திருப்பரங்குன்றம்:`கடவுள் அணுகிரகம்; எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை'- தீபமேற்றிய...
திருப்பரங்குன்றம்:`கடவுள் அணுகிரகம்; எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை'- தீபமேற்றிய ஓய்வு பெற்ற நீதிபதி
கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றவேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அறங்காவல் குழுவினரின் ஒத்துழைப்பு இல்லை என்றக் காரணத்தால், வழக்கமாக தீபமேற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோரது நேரடி மேற்பார்வையில் இன்று தீபமேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில், இன்று மாலை 5.00 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட பரபரப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பா.ஜ.க-வினரும், இந்து அமைப்பினரும் திரளாக கூடி தீபம் ஏற்றும் இடத்தை நோக்கி புறப்பட்டனர். மலை மீது 50 பக்தர்களை மட்டுமே சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அனுமதித்த நிலையில், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட விவாதத்துக்குப் பிறகு, மலையடிவாரத்தில் பா.ஜ.க-வினர் அமர்ந்தனர்.
அதைத் தொடர்ந்து தொண்டர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில், அரோகரா, பாரத் மாதா கி ஜே கோஷங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டது. இடையிடையே முருக பக்திப் பாடல்களும் இசைக்கப்பட்டது. அதேநேரம், கூட்டத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் பணியை சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கவனித்துக்கொண்டனர். மாலை 4 மணி அளவில் அந்தப் பகுதியில் இருக்கும் வீடுகளின் மொட்டை மாடியில் கூட்டம் கூடத் தொடங்கியது. அதேநேரம், கூட்டத்தை அமைதிப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே தீபமேற்றும் குழு மலையில் தீபக்கொப்பறையை தயார் செய்து கொண்டிருந்தனர்.
மாலை 4:30 மணியளவில் ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் குழு தீபமேற்றப்படும் இடத்துக்குச் சென்றடைந்தனர். அதைத் தொடர்ந்து காவல்துறை, சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த திருப்பரங்குன்றம் மலை மீது சரியாக 5 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, மலையடிவாரத்தில் இருந்த பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
தீபமேற்றியப் பிறகு செய்தியாளர்களைச் சாந்தித்த ஓய்வுபெற்ற நீதிபதி பார்த்திபன், ``எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த உலகில் வரையறுக்க முடியாத உணர்வு தீபமேற்றும்போது ஏற்பட்டது. கடவுளின் அணுகிரகத்தால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. தமிழ்நாடு எப்போதும் சகோதரத்துவத்தை போற்றும் மாநிலம். வெளியில்தான் தவறாக சித்தரிக்கப்படுகிறது. இந்த சகோதரத்துவம் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் நல்லது." என தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb











