Kuldeep: குல்தீப் யாதவ் - வன்ஷிகா சிங் திருமணத்தின் க்யூட் க்ளிக்ஸ்!| Photo Alb...
தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை... எதற்காக இந்த நீண்ட இடைவெளி?
தேர்தல் அறிவிப்பு :
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். அதன்படி, ஒரே கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதிக்கும், அசாமில் ஏப்ரல் 9-ம் தேதியிலும், கேரளாவிலும் ஏப்ரல் 9-ம் தேதியிலும், புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதியிலும், மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டு கட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நான்கு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் முடிவுகளை மே நான்காம் தேதி அறிவிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வேட்புமனு தாக்கல் 30.03.2026 தொடங்கி 06.04.2026 தேதி வரை நடைபெறுகிறது. அடுத்ததாக வேட்புமனு பரிசீலனை 07.04.2026 தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திருப்பப் பெறுவதற்கான கடைசி நாள் 09.04.2026. இதனைத் தொடர்ந்து 23.04.2026 தேதி வாக்குப் பதிவு நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலம் மற்றும் புதுச்சேரியைச் சேர்த்து மே 04-ம் தேதி நடைபெறவுள்ளது. மூன்று இடங்களுக்கு வெகு சீக்கிரம் தேர்தலை நடத்திவிட்டு, தமிழ்நாடு, மேற்கு வங்கத்துக்கு மிகவும் தாமதமாகத் தேர்தலை நடத்துவதிலும், ஐந்து நாள்கள் இடைவெளிக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கையை நடத்துவதிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.
முன்-பின்னாக தேர்தல் தேதி:
இரண்டு மாநிலம் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு ஒரு தேதியிலும் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மற்ற இரண்டு மாநில தேர்தலையும் நடத்துவது தொடர்பாகவும். வாக்கு எண்ணிக்கையை ஐந்து நாள்களுக்குப் பிறகு நடத்துவது தொடர்பாகவும் விவரமறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம். "வழக்கமாகப் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களுக்கு ஒரே நாளில் தான் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், அசாம், கேரளா, புதுச்சேரிக்கு ஒன்பதாம் தேதியே தேர்தலை வைத்துவிட்டு, பின்னர் நீண்ட இடைவெளி விட்டு 23-ம் தேதி தமிழ்நாட்டுக்கும் நடைபெறுகிறது.

இந்த விவகாரத்தில் அலசி ஆராய்வதற்கு முன்பாகவே தேதியே பார்த்தாலே பற்பல சந்தேகங்களை எழுப்புகிறது. அசாம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இப்போதுவரை உட்கட்சி பூசல் தொடங்கி காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தலுக்கு முழுவதுமாக தயாராகவில்லை. அதேநேரத்தில், தமிழ்நாட்டில் பாஜகவுடன் இப்போதுவரை விஜய் கூட்டணிக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முழு வீச்சில் நடந்து வருகிறது. இங்கு அவர்களுக்கு நாட்கள் தேவைப்படுவதால் பின்னரும், மற்ற இடங்களில் முன்னதாகவும் தேர்தல் தேதியை அறிவித்திருப்பதாகவே கருத முடிகிறது" என்றார்கள் விளக்கமாக.
ஐந்து நாள் இடைவெளி:
தேர்தல் நடைபெறுவது ஒருபுறமிருக்க, தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கும் ஐந்து நாள்கள் இடைவெளி இருப்பது தொடர்பாகத் தேர்தல் ஆணைய வட்டாரத்தில் விசாரித்தோம். "வாக்கு எண்ணிக்கைக்குச் சிறிய இடைவெளி இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் ஏப்ரல் 06-ம் தேதியே தேர்தல் முடிந்துவிட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதியே வெளியானது. அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் கடந்த முறை எட்டு சுற்றுகளாக நடைபெற்ற தேர்தல் இம்முறை இரண்டே இரண்டு சுற்றுகளாக மட்டுமே நடைபெறுகிறது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்துக்கும், 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டுக்கும் மற்ற மூன்று இடங்களில் தேர்தல் நடத்துவதைப் போல நடத்திவிட முடியாது.

தொகுதிகள் அதிகமிருக்கும் மாநிலங்களுக்குக் கூடுதல் அவகாசம் என்பது கட்சிகளுக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் அவசியம். அதே நேரத்தில் முக்கியமாக இம்முறை மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடத்தும்போது ஒரு சில இடங்களில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அங்கே மறு வாக்குப் பதிவு நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கான நேரமாகவே இந்த ஐந்து நாள்களைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால், மற்ற மூன்று இடங்களில் ஏப்ரல் தொடக்கத்திலேயே தேர்தல் முடிவடைந்துவிடுகிறது. 140 தொகுதிகளைக் கொண்ட கேரளாவையும், 126 தொகுதிகளைக் கொண்ட அசாமையும், 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியையும், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தையும் ஒன்றாகப் பார்க்க முடியாது" என்கிறார்கள்.
















