வெள்ளை அறிக்கை: "பணி நியமனம், பணி உயர்வு குறித்த விவரங்களை தவெக அரசு மறைப்பது ஏன...
பிரிட்டனில் ஒரு கால்… ஜெர்மனியில் ஒரு கால்! | உளவன் - 02
ஜெர்மன் தலைநகர் பெர்லின் நகர் பனியில் உறைந்து விரைத்தது. உச்சக்கட்டத்தில் இரண்டாம் உலகப் போர். நாஜி ஜெர்மனிக்கு வசந்தத்தைக் கொண்டு வந்தது 1943 புத்தாண்டு. ஃபியூரர் ஹிட்லருக்கு மகிழ்ச்சியான போர்ச் செய்தியை வழங்கினர் ராணுவ உயர் அதிகாரிகள். அந்த உற்சாகத்தில் அவர்கள் மிடுக்கித் திரிந்தனர்.
1943 ஜனவரி 22-ம் தேதி அப்வேர் உளவுத்துறை வரலாற்றில் கோலாகலமான நாள். குளிரின் சுவடே இல்லாமல் பரபரப்புச் சூட்டில் தகித்தது உளவுத்துறை தலைமை அலுவலகம் அப்வேர் (Abwehr). காற்றில் முழங்கிக் கொண்டிருந்தது ஜெர்மன் ராணுவ இசைக் குழுவின் வெற்றி முரசு.
அப்வேர் தலைமை அதிகாரி ஜெனரல் எர்ன்ஸ்ட் கல்டன்பிரூன் (General Ernst Kaltenbrunner), அப்வேரின் பிரிட்டிஷ் உளவுப் பிரிவு தலைவர் கார்ட் டாக்கே உள்ளிட்டோர், ஏஜெண்ட் ஃபிரிட்ஸை வரவேற்க ஆர்வமாக காத்திருந்தனர். உளவாளி எடி சேப்மேனை வரவேற்கத்தான். எதற்காக இந்த விழா? உளவுத்துறை அதிகாரிகளில் ஒரு சிலருக்கே அந்த ரகசியம் தெரியும்.

பிரிட்டனில் இருந்து எடி சேப்மேன், பெர்லினுக்கு வரும் தகவல் மிகமிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பிரிட்டன் உளவு அமைப்பான MI5 அதிகாரிகளின் கண்களில் சிக்காமல், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஃபிரான்ஸ் வந்தார். அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் பெர்லினில் இறங்கினார். இன்னும் சற்றுநேரத்தில் அப்வேர் அலுவலகம் வந்துவிடுவார்.
மேடைக்கு வந்தார் எடி சேப்மேன். விழா தொடங்கியது. உளவுத்துறை அதிகாரிகள், சில உளவாளிகள், அரசு உயரதிகாரிகள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டனர். பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை.
“ஜெர்மன் ராணுவத்துக்கு குடைச்சல் கொடுத்த, ஹாட்ஃபீல்ட் விமான தொழிற்சாலை குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. டிசம்பர் 29-ம் தேதி இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. பிரிட்டனுக்குள் புகுந்து, அனாயசமாக இந்தச் சாகசத்தை நிறைவேற்றிய ஏஜெண்ட் ஃபிரிட்ஸை கவுரப்படுத்தவே இந்த விழா…” மேடையில் இருந்த எடி சேப்மேனிடம் கைகுலுக்கினார் ஜெனரல். அப்போதுதான் மற்றவர்களுக்குப் புரிந்தது. கூட்டம் ஆரவாரம் செய்தது.
ஜெர்மனியின் மிக உயரிய விருதான, இரும்புச் சிலுவை (Iron Cross) விருதை, ஏஜெண்ட் ஃபிரிட்ஸ் மார்பில் அணிவித்தார் ஜெனரல் எர்ன்ஸ்ட் கல்டன்பிரூன். போர்க் களத்தில் தலைமை தாங்கி, படையை நடத்திச் சென்று, துணிச்சலாக போராடிய ராணுவ வீரர்களுக்கே இந்த விருது வழங்கப்படும். ஓர் உளவாளிக்கு அதுவும் அந்நிய நாட்டவருக்கு, அதுவும் பகை நாட்டு குடிமகனுக்கு வழங்குவது இதுவே முதல்முறை. ஆனால் ஏஜெண்ட் ஃபிரிட்ஸ் அந்நிய நாட்டவர் என்பது யாருக்கும் தெரியாது. அது பரமரகசியம்.
அதேபோல, போரில் சிறப்பு சேவை செய்த ராணுவ வீரர் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் War Merit Cross பதக்கத்தையும், ஜெனரலே, சேப்மேனின் மார்பில் அணிவித்தார். கூடவே ஐம்பதாயிரம் ரெயிஸ்மார்க் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்பட்டது. எடி சேப்மேனின் துணிச்சலை அப்வேர் உயரதிகாரிகள் உச்சிமுகர்ந்தனர்.

