிவ்வாக சொல்ல “நம்பிக்கைன்றது கைக்காசு மாதிரி. பார்த்து செலவழிக்கணும்” என்றார் அமித். (சான்ட்ரா தந்த அடி அப்படி!) “ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். ஒரு விஷயத்தை எடு்க்கணும்னா உடனே எடுக்கணும். இல்லைன்னா அல்வாதான் கிடைக்கும்” என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார் அரோ.
‘இப்பத்தான் முக்கியமான சம்பவம் நடக்கப் போகுது’ என்பது மாதிரி திவ்யாவும் பிரஜனும் பேச அமர்ந்தார்கள். ‘விளங்க முடியாத கவிதை நான்’ என்கிற மாதிரி சான்ட்ரா செய்த அழிச்சாட்டியங்களை திவ்யா விளக்க, பிரஜன் அதற்கெல்லாம் முட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்.
பாவம், வெளியே நோ்காணல்களிலும் அதைத்தான் அவர் செய்ய வேண்டியிருக்கிறது. “நான் சிவப்பு துண்டு கட்டி ‘உறவு துண்டிக்கப்பட்டதுன்னு டாஸ்க்ல சொன்னதுதான் அவளை நிறைய பாதிச்சிருக்கு. நான் இங்க இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது’ என்று சமாளித்தார் பிரஜன்.

முந்தைய சீசன்களில் எல்லாம் கிளைமாக்ஸ் நெருங்கும் போது ‘டைட்டில் எனக்குத்தான்’ என்று உத்வேகமாக போராடுவார்கள். ஆனால் இந்த சீசனிலோ “ஏதோ போட்டுக் கொடுங்க சாமி.. இல்லைன்னா பேட்டா காசு கொடுங்க கிளம்பறோம்” என்கிற மாதிரியே இருக்கிறார்கள்.!



















