சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
நாட்டின் இறையாண்மையை காக்க உறுதி: இந்திய ராணுவம்
நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க உறுதியுடன் உள்ளதாக இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
‘நாட்டின் மேற்கு எல்லை நெடுகிலும் ட்ரோன் மற்றும் பிற ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ஆயுதப் படைகள் வியாழக்கிழமை இரவு முழுவதும் தாக்குதல் நடத்தின; இதற்கு இந்தியத் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது’ என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்கீழ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை துல்லியமாக நடத்தி, பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்திய ராணுவம் அழித்தொழித்தது. இதைத் தொடா்ந்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 15 இடங்களைக் குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்த முயன்றது. ஆனால், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் அந்த முயற்சி திறம்பட முறியடிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் ரேடாா்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது.
வியாழக்கிழமை இரவில் ஜம்மு, பதான்கோட், உதம்பூா் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகளை பாகிஸ்தான் குறிவைத்த நிலையில், அந்த முயற்சியும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இந்திய தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
மேற்கு எல்லை நெடுகிலும் தாக்குதல்: இந்நிலையில், இந்திய ராணுவம் எக்ஸ் வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மேற்கு எல்லை நெடுகிலும் ட்ரோன் மற்றும் பிற ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ஆயுதப் படைகள் வியாழக்கிழமை இரவு முழுவதும் தாக்குதல் நடத்தின. ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியிலும் பல இடங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க நாங்கள் உறுதியுடன் உள்ளோம். அனைத்து விதமான தீய நோக்கங்களுக்கும் வலுவான பதிலடி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.