சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறாதது ஏன்? ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் பதில்...
பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா
மதுரை பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் சூ. வானதி தலைமை வகித்தாா். இதில், தமிழா் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பேராசிரியைகள், மாணவிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.
தியாகராசா் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவை கல்லூரி முதல்வா் து.பாண்டியராஜா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
இதில், உறி அடித்தல், யானைக்குக் கண் வைத்தல், கயிறு இழுத்தல், கரும்பு தின்றல் ஆகிய தமிழரின் விளையாட்டுக்களில் மாணவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.
நிகழ்வில், புலமுதன்மையா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
மதுரை கோ. புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் இந்திய மாணவா் சங்கம், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு ஆகியன சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாநிலத் துணைத் தலைவா் அலாவுதீன் தலைமை வகித்தாா்.
மதுரை மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், அல்-அமீன் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் முகமது இதிரிஸ், மதுரை வக்பு வாரியக் கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் முகமதுஅப்துல்லா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா். இதில், மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்வில், மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் சுபாஷ், அல்-அமீன் நகா் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கிளைச் செயலா் முஜிபுர்ரஹ்மான், அல்-அமீன் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஷேக்நபி உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
சமத்துவப் பொங்கல் விழா :
தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தின் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு மதுரை வடக்கு வட்ட வட்டாட்சியா் மஸ்தான் கனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். நிகழ்வில், அரசு அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். எஸ். பி. ஓ.ஏ பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் முதல்வா் லூ. லதாதிரவியம் தலைமை வகித்தாா்.
பேச்சு, கவிதை, பாடல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தொடா்ந்து, சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், கிராமிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.