தொகுதி மறுவரையறை விவகாரம்... திமுக மீதான 'யூ டர்ன்' விமர்சனங்களும் விளக்கமும்!
தொகுதி மறுவரையறை விவகாரம்... திமுக மீதான 'யூ டர்ன்' விமர்சனங்களும் விளக்கமும்!
'மத்திய பா.ஜ.க அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க ஆதரவு' என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தி.மு.க-வின் நிலைப்பாட்டுக்கு எதிராக நாடெங்கிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருக்கின்றன!
தொகுதி மறுவரையறை என்றால் என்ன?
ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்குப் பின்னரும் மக்கள்தொகை மாற்றங்களுக்கு ஏற்ப நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளையும், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்படும் பிரதிநிதித்துவத்தையும் மறுசீரமைப்பதே தொகுதி மறுவரையறை (Delimitation). இதன்படி மக்கள் தொகை அதிகரித்துள்ள பகுதிகளுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்குவது இதன் நோக்கம்.
1971-க்குப் பிறகு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடெங்கிலும் குடும்பக் கட்டுப்பாடு முறை அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை வட மாநிலங்களை விடவும் தென் மாநிலங்கள் சிறப்புற நிறைவேற்றியது. இதனால், நடைமுறையில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையவும், மக்கள் தொகை அதிகமுள்ள வட மாநிலங்களின் அரசியல் செல்வாக்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக சர்ச்சை எழுந்தது.

எனவே, கடைசியாக 2002-ம் ஆண்டு தொகுதி மறுவரையறை நடந்தபோதும், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றப்படவில்லை. அதேசமயம் மாநிலங்களுக்குள் தொகுதி எல்லைகள் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு மூன்றாவது முறையாக மத்திய அரசுப் பொறுப்பேற்ற பா.ஜ.க அரசு, 2025-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை முடித்து, 2026-ம் ஆண்டு தொகுதி மறுவரையறையைக் கொண்டுவர முடிவெடுத்தது. ஆனால், புதிய மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால், அது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி தமிழக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் இயற்றி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது அன்றைய தி.மு.க அரசு.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவந்தபோது, தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் எதிர்த்து வாக்களிக்கவே, மசோதா தோல்வியடைந்தது.
இந்த நிலையில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காட்சிகள் மாறின. தேர்தலில் வென்று த.வெ.க ஆட்சி அரியணை ஏற, தோல்வியடைந்த தி.மு.க எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் செயல்பட்டுவந்த 'மதச்சார்பற்ற கொள்கைக்கூட்டணி'க் கட்சிகளும் த.வெ.க-வுக்கு ஆதரவளிக்க, தமிழக அரசியலில் தனித்து நின்று அரசியல் செய்யவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது தி.மு.க.
இதைத் தொடர்ந்து, 'மாநில அரசியலில் த.வெ.க-வை எதிர்கொள்ள மத்திய பா.ஜ.க-வுடன் இணக்கமான போக்கைத் தி.மு.க கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டதாக' விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில்தான், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க ஆதரவு தெரிவித்திருப்பது, தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தொகுதி மறுவரையறையை எதிர்த்துவரும் கட்சிகளும், ஏற்கெனவே தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளும் 'தி.மு.க தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கிவிட்டதாகவும், பா.ஜ.க-வின் அரசியல் வியூகத்துக்கு துணைபோகிறது' என்றும் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன.
'தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க ஆதரவு தெரிவித்திருப்பது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைவிடப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க-வின் சதித் திட்டத்துக்கு தி.மு.க துணைபோவது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை. இந்த முடிவு தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்திய அளவிலும் அரசியல் ரீதியான பின்விளைவுகளை ஏற்படுத்தும்' என கவலை தெரிவித்துள்ளார் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்.

