T20 World Cup: 20 அணிகள்; இந்தியாவில் 5 மைதானங்கள்; ஜியோ ஸ்டார் ஒளிபரப்பு - உலகக...
'நான் சரண்டர் ஆவதா' கொதிக்கும் ராமதாஸ் டு திமுக-வுக்குத் தாவும் அதிமுக மாஜி மாண்புமிகு! | கழுகார்
தேர்தல் நெருங்க நெருங்க, 'என்ன செய்யப் போகிறோம்?' என்ற கேள்வி ராமதாஸ் தரப்பினருக்கு ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வி.சி.க-வின் தலையீட்டால், ராமதாஸுக்கு எந்த பதிலும் சொல்லாமல் இழுத்தடிக்கிறதாம் அறிவாலயம்.
இதனால், நாம் தமிழர் கட்சியை அணுகியிருக்கிறார்கள் தைலாபுரத்துவாசிகள். எதற்கு அடிபோடுகிறார்கள் என்பதை புரிந்துகொண்ட நா.த.க-வினர், 'வரும் பிப்ரவரி 21-ம் தேதி எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்துக்குக் கிளம்புகிறோம்.

தி.மு.க கூட்டணிக்கு ஐயா போனால்தான் சரியாக இருக்கும்...' என்று நாசுக்காக 'நோ' சொல்லிவிட்டார்களாம். த.வெ.க-வும் கதவை சாத்திவிட்ட சூழலில், 'சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழலாம்' என்று முடிவெடுத்து, எடப்பாடி ரூட்டில் அன்புமணியை கன்வின்ஸ் செய்ய முயற்சி செய்கிறார்களாம் தோட்டத்தில் இருப்பவர்கள்.
ஆனால், 'அன்புமணியிடம் நான் சரண்டர் ஆவதா... அதற்கு தனியாகவே போட்டியிடலாமே...' என்று கொதித்துப் பேசுகிறாராம் பெரியவர் ராமதாஸ்.
அடுத்தடுத்த டெல்லி படையெடுப்புகளுக்குப் பிறகும்கூட, சூரிய கட்சிக்கும், கதர்க் கட்சிக்கும் இடையே சுமுகமான உறவுநிலை இதுவரை உருவாகவில்லை.
இந்தச் சூழலில், சிட்டிங் கதர் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலர் மீது பவனுக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம் சூரியக் கட்சி. அதில், 'எம்.எல்.ஏ-வாக இருக்கும் 11 கதர் புள்ளிகளின் செயல்பாடுகள் படுமோசமாக இருக்கின்றன.
அவர்களை மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வைத்தால், வெற்றிக்கு வாய்ப்பில்லை. அவர்களுக்கு சீட் கொடுப்பதாக இருந்தால், வேறு தொகுதியில் போட்டியிடச் சொல்லுங்கள்' என்று கூறப்பட்டுள்ளதாம்.
கூட்டணி அமைவதற்கு முன்பாக கண்டிஷன்கள் பறந்து வந்திருப்பதால், சம்பந்தப்பட்ட அந்த 11 எம்.எல்.ஏ-க்களும் பொருமலில் இருக்கிறார்கள். ''டெல்லி வரைக்கும் போய் இந்தக் கூட்டணி தொடரணும்னு மேலிடத்துக்கிட்ட நாங்க பேசினதுக்கு நல்லா நன்றிக்கடன் செய்திருக்காங்க'' என்று புலம்புகிறார்கள் அவர்களில் சிலர்.
"திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில், சிட்டிங் எம்.எல்.ஏ-வாக தி.மு.க-வைச் சேர்ந்த காந்திராஜன் இருக்கிறார். அமைச்சர் ஐ.பெரியசாமியின் தீவிர ஆதரவாளரான காந்திராஜன், அமைச்சரின் சிபாரிசில் மீண்டும் அதே தொகுதியில் களமிறங்க தீவிரமாகியிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பாக, திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துணை முதல்வர் உதயநிதி வந்தபோது, அவரது காலில் விழுந்து அதிர்ச்சியைக் கிளப்பினார் காந்திராஜன். 'துணை சபாநாயகராக இருந்தவர் இப்படியெல்லாம் செய்யலாமா... ஒரு சீட்டுக்காக இப்படி இறங்கிவிட்டாரே காந்திராஜன்' என்று கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்தன.

இந்தச்சூழலில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான வீரா சாமிநாதனும், அமைச்சர் சக்கரபாணியின் ஆதரவில் வேடசந்தூர் பேரூர் செயலாளர் கார்த்திகேயனும், வேடசந்தூர் சீட்டுக்காக குட்டிக்கரணம் போடுகிறார்களாம். தங்களுடைய ஆதரவாளருக்கு சீட் பெற்றுத்தர ஐ.பெரியசாமி, செந்தில்பாலாஜி, சக்கரபாணி என்று மூன்று பேருமே முட்டி மோதுவதால், வேடசந்தூரில் அனல் பறக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான நிலோஃபர், தி.மு.க-வில் இணையவுள்ளதாக மாவட்டம் முழுக்க பரபரப்பு நிலவுகிறது.
வரும் பிப்.14-ம் தேதி, தி.மு.க வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 47 தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வரவுள்ள துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் நிலோஃபர் தி.மு.க-வில் இணையத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.

இந்தச்சூழலில், நிலோபரை கட்சியில் இணைப்பதற்கு தி.மு.க-வினர் சில கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம். ஏலகிரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், நிலோபருக்கு எதிராக 'ஜோதி' மாவட்ட மாண்புமிகுவிடம் நிர்வாகிகள் சிலர் கொதித்துப் பேசியிருக்கிறார்கள். 'நிலோஃபருக்கு பெரியளவில் லோக்கல் செல்வாக்கு இல்லையென்றாலும், அவர் முன்னாள் மாண்புமிகு. அவரைக் கட்சியில் இணைப்பது சரியே...' என்று எதிர்ப்பாளர்களை அடக்கிவிட்டாராம் 'ஜோதி' மாவட்ட மாண்புமிகு.
வேலூரில், வரும் பிப் 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக, வேலூர் அடுத்துள்ள அகரம் சேரியில் பிரமாண்ட வெளிப்புற மைதானம் தேர்வு செய்யப்பட்டு, மளமளவென வேலைகளும் நடந்தன.
இந்தச்சூழலில், விஜய்யின் வேலூர் விசிட்டுக்கான தேதி மாறியிருக்கிறதாம். 'வரும் பிப்.14-ம் தேதி, ஜோலார்பேட்டை பொன்னேரியில் நடைபெறும் தி.மு.க கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

மண்டலத்திலுள்ள காவலர்கள் பெரும்பகுதியை முதல்வரின் நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்காக அனுப்பவிருக்கிறார்கள். இதனால், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் விஜய்யின் நிகழ்ச்சிக்கு ஒப்புதல் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.
தவிர, 'தி.மு.க நிகழ்ச்சிக்குப் பிறகு நமது நிகழ்ச்சி நடைபெற்றால், அதுவே பேசுபொருளாகும்' என்று திட்டம் போடுகிறது த.வெ.க மேலிடம். பிப்ரவரி மூன்றாவது வாரத்தில், 21-ம் தேதி சனிக்கிழமை அல்லது 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் விஜய்யின் வேலூர் விசிட் இருக்கலாம்' என்கிறார்கள் த.வெ.க-வின் சீனியர் நிர்வாகிகள்."












