Rewind 2025: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் டு 40 ஆண்டுக்கால கேமரூன் அதிபர்| உலக ந...
”பாதுகாப்பு இல்லாத வனப்பகுதியில் செல்ல வேண்டாம்” – ஐயப்ப பக்தர்களுக்கு போலீஸார் எச்சரிக்கை!
கேரள மாநிலம், பத்தினம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி நாடுமுழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை புரிகிறார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்தை முன்னிட்டு கடந்த மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கடந்த 27-ம் தேதி மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நேற்று (30-ம் தேதி) மீண்டும் நடை திறக்கப்பட்டது. ஐயப்ப பக்தர்கள் இருமுடிகளுடன் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். சபரிமலைக்கு தமிழகத்தில் இருந்து கோவை, தேனி மற்றும் தென்காசியில் இருந்து வாகனங்களில் சென்று வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் வழியாக வாகனங்களில் வருபவர்கள் செங்கோட்டை, புளியரை, தென்மலை, புனலூர், பத்மநாதபுரம், கோணி, நிலக்கல் வழியாக பம்பை வந்து அங்கிருந்து மலை ஏறிச் செல்வார்கள். இந்த வழக்கமான வழிகளைத் தவிர்த்து ஆபத்தான காட்டுப்பதைகள் வழியாக பக்தர்கள் சபரிமலைக்கு நடந்து வருகின்றனர். இதில், வனவிலங்குள் நடமாட்டம் உட்பட பல்வேறு ஆபத்துகள் நிறைந்து இருப்பதால் இப்பகுதிகள் வழியாக செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

குறிப்பாக, பண்பொழி, மேக்கரை, அச்சன்கோயில், பாறகுளம், கோணி வழியாக பெரும்பாலான பக்தர்கள் நடந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் இந்தப்பாதைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த 24 பேர் அடங்கிய ஐயப்ப பக்தர்கள் குழுவினர், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள அச்சன்கோயில் வழியாக சபரிமலைக்கு நடந்து சென்றுள்ளனர்.
அச்சன்சோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு அடர்ந்த காட்டுப்பாதை வழியாக நடந்து சென்றுள்ளனர். இடையில் வழிதெரியாமல் வன விலங்குகள் நடமாட்டம் உள்ள காட்டுக்குள் சிக்கிக் கொண்டனர். அங்கு செல்போன் சிக்னலும் கிடைக்காததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து உயரமான பாறையில் ஏறிய போது சிக்னல் கிடைத்துள்ளது. இதையடுத்து வனத்துறையினரை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர்.

கேரள மாநில போலீஸாரும், வனத்துறையினரும் நீண்ட தேடலுக்குப் பிறகு அவர்களை மீட்டு ஒரு வேனில் சபரிமலைக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். எனவே, பாதுகாப்பு இல்லாத வனப்பகுதியில் பக்தர்கள் செல்ல வேண்டாம் எனவும் இரு மாநில போலீஸாரும், வனத்துறையினரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.











.jpeg)