'கடந்த ஏப்ரல் மாதம் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக வாக்களித்தவர்கள், வீதிக்கு வீதி மசோதா நகல்களை எரித்துப் போராட்டம் நடத்தியவர்கள், இப்போது மசோதாவை ஆதரிப்பது தமிழ்நாட்டுக்கு செய்கிற எட்டப்பர் துரோகம்' என கொதித்திருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகமும், 'தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றக் கூடாது' என வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், இந்த விமர்சனங்களுக்கெல்லாம் தி.மு.க தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், 'தமிழகத்தின் தற்போதைய 7.18 சதவிகித நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும்; 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரதிநிதித்துவ விகிதம் அடுத்த 25 ஆண்டுகளுக்கும் தொடர வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளும் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளதால் ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்துள்ளதாக' விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எதிர் விமர்சனங்கள் அடங்கியபாடில்லை.
இந்த நிலையில், தி.மு.க-வின் நிலைப்பாட்டுக்கு எதிராக எழுந்திருக்கும் கேள்விகளை, தி.மு.க கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான இரா.ராஜீவ்காந்தியிடம் முன்வைத்தோம்...
"தொகுதி மறுவரையறைக்கு தி.மு.க ஆதரவளித்திருப்பதன் மூலம், தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றனவே?"
"நாங்கள் ஒருபோதும் தொகுதி மறுவரையறையே வேண்டாம் என்று சொல்லவில்லை. நியாயமான மறுவரையறை (Fair Delimitation) என்கிற அடிப்படையில்தான் எங்கள் கோரிக்கையை ஏற்கெனவே முன்வைத்தோம். ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டியது அவசியம். அதை நிரந்தரமாகத் தடுக்க முடியாது; தள்ளிப்போட மட்டுமே முடியும்.
கடந்த முறை இதுகுறித்தான மசோதா நாடாளுமன்றத்தில் வந்தபோதும்கூட, இரண்டு முக்கியமான கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்வைத்தோம். ஒன்று, தமிழகத்தின் நாடாளுமன்றத் தொகுதி எண்ணிக்கை தற்போதைய 7.18 சதவிகித விகிதாசாரம் எந்தக் காரணத்தைக் கொண்டும் குறைக்கப்படக் கூடாது. அடுத்து, 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவ விகிதம் அடுத்த 25 ஆண்டுகளுக்கும் தொடர வேண்டும் என்பது.
தி.மு.க-வின் இந்த இரண்டு கோரிக்கைகளும் தற்போது புதிய மசோதாவில் ஏற்கப்பட்டுள்ளது. எனவே, மசோதாவுக்கு ஆதரவளிப்பது என்ற தீர்க்கமான முடிவை தி.மு.க எடுத்திருக்கிறது. உண்மை இப்படியிருக்க... தி.மு.க தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டதாக எப்படிச் சொல்ல முடியும்?"

"வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையில் குளறுபடி சர்ச்சை எழுந்துள்ள சூழலில், இப்போது தொகுதி மறுவரையறையிலும் பா.ஜ.க அரசியல் மோசடி செய்யும் என்கிறார்களே?"
"இந்தக் கேள்வியை ஏற்கெனவே நாங்களும் எழுப்பியிருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டம் ஒரு நடைமுறையை வழங்கியிருக்கிறது. ஆனால், அந்த நடைமுறையைப் பயன்படுத்தி அரசியல் செய்ய மாட்டார்கள் என்பதற்கு எங்களிடம் எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால்தான், அரசியலமைப்புச் சட்டத்தின் நடைமுறைக்குள் எங்களால் கோரிப் பெற முடிந்த திருத்தங்களைச் சாதித்திருக்கிறோம்."
"ஏற்கெனவே அசாம், ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீரமைப்பில் பா.ஜ.க செய்த முறைகேட்டை இப்போது நாடு முழுவதும் செய்ய இந்த மசோதா வழிவகுத்துவிடும் என்ற குற்றச்சாட்டை எப்படி மறுப்பீர்கள்?"
"இந்த அச்சங்கள் எங்களுக்கும் இருக்கின்றன. எனவேதான் இந்த விவகாரம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா சில முக்கியமான விஷயங்களை வலியுறுத்தியிருக்கிறார்.
அதாவது சிறுபான்மை மொழி பேசும் மக்கள் மற்றும் மதச் சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில் தொகுதி மறுவரையறை செய்யும்போது, அவர்களுடைய பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் கவனமாகச் செயல்பட வேண்டும். இதை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்துவோம். தொகுதி மறுவரையறை வெளிப்படையான முறையில் நடைபெற வேண்டும் என்பதையும் வலியுறுத்துவோம்.
மசோதாவை ஆதரித்தாலும், அதில் இருக்கக்கூடிய குறைபாடுகள் தொடர்பான எங்களுடைய கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்படும். அவற்றைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவுகளையும் எடுப்போம்."
"அரசியல் சாராத திராவிடர் கழகம் மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும்கூட தி.மு.க-வின் நிலைப்பாட்டை விமர்சிக்கிறார்களே... அவர்களுடைய விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?"
"கடந்த காலத்தில் பா.ஜ.க மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், தங்களுடைய அனுபவங்களையும் அச்சங்களையும் முன்வைக்கிறார்கள். அவர்களுடைய அச்ச உணர்வு எதார்த்தமானது; மதிக்கப்பட வேண்டியது.
பா.ஜ.க முதலில் கொண்டுவந்த வரைவில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யும் அம்சம் இருந்தது. அந்த வரைவு தற்போது தி.மு.க முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் மாநிலங்களின் தற்போதைய தொகுதி விகிதாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மாற்றப்பட்டிருக்கிறது. இதை மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவும், மாநிலங்களின் தொகுதி விகிதாசாரத்தை உறுதி செய்ததை தி.மு.க சாதனையாகவும் பார்க்கிறோம். ஏனெனில், நாடாளுமன்றத்தில் இந்த மசோதா வெற்றி பெற்றால், அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே விகிதாசாரம்தான் நடைமுறையில் இருக்கும்."








