மதுரை மீனாட்சியம்மன் தேர் திருவிழா: அம்மனாகவும் கருப்பசாமியாகவும் வந்த குழந்தைகள...
நாமக்கல்: "எங்க போதமலை மக்களுக்கு இப்ப தான் சுதந்திரம் கிடைச்சுருக்கு.!" - ஒரு மண் சாலையின் கதை!
"திகில் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியில் 75 ஆண்டுளாக தலைச்சுமையாக எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் முதன் முறையாக வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது.
``புதுசா அமைக்கப்பட்டுள்ள மண் ரோட்டால் விமோசனம் அடைந்தது மக்கள் மட்டுமல்ல, அதிகாரிகளும் தான்" என்கிறார்கள் போதமலையைச் சேர்ந்த மலைவாழ் மக்கள்.

75 ஆண்டு கால கோரிக்கை சாத்தியமானது எப்படி?
மலைவாழ் மக்களிடம் கேட்ட போது,
"நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி, வெண்ணந்தூர் ஒன்றியம், கீழூர் ஊராட்சிக்கு உட்பட்டது தான் போதமலை. இங்கு கீழூர், மேலூர் மற்றும் கெடமலை ஆகிய 3 மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் ஒற்றையடி பாதையில் தான் மக்கள் எல்லாரும் சென்று வந்தோம். உயிர் போகும் அவசரமாக இருந்தாலும் கூட 7 கிலோ மீட்டர் ஒற்றையடி பாதையில் தான் சென்றாக வேண்டும். சாலை வசதி கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்தும் எந்த பயனுமில்லை.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுளாகியும் இப்பகுதிக்கு சாலை வசதி இல்லாததால் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப் பதிவு எந்திரங்கள் மற்றும் இதர தேர்தல் பொருட்களை அதிகாரிகள், மலைவாழ் மக்களின் உதவியுடன் தலைச்சுமையாக எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்து வந்தது. அடர்ந்த காடு ஒற்றையடி பாதை 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து செல்லும் அதிகாரிகள் திக்... திக்... என அச்சத்துடன் வந்து செல்வார்கள்.

சாலை வசதியில்லாமல் நாங்கள் படும் சிரமம் என்ன என்பதை 5 வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் நடத்த வரும் அதிகாரிகளுக்கு தெரியும். அன்று ஒரு நாள் மட்டும் வந்து போகும் அதிகாரிகள் அனுதாபத்தை கூறிச் செல்வார்கள் அவ்வளவுதான்.
இந்த நிலையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் ரூ.140 கோடியில் போதமலைக்கு மண் சாலை அமைக்கப்பட்டதன் எதிரொலியாக, தற்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் கார் மூலம் சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. கீழூர் மற்றும் மேலூர் கிராமத்தில் 827 வாக்காளர்களும், கெடமலையில் 281 வாக்காளர்களும் என போதமலையில் மொத்தம் 1,108 வாக்காளர்கள் உள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கீழூரில் ஒரு வாக்குச் சாவடியும், கெடமலையில் ஒரு வாக்குச் சாவடியும் என 2 வாக்குச் சாவடிகள் போதமலையில் அமைக்கப்பட்டு இருந்தது . மேலும் கீழூர் வாக்குச்சாவடியில் மண்டல அலுவலர் கார்த்திக் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினரும், கெடமலை வாக்குச்சாவடியில் மண்டல அலுவலர் மனோகரன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினரும் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

போதமலையில் உள்ள கீழூர் வாக்குச்சாவடிக்கு மண்டல அலுவலர் கார்த்திக் தலைமையிலான குழுவினரும், கெடமலை வாக்குச்சாவடிமண்டல அலுவலர் மனோகரன் தலைமையிலான குழுவினர் தனித்தனி கார்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபேட் கருவிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் உள்பட தேர்தலுக்கு தேவையான பல்வேறு பொருட்களை கொண்டு சென்று வாக்குப் பதிவை நடத்தி சென்றனர். சாலை வசதி இல்லாததால் இதுவரை பலர் ஓட்டுப் போட வரமாட்டார்கள். எப்போதும் 60 முதல் 65 சதவீதம் தான் வாக்கு பதிவாகும். தற்போது சாலை அமைக்கப் பட்டதால் 80 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வாக்கு பதிவு நடக்கும்" என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் போதமலை மலைவாழ் மக்கள்.
















