செய்திகள் :

‘நவீன ஓவியம்’ என்றால் என்ன?'- ஓவிய கண்காட்சியில் விளக்கமளித்த ஓவியர் விட்டல் ராவ்

post image
கோவை பெர்க்ஸ் பள்ளியில் சித்தார்த்தா அறக்கட்டளை சார்பில் ஓவியக் கண்காட்சியும், இந்திய ஓவியங்கள் குறித்தான உரையாடலும் கடந்த பிப்ரவரி 2ம் தேதி நடைபெற்றது.

இந்நிகழ்வில் மூன்று தலைமுறை பெண் ஓவியர்களான கமலா, மோனிகா, ஜோஷ்தா ஆகியோரின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து ஓவியர் மோனிகாவின் 'நவீன இந்திய ஓவியம்' என்னும் நூலை முன்வைத்து, 'இந்திய ஓவிய உன்னதங்கள்' என்ற தலைப்பில் எழுத்தாளரும், ஓவியருமான விட்டல் ராவ் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “நவீன இந்திய ஓவியம் - வரலாறும் விமர்சனமும் என்னும் இந்நூலின் அட்டைப்படத்தில் உள்ள ஓவியம் இரு வேறு வர்க்க வேறுபாடுகளைக் காட்டுகிறது. ஒன்று சாதாரண மனிதர்களின் குடியிருப்புகள்.

மற்றொன்று உயர்மட்டத்தில் இருக்கக் கூடிய குடியிருப்புகள். நம் நாட்டை பொறுத்தவரையில் இரண்டுக்கும் மத்தியில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். இந்த ஓவியத்தை வரைந்தவர் 'குலாம் முகமது சேக்'. இந்தியாவின் சிறந்த நவீன ஓவியர்களுள் ஒருவர். அவருடைய அற்புதமான ஓவியங்கள் 'சூரஜ் கா சாத்வன் கோடா' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.”

சரி. நவீன ஓவியம் என்பது என்ன? நவீனம் என்றால் என்ன? நவீனத்துவம் என்றால் என்ன? என்பது குறித்து மோனிகா இந்த புத்தகத்தில் பிரமாதமாக விளக்கியிருக்கிறார். நவீனத்துவம் என்பது இத்தாலிய மறுமலர்ச்சியில் இருந்து தொடங்கியதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு கலைஞனுக்கு அவனது செயல்பாடுகளில் ஒரு சுதந்திரம் ஏற்பட்டதோ, அது தான் நவீனத்தின் தொடக்கம் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.15ம்‌ நூற்றாண்டுக்கு முன்பாக, டாவின்சிக்கு முன்பாக ஓவியத்தின் கீழ் கையெழுத்து போடும் வழக்கமில்லை.

ஓவியத்தை வரைந்தவன் நான் என்ற பிம்ப வெளிப்பாடு மறுமலர்ச்சி காலகட்டத்தில் தான் தொடங்குகிறது. மறுமலர்ச்சிக்கு முன் இது செயல்பாட்டில் இல்லை. இதனை சமூகம், அரசு, தேவாலயங்கள் யாரும் வரவேற்கவில்லை. எல்லாரும் எதிர்த்தார்கள். அதிலும் பெண் கலைஞர்களுக்கு இந்த எதிர்ப்பு கூடுதலாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் பெண்கள் தான் அதிகமான ஓவியர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களது ஓவியத்தின் கீழ் கையெழுத்தை அவர்கள் போடவில்லை. மாறாக, அவர்களது தகப்பன்களோ, கணவர்களோ, மாமனார்களோ தங்களது பெயரில் கையெழுத்துப் போட்டுக்கொண்டார்கள். ஓவியம் வரைந்தவர்களாக காட்டிக்கொள்ள பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. இப்படியான ஆதிக்கம் இருந்தது. இதை உடைத்துப் பல பெண் கலைஞர்கள் வந்திருக்கிறார்கள். இந்தியாவிலும் இப்படியான பெண் கலைஞர்கள் இருக்கிறார்கள்.”

“சரி மீண்டும் கேள்விக்கு வருவோம் ‘நவீன ஓவியம்’ என்பது என்ன? டாவின்சி ஓவியம் வரைகிறார். வரைந்து முடிந்ததும் வண்ணங்கள் குழைக்கும் தட்டைப் பார்க்கிறார். பல வண்ணங்கள் திட்டுத்திட்டாக இருக்கின்றது. சில வண்ணங்கள் குழைக்கும் போது ஒன்றோடு ஒன்று கலந்திருக்கிறது. அதைப் பார்த்த டாவின்சி, 'இதைக் கட்டம் கட்டினால் இது ஒரு அருமையான ஓவியம்' என்கிறார். அது ஒரு 'அப்ஸ்ட்ராக்ட் ஓவியம்'. நவீன ஓவியத்தின் உச்சம் என்று சொல்லக்கூடிய அப்ஸ்ட்ராக்ட் ஓவியம் குறித்தான உணர்வு அவருக்கு இருந்திருக்கின்றது. செயல்பாடு இல்லை.

