Cloudflare என்பது என்ன? X, Chatgpt, Gemini முடக்கத்துக்கு இதுதான் காரணமா?
படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள்; சடலங்கள் மீது நடப்பட்ட காலிஃபிளவர்; 36 வருட ரத்த வரலாறு என்ன?
பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலானது ராஷ்ட்ரீய ஜனதா தளம் + காங்கிரஸ் கூட்டணிக்குப் படுதோல்வியைப் பரிசளித்திருக்கிறது.
மகாபந்தன் கூட்டணி இந்தத் தேர்தலில் வெறும் 35 இடங்களை மட்டுமே வென்றிருக்கிறது. மறுபக்கம் ஐக்கிய ஜனதா தளம் + பா.ஜ.க கூட்டணி 202 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது.
இதில், 2020 சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கி ஒரு இடத்தில் மட்டுமே வென்ற பீகாரின் வளர்ந்து வரும் இளம் அரசியல் முகம் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று 19 இடங்களை வென்று சட்டமன்றத்தில் 4-வது மிகப்பெரிய கட்சியாக உயர்ந்திருக்கிறது.

அதேபோல், இந்த இரு கூட்டணிகளிலும் சேராமல் தனிக் கூட்டணி அமைத்துக் களமிறங்கிய ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி, 2020 சட்டமன்றத் தேர்தலைப் போலவே 5 இடங்களில் வென்றிருக்கிறது.
வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை என்றாலும் 2020 தேர்தலை விடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வாக்குகளைப் பெற்றிருக்கிறது AIMIM. 2020-ல் 5,23,279 வாக்குகள் பெற்ற AIMIM இந்தத் தேர்தலில் 9,30,504 வாக்குகள் பெற்றிருக்கிறது.
சிறுபான்மையினர் மீது வெறுப்பை உமிழும் பாஜக அமைச்சர்!
பீகார் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பிரதமர் மோடி, ``சில கட்சிகள் `MY' ஃபார்முலாவை உருவாக்கின. இன்றைய வெற்றி மகிளா (பெண்கள்) - யூத் (இளைஞர்கள்) என்ற புதிய `MY' வழங்கியிருக்கிறது" என்று எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசியிருந்தார்.
மறைமுகமாக, முஸ்லீம் (M), யாதவ் (Y) என மோடி குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகப் பேசிவரும் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அசோக் சிங்கால், பீகார் வெற்றி தொடர்பாகப் பதிவிட்டிருக்கும் ட்வீட் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையன்று அசோக் சிங்கால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் காலிஃபிளவர் விவசாய வயல் புகைப்படத்தைப் பதிவிட்டு, ``காலிஃபிளவர் விவசாயத்துக்கு பீகார் அனுமதி தந்துவிட்டது" என்று எழுதி, பீகாரில் இஸ்லாமியர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட 1989 பாகல்பூர் மதக் கலவரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார்.
மாநில அமைச்சராக மத நல்லிணக்கத்தைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் பொதுவெளியில் வெளிப்படையாக சிறுபான்மையினருக்கு எதிராக இவ்வாறு ட்வீட் போட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மதச்சார்பற்ற இந்தியாவின் வரலாற்றில் ஓர் இருண்ட பக்கம், 1992-ல் வலதுசாரி குழுக்கள் செய்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம்.
இந்துக்களால் கடவுளாக வழிபடப்படும் ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கிறது, அதை மீட்டு ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என 1990-ல் விஷ்வ இந்து பரிஷத் (VHP), ஆர்.எஸ்.எஸ் (RSS), பா.ஜ.க (BJP) உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளால் எல்.கே. அத்வானி தலைமையில் ராம் ஜென்ம பூமி ரத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
அந்த யாத்திரையின் முடிவில் கலவரம் ஏற்பட்டு, இந்தியாவின் வரலாற்றுச் சின்னமாக இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
அந்தக் கலவரத்தில் ஆயிரக்கணக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.

ராம் ஜென்ம பூமி யாத்திரை தொடங்கப்படுவதற்கு முந்தைய ஆண்டுதான் பீகாரின் பாகல்பூரில் இந்த மதக் கலவரம் நடந்தேறியது.
1989 ஆகஸ்ட்டில் இந்துக்களின் பிஷாரி பூஜா பண்டிகையும், முஸ்லிம்களின் மொஹரம் பண்டிகையும் ஒரே மாதத்தில் வரவே அம்மாதம் முதலே பாகல்பூர் மாவட்டத்தில் வகுப்புவாத வன்முறை பதட்டங்கள் தொற்றிக்கொண்டன.
People’s Union of Civil Liberties (PUCL) அறிக்கையின்படி ஆகஸ்ட் 12 முதல் 22 ஆகஸ்ட் வரை அந்த மாவட்டத்தில் பதட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்தப் பதட்டமான சூழலில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட செங்கற்களைத் திரட்டும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் `ராம்ஷிலா' செயல்திட்டத்தின் ஒருபகுதியாக அக்டோபரில் பாகல்பூர் ஊர்வலம் நடந்தது.
கலவரத்துக்குக் காரணமாக அமைந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலமும், வதந்திகளும்!
அந்த ஊர்வலத்தின்போது அக்டோபர் 24-ம் தேதி மதக் கலவரம் வெடித்தது. குறிப்பாக பாகல்பூரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் டாடர்பூர் பகுதி வழியாக ராம்ஷிலா ஊர்வலம் சென்றபோது எழுப்பப்பட்ட மத ரீதியிலான கோஷங்களால் இரு வகுப்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதற்கு மத்தியில், விடுதிகளில் தங்கியிருக்கும் இந்து மாணவர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டதாகவும், அதேபோல் முஸ்லிம் மாணவர்கள் கொல்லப்பட்டு உடல்கள் சமஸ்கிருத கல்லூரியில் வீசப்பட்டிருப்பதாகவும் இரண்டு வதந்திகள் பரவின.

