T20 World Cup: 20 அணிகள்; இந்தியாவில் 5 மைதானங்கள்; ஜியோ ஸ்டார் ஒளிபரப்பு - உலகக...
புதுச்சேரி: `மது போதை’ நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு - விலக்கி வைக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்
புதுச்சேரி கிராமப்புற மதுக்கடை ஒன்றில் இளைஞர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சி.சி.டி.வி காட்சி, பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சுமார் இரண்டு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் ஒரு இளைஞருடன் மூன்று பேர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.
அதற்கடுத்த ஒருசில விநாடிகளில் அந்த மூன்று பேரும், அந்த இளைஞரை சரமாரியாகத் தாக்குகிறார்கள். அதில் நிலைகுலைந்து அந்த இளைஞர் கீழே விழுந்தபிறகு, அவரது முகத்திலும் கழுத்திலும் குரூரமாக ஒருவர் தாக்குகிறார்.
அதையடுத்து மற்றவர்கள் அவரை சமாதானம் செய்கிறார்கள். அதேசமயம் கீழே விழுந்த இளைஞரிடம் இருந்து எந்தவித அசைவும் இல்லை.

`புதுச்சேரி மதுக்கடையில் இளைஞர் அடித்துக் கொலை' என செய்தியுடன் சமூக வலைத்தளங்களில் வைரலான இந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் பதறித்தான் போனார்கள்.
கீழே விழுந்து கிடந்த இளைஞர் மீது தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சித்த மதுக்கடை ஊழியர்கள், அவர் உயிரிழந்தது தெரிந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் கோரிமேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட போலீஸாருடன் அங்கு சென்ற சீனியர் எஸ்.பி கலைவாணன், சடலமாகக் கிடந்த இளைஞரை மீட்டு உடற்கூராய்வு சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அந்தப் பகுதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை செய்யப்பட்டது இடையஞ்சாவடியைச் சேர்ந்த வினோத் என்பதும், கொலை செய்தது ஆலங்குப்பம் துருவை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சஞ்ஜெய், ஹரி மற்றும் ஜானகிராமன் என்பது தெரியவந்தது.
அதேசமயம் ஹரி தப்பிவிட, மற்ற மூவரையும் கைது செய்திருக்கின்றனர் போலீஸார். இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய கோரிமேடு காவல் நிலைய விசாரணை அதிகாரிகள், ``கார்த்திகேயன், சஞ்ஜெய், ஹரி, ஜானகிராமன் நான்கு பேரும் தமிழகப் பகுதியான துருவை கிராமத்தைச் சேர்ந்த ரௌடிகள்.

சம்பவம் நடந்த அன்று சரக்கடித்த போதையில் இருந்த அந்த நான்கு பேருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது மதுக்கடைக்கு வந்த வினோத், `நீங்க எல்லாரும் ஃபிரண்ட்ஸ்தானே… அப்புறம் ஏன் உங்களுக்குள் சண்டை போட்டுக்கறீங்க…' என்று கேட்டுவிட்டு மதுக்கடைக்குள் சென்றார்.
அதில் கோபமடைந்த அந்த நான்கு பேரும் வினோத்தை பின்தொடர்ந்து வந்து, `நாங்க சண்டை போட்டுக்கிட்டா உனக்கென்ன ?' என்று கேட்டு சரமாரியாக அடித்திருக்கிறார்கள்.
அதில் கீழே விழுந்த வினோத்தின் கழுத்திலேயே கார்த்திகேயன் மூர்க்கமாக தாக்கினான். அதில்தான் வினோத் உயிரிழந்துவிட்டார். தலைமறைவாக இருக்கும் ஹரியை தேடி வருகிறோம்" என்றனர்.