விட்டல் ராவ்

ஆனால், உணர்வு இருந்திருக்கின்றது. அதுதான் முக்கியம். வெளிப்பாடு எப்போது வேண்டுமானாலும் வரும். இதே மாதிரி சாக்ரடீஸ் தனது மாணாக்கரிடம் சொல்கிறார், 'எனக்கு இந்த ப்ரஸ் எல்லாம் சலித்துப் போய்விட்டது. இந்த கூம்பு, உருளை, வட்டம் எல்லாம் வெறும் இலக்கணங்கள். எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. அப்படியே ஒரு வடிவத்தைக் கொண்டால் நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்கிறார். அது தான் நவீன ஓவியம்.” 

“மேலை நாடுகளில் இத்தாலிய மறுமலர்ச்சி வரும்போது, இந்தியாவில் வங்காள மறுமலர்ச்சி வருகிறது. இந்தியாவின் நவீன ஓவியத்திற்கான தொடக்கம், அங்கு இருந்துதான் வந்தது. அதைத்தொடர்ந்து, பரோடா பள்ளி, கல்கத்தா பள்ளி, பம்பாய் பள்ளி என்று ஒவ்வொன்றாக வருகிறது. பல முற்போக்குக் கலைஞர்கள், பழைமையில் இருந்து வெளிவந்து, அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டு கலாப்பூர்வமாக நம் உணர்வுகளை நம் கீழைநாட்டு கலாசாரத்துடன் சேர்த்து வரைவது என்று இயங்க ஆரம்பித்தார்கள். அப்படி தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு கலைப்பள்ளி இருக்கிறது.

'ஸ்கூல் ஆஃப் ஆர்ட்'. அதனுடையத் தலைவராக டி.பி ராய் சௌத்ரி வருகிறார். அவர்தான் சென்னையில் நவீனத்திற்கு அச்சாணி போட்டது. அவருடைய மாணாக்கர் கே.சி.எஸ்.பணிக்கர்.‌ அவர் இரண்டு முக்கியமான பணிகளைச் செய்தார். ஒன்று, ‘வங்காள வகைமை’, ‘பம்பாய் வகைமை’, ‘கல்கத்தா வகைமை’ என்று இருப்பது போல் ‘மெட்ராஸ் வகைமை’ என்ற ஒன்றை உருவாக்கினார். இதில் தான் தனபால், ஜானகிராமன், மூக்கையா, அந்தோணி தாஸ், ராணி பூவையா, ராம் கோபால் வருகிறார்கள்.

இன்னொன்று தனபால் மற்றும் சிலரைக் கூட்டிக்கொண்டு அன்றைய முதல்வர் பக்தவத்சலத்தைச் சந்தித்துப் பேசி, சோழ மண்டல ஓவியர்கள் கிராமம் ஒன்றை உருவாக்கினார். இது உலகத்திலேயே ஓவியர்களுக்கான இரண்டாவது கிராமம்.‌ தென்கிழக்காசியவில் இது போன்று எங்கும் இல்லை. ஓவியர்களுக்கான கிராமம் என்று இந்தியாவிலேயே உருவானது இங்குதான்.

அதற்கு காரணம், கே.சி.எஸ்.பணிக்கர். இதன்மூலமாக ஆதிமூலம், பாஸ்கர், தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி போன்ற பல இளம் கலைஞர்கள் தோன்றினார்கள். அதன்பிறகு ட்ராஸ்கி மருது, சாம் அடைக்கலசாமி, வீர சந்தானம் என்று இன்னொரு குழு வளர்ந்தது” என்று தொடர்ந்து பேசியவர் பணிக்கர், சந்தான ராஜ், ஹீசைன் ஆகிய ஓவியர்கள் குறித்தும் அவர்கள்து ஓவியங்கள் குறித்தும் பேசினார்.

Van Gogh: ரூ.3,400-க்கு வாங்கிய ஓவியத்தின் மதிப்பு ரூ.130 கோடியா?

வீட்டிலிருந்த பழைய பொருள்களை விற்பனை செய்தவரிடம் குறைந்த விலைக்கு வாங்கிய ஓவியம் ஒன்று தற்போது அதிசயிக்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. 2016-ம் ஆண்டு, பழமையான பொருள்களை சேகரிக்கும் நபர், ஒரு வீட்டிலி... மேலும் பார்க்க

மிஷாவ்: ஒரு மனிதன், ஓர் இலக்கு - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 21

அமெரிக்க சமூகத்தில் இனப்பாகுபாட்டை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிராசையுடன் வாழ்க்கையைத் தொடங்கிய மில்லியன் கணக்கான கறுப்பர்களில் அவரும் ஒருவர்.கல்வியறிவில் நாட்டமில்லாமல், குற்றச் செயல... மேலும் பார்க்க

``வாசிப்பு ஒருவனின் வாழ்க்கையையே மாற்றி விடும்" - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை பகுதி - 20

ஒரு புத்தகம் - அதாவது, வாசிப்பு ஒருவனின் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்பது மால்கம் X அவர்களின் பிரபலமான முத்திரைச் சொல்.தேசிய நினைவு ஆஃப்ரிக்க புத்தகக் கடை கறுப்பர்களிடம் விடுதலை உணர்வையும், உரிமைகளை அ... மேலும் பார்க்க