``தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிற பாஜக-வை எமது மக்கள் எப்போதும் ஆதரிக்க மாட்டார்...
``நாங்க எவ்வளவு சொல்லியும் டிடிவி தினகரன் கேட்கல.!” - திமுகவில் இணைந்த மாணிக்கராஜா
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்தவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா. கடம்பூர் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரை, ”ராஜா”, “இளைய ஜமீன்தார்” என்றுதான் அழைப்பார்கள். அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டு கோலோச்சியவர். ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க-வில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின் செயலாளராக நியமிக்கப்பட்டார் மாணிக்கராஜா.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க-வில் சீட்டு ஒதுக்கீடு செய்வதற்கான நேர்காணலுக்கு மாணிக்கராஜா, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட மூன்று பேர் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டனர்.

மாணிக்கராஜாவும், ராஜூவும் ஒரே ஊர்க்காரர்கள்தான். ஆனால், நேர்காணலில் சீட் என்னவோ கடம்பூர் ராஜுவுக்குத்தான் கிடைத்தது. நேர்காணலின்போது முதல்வர் ஜெயலலிதா முன்பு மாணிக்கராஜா, தான் ஒரு ஜமீன்தார் என்பதை விட்டுக்கொடுக்காமல் உள்ளூரில் அரசியல் செய்யும் தனக்கே உரிய ராஜா தோரணையில் பேசியதும், வைப்பாறு மணல் கொள்ளையில் மறைந்த முன்னாள் தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளரும், தற்போதைய அமைச்சருமான கீதா ஜீவனின் தந்தை பெரியசாமியுடன் தொடர்பு இருப்பதாக கிளம்பிய ஆதாரத்துடனான புகாரும்தான் மாணிக்கராஜாவுக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் என்றனர் கட்சியினர்.
அதன் பிறகு கட்சியில் மாணிக்கராஜாவுக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் மோதல் போக்கு தொடர்ந்தது. அதிருப்தியிலேயே கட்சியில் தொடர்ந்த மாணிக்கராஜாவுக்கு கட்சியில் எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு உருவான அ.ம.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார் மாணிக்கராஜா. அ.ம.மு.க-வின் தேர்தல் பிரிவு செயலாளராகவும், தென் மண்டல அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் மாணிக்கராஜா. டி.டி.வி.தினகரனின் தென் மண்டலத் தளபதியாகவே திகழ்ந்தார். சசிகலாவின் கணவர் நடராஜன் காலத்தில் இருந்தே அக்குடும்பத்துக்கு நெருக்கமானவரும்கூட.

தென் மண்டலத்தில் உள்ள தேனி முதல் குமரி வரையிலான 10 மாவட்டங்களில் இவரது ஆலோசனையும், அனுமதியில்லாமல் கட்சியில் எந்த முடிவையும் எடுக்கமாட்டார் தினகரன். மாணிக்கராஜாவுக்கு தினகரன் அளிக்கும் முக்கியத்துவம் பிடிக்காமல் அ.ம.மு.கவில் பயணித்து வந்த தற்போதைய எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா உள்ளிட்ட பல தென் மாவட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினார்கள்.
இருப்பினும், அவர் மீதான மரியாதையையும் அவருக்கான முக்கியத்துவத்தையும் தினகரன் குறைக்கவில்லை. ”கட்சியை விட்டு யார் போனாலும் பரவாயில்லை. என்னுடைய உண்மையான தென்மண்டலத் தளபதி மாணிக்கராஜா மட்டும்தான்” என, நிர்வாகிகள் மத்தியில் வெளிப்படையாகவே பேசினார் தினகரன்.
தென் மாவட்டங்களில் தினகரன் வருகை புரிந்தால், காரில் தினகரன் அமரும் முன் இருக்கையில் மாணிக்கராஜா அமர்ந்திருக்க.., பின் இருக்கையில் அமர்ந்து தொண்டர்களைப் பார்த்தபடியே கையசைத்து வலம் வருவார் தினகரன். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மாணிக்கராஜாவிற்கும், தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்துதான் தி.மு.கவில் இணையும் முடிவிற்கு வந்தாராம் மாணிக்கராஜா. அவர் தி.மு.கவில் இணையப் போகும் தவலறிந்த தினகரன், அ.ம.மு.கவின் கட்சியை விட்டு நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். அவருடன் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களும் இணைந்தனர்.

தி.மு.கவில் இணைந்ததற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், “தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவில் இணைந்துள்ளோம். அ.ம.மு.க எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்போது கடந்த 8 ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்த அக்கட்சியை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார் தினகரன்.
பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவில் இணைந்துள்ளோம். என்னுடன் 3 மாவட்டச் செயலாளர்கள் இணைந்துள்ளனர். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அ.ம.மு.க உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியுள்ளோம்” என்றார்.

















