செக்கானூரணி காவல் நிலைய மரணம்: "முதல்வர் விஜய் இன்னும் எத்தனை நாட்கள் மௌனம் காப்...
'தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல’ – எடப்பாடி பழனிசாமிக்கு வேலுமணி பதிலடி!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2 கோடி தொண்டரின் ஒருவர் தான் வேலுமணி என என்னை உதாசீனப் படுத்துவதாக எண்ணி அவர் சொல்லி இருந்தாலும், இதை விட எனக்கு வேறென்ன பெருமை இருக்கப் போகிறது? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் என்பது தான் என்னுடைய முதல் அடையாளம். இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல. என்னைத் தொண்டரில் ஒருவன் என்று சொன்ன கழகப் பொதுச்செயலாளர் அவர்களுக்கு நன்றி. இந்த 2 கோடித் தொண்டர்களால் கொண்டுவரப்பட்டு தான் தாங்கள் இன்றைக்கு பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள்.
கொடிபிடிக்கும் அந்த தொண்டன் தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர். அவன் ஆடினால் இந்த இயக்கம் ஆடும். அந்த தொண்டன் ஒரு முடிவை எடுத்துவிட்டால்... என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை ஒரு நல்ல தலைமை உணர வேண்டும். ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பது தான் ஒரு தலைமைக்கு அழகு. கடைக்கோடி தொண்டன் பத்திரிகை வைத்தால், அந்த கல்யாணத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருப்பார். கடைக்கோடி தொண்டனின் குரலுக்கு மாண்புமிகு அம்மா அவர்களின் கான்வாயே நிற்கும். பொறுப்பில் இருப்பவர்களை விட, இயக்கத்தை உயிராய் நேசித்த அந்த அடிப்படைத் தொண்டனைத் தான் நம் தலைவர்கள் அதிகம் நேசித்தார்கள், மதித்தார்கள்.

’இந்த இயக்கத்தை நேசிக்கும் எல்லோரும் எந்த பிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்’ என்று சொல்வது வேலுமணி என்கிற ஒரு தொண்டன் மட்டுமா? இல்லையே 2 கோடி தொண்டரில் யாரைக் கேட்டாலும் இதைத் தான் சொல்வார்கள். வி.கே. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனி இயக்கம் ஆரம்பிக்கும் முன் பலமுறை நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற முன்வந்தார்கள். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் தி.மு.க-வுக்கு செல்லும் முடிவை எளிதாக எடுக்கவில்லை. அதற்கு முன் பலமுறை தங்களை ஆளாக்கிய இந்த இயக்கத்தில் பயணிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தார்கள். அதேபோல, இன்றைக்கு அமைச்சராக இருக்கும் கே.ஏ. செங்கோட்டையன், பேரவைத் தலைவராக உள்ள ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட பலர் கழகத்தில் இணைந்து பயணிக்க பலமுறை முயற்சி எடுத்தும், நீங்கள் ஒரே ஒருவர் ஒப்புக்கொள்ளாமல் விடாப்பிடியாக இருந்ததால்தான் அவர்கள் எல்லாம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சென்றார்கள்.
இப்படி, தங்களுக்கு அடையாளம் கொடுத்த இயக்கத்தை விட்டுக்கொடுக்காமல் வந்தவர்களை, எப்போதும் போல உதாசீனப் படுத்தி அனுப்பிவைத்து தான் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை ஒருகணம் உணர வேண்டும். பொதுச் செயலாளர் அவர்களிடம் எப்போதும் நான் கேட்பது என்று தான்- வேலுமணி உள்ளிட்ட அந்த 2 கோடி தொண்டர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள். ‘தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே’” எனத் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் இருந்து வந்த நிலையில், இருவரும் ஒருவரையொருவர் வெளிப்படையாக விமர்சனம் செய்திருப்பது உட்கட்சி பூசல் உச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.












