'80 ஏக்கரில் திடல், 5 லட்சம் பேர் டார்கெட்; வேட்பாளர்கள் அறிமுகம்'- NTK மாநாடும்...
அவைக்கு வராத பிரதமர் மோடி: `எங்களிடம் எதைப்பார்த்து பயப்படுகிறீர்கள்?' - பிரியாங்கா காந்தி கேள்வி!
இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி நரவனே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதில் தொடங்கியது பிரச்னை. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி-கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டதாக புகார் எழுந்திருக்கிறது.
நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்ற பிரதமர் மோடி அவைக்கு வந்திருந்தார். அவையில் நடந்த அமளியால், பிரதமர் மோடி உரை நிகழ்த்தாமல் சென்றுவிட்டார்.
இது தொடர்பாக விளக்கமளித்த சபாநாயகர் ஓம்.பிர்லா, ``காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கையை அடைந்து எதிர்பாராத ஏதோ ஒன்றைச் செய்யலாம் என்று எனக்கு உறுதியான தகவல் கிடைத்தது. இதைத் தவிர்க்கவே, பிரதமரைச் சபைக்கு வருவதைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக்கொண்டேன்" எனக் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து உரையாற்றிய ஜே.பி.நட்டா, `` எதிர்க்கட்சிகள் அவையைச் செயல்பட அனுமதிக்கவில்லை. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்ற குற்றச்சாட்டை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதை நீங்கள் கட்சிக்குள்ளும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில், விஷயங்கள் ஜனநாயக முறையில் செய்யப்பட வேண்டும். ஒரு அனுபவமற்ற குழந்தையின் கையில் கட்சியைப் பணயக்கைதியாக விடாதீர்கள்." என்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பிரியாங்கா காந்தி, ``எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் பிரச்சினைகளை அரசாங்கம் தவிர்க்கிறதா?... ராகுல் காந்தியை இந்த அவையில் பேச அனுமதிக்க வேண்டும். எதைப் பார்த்து பயப்படுகிறீர்கள்? அவர் ஒரு புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுவார் என்று பயப்படுகிறீர்களா? அல்லது எப்ஸ்டீன் கோப்புகளைப் பார்த்து பயப்படுகிறீர்களா? அல்லது விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் இந்தியா-அமெரிக்க ஒப்பந்தம் குறித்து நாங்கள் கேள்வி எழுப்புவோம் என்று பயப்படுகிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.











