முந்தானை முடிச்சு படத்துக்கு நான் எழுதிய கதையே வேற! - பாக்யராஜ் | Uncut உரையாடல்...
'தொடர் புகார்; கண்டுக்கொள்ளாத நகராட்சி' மூதாட்டியின் கைவிரலை கடித்து துண்டாக்கிய தெரு நாய்
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக தொடர் புகார் எழுந்தது. இறைச்சி கடைகள் மற்றும் குப்பை கழிவுகள் இருக்கும் இடங்களில் அதிகம் காணப்படும் தெரு நாய்கள் அவ்வப்போது சாலையில் செல்பவர்களை துரத்தி கடித்து வருவதாகவும் சொல்லப்பட்டது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று குளித்தலை பாரதி நகரை சேர்ந்த சௌராபானு (65) என்பவர் தனது வீட்டில் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு சந்தை பகுதியில் முட்டைக்கோஸ், காலிபிளவர் கழிவுகளை சேகரிப்பதற்காக சென்று உள்ளார். அப்போது, குளித்தலை உழவர் சந்தை அருகே சாலையில் நடந்து சென்ற போது இரண்டு தெரு நாய் சண்டையிட்டு வந்துள்ளது.

அதில் ஒரு நாய் அவரது கைவிரலை கவ்வியுள்ளது. இதில், அவரின் வலது கை விரல் துண்டானது. அதோடு, வெறிபிடித்த அந்த நாய் சாலையில் சைக்கிளில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களை துரத்தி, துரத்தி கடித்ததில் ஐந்து பேர் காயம் அடைந்தனர். இதில் காயமடைந்த அனைவரும் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குளித்தலை நகரப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டுமென நகராட்சிக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாய் கடித்ததில் மூதாட்டியின் கைவிரல் துண்டான சம்பவம் குளித்தலை பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




















