Arasan: வேகமெடுக்கும் 2வது கட்ட ஷூட்டிங்; 2 ஹீரோயின்கள்; சிலம்பரசனின் புது Getup...
நாயுடன் நடைபயிற்சி; விளையாட்டு வீரர்களை வெளியேற்றிய ஐ.ஏ.எஸ், டெல்லி மாநகராட்சி கமிஷனராக நியமனம்!
டெல்லி மாநகராட்சிக்கு புதிய கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இதற்கு முன்பு டெல்லியில் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளராக இருந்தபோது, நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார். 2022-ம் ஆண்டு தினமும் மாலையில் அங்குள்ள தியாகராஜ் மைதானத்தில் தனது நாயுடன் சஞ்சீவ் கிர்வார் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். சஞ்சீவ் நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக மைதானத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு இருந்த தடகள வீரர்கள் அனைவரையும் மாலை 7 மணிக்கே மைதானத்தை விட்டு வெளியேறும் படி கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தடகள வீரர்கள் வழக்கமாக இரவு 8.30 மணி வரை விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக மாலை 7 மணிக்கே எங்களை மைதானத்தை விட்டு வெளியேறும்படி கூறினர் என்று பயிற்சியாளர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

ஆனால் இக்குற்றச்சாட்டை மறுத்த சஞ்சீவ், சில நேரம் நாயுடன் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். ஆனால் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தடகள வீரர்களுக்கு எந்த வித இடையூறும் செய்தது கிடையாது என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து அப்போது முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களும் விளையாட்டு வீரர்களுக்காக இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவித்தார். இந்த நாய் சர்ச்சையை தொடர்ந்து சஞ்சீவ் கிர்வாரை மத்திய உள்துறை அமைச்சகம் லடாக்கிற்கு இடமாற்றம் செய்தது. தற்போது டெல்லியில் பா.ஜ.க அரசு பதவியேற்றுள்ள நிலையில் சஞ்சீவ் கிர்வார் டெல்லி மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது டெல்லி மாநகராட்சி கமிஷனராக இருக்கும் அஸ்வனிகுமார் ஜம்மு காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.













