கார் இடித்ததை தட்டிக்கேட்ட ஆத்திரம்; குழந்தைகள் கண்முன்னே தந்தையை கொடூரமாக தாக்க...
கார் இடித்ததை தட்டிக்கேட்ட ஆத்திரம்; குழந்தைகள் கண்முன்னே தந்தையை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகிகள்
நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். கூலித் தொழிலாளியான இவருக்கு 5-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இருவரும் அம்பாசமுத்திரத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது இரு குழந்தைகளையும் பள்ளியில் விடுவதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அம்பாசமுத்திரம் ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாபநாசம அணையில் தண்ணீர் திறப்பு விழாவில் கலந்து கொள்ள கார்களில் ஹாரன் எழுப்பிய படியே அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அதில் ஒரு கார் லேசாக மோதியதில் கார்த்திக் நிலைதடுமாறியுள்ளார். அவர் சுதாரித்துக் கொண்டதால் பைக்கில் பின்புறம் அமர்ந்திருந்த இரு குழந்தைகள் கீழே விழவில்லை. “இது ஸ்கூல் டைம். ஸ்டூடண்ட்ஸ் ஸ்கூலுக்குப் போகக்கூடிய வழியில ஏன் இவ்வளவு வேகமா வர்றீங்க?” எனக் கேட்டுள்ளார்.
இதனையடுத்து ஆத்திரத்தில் கார்களில் இருந்து இறங்கிய த.வெ.கவினர் சூழ்ந்து கொண்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பயத்தில் அழுத குழந்தைகள் “ஸ்கூலுக்குப் போக வேண்டாம்பா வீட்டுக்குப் போவோம்” எனக் கூறவே அவரும் பைக்கைத் திருப்பி அகஸ்தியர்பட்டியை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரைத் திருப்பிய த.வெ.கவினர், கார்த்திக்கின் பைக்கை நிறுத்தி மீண்டும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு குழந்தைகள் கண் முன்பே சரமாரியாக தாக்கி செல்போனை உடைத்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளனராம்.

இதில், அவரது முகம், மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களிடமிருந்து கார்த்திக்கை மீட்டனர். தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்திக் சாலையில் அமர்ந்து போரட்டம் நடத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த விக்கிரமசிங்கபுரம் காவல்நிலைய போலீஸார், அவரை மிரட்டி அனுப்பியதாகத் தெரிகிறது. இதனையடுத்து அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
தன்னைத் தாக்கிய த.வெ.க நிர்வாகிகள், நெல்லை மாவட்டத்தில் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், எந்த பொறுப்பு வகிக்கிறார்கள் என்பது குறித்து கார்த்திக்கிற்கு தெரியவில்லை. ”நான், தங்கச்சி அப்பாவோட பைக்குல ஸ்கூலுக்குப் போனோம். த.வெ.க கட்சிக்காரங்க எங்களுக்கு எதிரா வேகமா வந்தாங்க. அதுல ஒரு கார், பைக்குல இடிச்சுடுச்சு. அப்பா சுதாரிக்கலேன்னா நாங்க கீழே விழுந்துருப்போம். ஸ்கூலுக்கு போக வேண்டாம்னு நான் சொன்னதுனால திரும்பி வீட்டுக்குப் போயிட்டு இருக்கும்போது பைக்கை நிறுத்தி நாலஞ்சு பேரு அப்பாவை அடிச்சாங்க.

அடிக்காதீங்கன்னு அழுதுகிட்டே கெஞ்சுனோம். ஆனாலும், எங்களை தள்ளிவிட்டு அப்பாவை அடிச்சாங்க.” என கார்த்திக் குழந்தைகள் இது தொடர்பாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன், கார்த்திக் தாக்கப்பட்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட த.வெ.கவினரின் கார் பதிவெண்கள் மூலம் தாக்குதலில் ஈடுபட்டது யார் என கண்டறிந்து போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பகுதியினர்.


