இதனால் இந்து - முஸ்லிம் இடையே மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது. மாதக் கணக்கில் நீடித்த இந்தக் கலவரமானது பாகல்பூர் மாவட்டத்தின் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவியது.
கலவரத்தின்போது ஜமுனா கோத்தி என்ற கட்டத்தில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்களில் 18 பேர் கலவரக் கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
அதேபோல், சந்தேரி கிராமத்தில் சுமார் 60 முஸ்லிம்கள் கலவரக் கும்பலால் கொல்லப்பட்டு உடல்கள் குளத்தில் வீசப்பட்டிருந்தன.
இவையனைத்துக்குப் மேலாக லோகெய்ன் கிராமத்தில் கலவரக்காரர்களால் நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, ஆதாரங்களை மறைப்பதற்காக உடல்கள் விவசாய நிலங்களில் புதைக்கப்பட்டு அவற்றின் மீது காலிஃபிளவர் செடி நடப்பட்டன.
PUCL-ன் அறிக்கையின்படி, லோகெய்ன் கிராமத்தில் 116 முஸ்லிம்கள் உடல்கள் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டு அவற்றின்மீது காலிஃபிளவர் நடப்பட்டன.
மொத்தமாக இந்தப் பாகல்பூர் கலவரத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள்.

பின்னர் இந்தக் கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 1995-ல் அந்த ஆணையத்தின் அறிக்கையில், ``1989 அக்டோபர் 24-ம் தேதியும், அந்தத் தேதிக்கு முன்பும் பின்பும் நடந்த கலவரத்துக்கு பாகல்பூர் காவல் கண்காணிப்பாளராக இருந்த திவேதியை நாங்கள் முழுமையாகப் பொறுப்பேற்கச் செய்வோம்.
முஸ்லிம்களைக் கைது செய்த விதத்திலும், அவர்களைப் பாதுகாக்கப் போதுமான உதவியை வழங்காததன் மூலமும் அவரது வகுப்புவாத சார்பு முழுமையாக வெளிப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மிகவும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த விசாரணையில் ஒருவழியாக, லோகெய்னில் 116 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு 14 பேருக்கு 2007-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வாறிருக்க, லோகெய்ன் கிராமத்தில் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான வன்முறையைக் குறிப்பிடும் வகையில் அஸ்ஸாம் அமைச்சர் அசோக் சிங்கால், ``காலிஃபிளவர் விவசாயத்துக்கு பீகார் அனுமதி தந்துவிட்டது" என வன்முறையைத் தூண்டும் வகையில் ட்வீட் செய்திருக்கிறார்.
பாஜக அமைச்சர் மீதான எதிர்வினை!
பா.ஜ.க அமைச்சரின் இத்தகைய செயலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகாய் எதிர்வினையாற்றியிருக்கிறார்.
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கௌரவ் கோகாய், ``பீகார் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அஸ்ஸாம் அமைச்சர் காலிஃபிளவர் விவசாய படங்களைப் பயன்படுத்துவது அரசியல் புதிய கீழ்த்தரத்தைக் காட்டுகிறது.
இது மிகவும் வெட்கக்கேடானது. இந்த மனநிலையை அவரின் முதல்வர் (ஹிமந்தா பிஷ்வா சர்மா) ஊக்குவிக்கிறார். அந்த முதல்வர் இந்தியச் சிறுபான்மையினர் மீது வெறுப்பைக் கொண்டுள்ளார்" என்று கௌரவ் கோகாய் பதிவிட்டிருந்தார்.

அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே அசோக் சிங்காலின் பதிவைக் குறிப்பிட்டு, ``இது 1989-ல் பாகல்பூரில் கொத்துக் கொத்தாக முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதாக இருக்கிறது.
இதைப் பதிவிட்டது யாரோ ஒருவர் அல்ல, பிரதமர் மோடியின் பா.ஜ.க அமைச்சர். இதைப் பதிவிட பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று பதிவிட்டிருக்கிறார்.
ஆனால், இந்தச் சர்ச்சையில் எதிர்க்கட்சிகளின் எதிர்வினைக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து எந்தவொரு மறுப்பும் வெளிவரவில்லை, எதிர்க்கட்சிகளும் தங்களின் கண்டனங்களை இன்னும் வலுவாக முன்வைக்கவில்லை.