பிரிட்டன் குடிமகன் ஒருவன், சொந்த தேசத்தின் போர் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரத்தை குண்டு வைத்து தகர்த்திருக்கிறான். இவனல்லவோ வீரதீரன், சாகசக்காரன். இவனை விட்டுவிடக் கூடாது. இன்னும் இன்னும் இவனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மீண்டும் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. பயிற்சி முகாமுக்கு செல்ல தயாரான எடி சேப்மேன் ஒரேயொரு கோரிக்கை வைத்தார். தாய்நாட்டையே காட்டிக் கொடுக்கும் தயாளனுக்கு செய்யாமல் யாருக்குச் செய்யப் போகிறோம். கேட்கலாம் ஃபிரிட்ஸ்.
கேட்டார்.
ஆனால், ரகசியம் கருதி அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அப்வேர் அதிகாரிகள் தயங்கினர்.
எடி சேப்மேனின் கோரிக்கை இதுதான்: “ஹாட்ஃபீல்ட் தொழிற்சாலையை தகர்த்ததை பத்திரிகையில் எழுத வேண்டும். அந்த சாகசக் கட்டுரையை நானே எழுதுவேன்.”

அப்வேர் உயரதிகாரிகள் ஆலோசித்தனர். ஜெர்மனியின் தேசியப் பெருமையை பறைசாற்ற வேண்டும். நாஜி அரசின் சக்தி தேசம் முழுவதும் தெரிய வேண்டும். ஆரிய இன இளைஞர்களுக்கு இது உத்வேகமூட்டும். சாகசக் கட்டுரை எழுத ஸ்வஸ்திக் கொடியை ஆட்டினர். ஏஜெண்ட் ஃப்ரிட்ஸ் என்ற பெயரில் எழுதக் கூடாது. புனைப் பெயரில் எழுதிக் கொள்ளலாமென அன்புக் கட்டளையிட்டனர்.
“இங்கிலாந்தில் நான் போராடினேன்” (Ich kämpfte in England).
இதுதான் சாகசக் கட்டுரையின் தலைப்பு. ஹாம்பர்கர் இல்லஸ்ட்ரேட் (Hamburger Illustrierte) வாரப் பத்திரிகையில் தொடராக வெளிவந்து, ஜெர்மன் வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. உளவு பார்ப்பதில் மட்டுமல்ல, அதை எழுத்தில் விவரிப்பதிலும் கெட்டிக்காரராக காட்டிக் கொண்டார் எடி சேப்மேன்.
உளவு பார்த்தல் - திட்டம் தீட்டுதல் - செயல்படுத்துதல் என அதிரடி திருப்பங்களுடன் தொடர் விரிந்தது. பரபரப்பான தொனி. சுவாரஸ்யமான நடை. ஹாட்ஃபீல்ட் விமான தொழிற்சாலையை குண்டு வைத்து தகர்த்த பேரழிவை த்ரில்லர் சினிமாவைப் போல எழுதினார். ஜெர்மன் ராணுவ வட்டாரத்தில் இந்த சாகசம் பற்றித்தான் ஒரே பேச்சு. யார் இந்த உளவாளி?

ஏஜெண்ட் 000 (Agent Zero Zero Zero) என்ற பெயரில் எழுதிய எடி சேப்மேன், இது ஜெர்மன் குடிமகனின் சாகசம் என்றே வியந்தோதினார். திரும்பத் திரும்ப ஜெர்மன் தேசத்தின் புகழ் பாடினார். அதென்ன ஏஜெண்ட் 000? ஒரு பூஜ்ஜியம் ஏஜெண்ட் ஃபிரிட்ஸ், இன்னொரு பூஜ்ஜியம் ஜார்ஜ் கிளார்க். கடைசி பூஜ்ஜியம்? அதுதான் சஸ்பென்ஸ்.
அப்வேர் உளவுத்துறையைப் பொறுத்தவரை ஏஜெண்ட் ஃபிரிட்ஸ்-க்கு செலவழிக்கப்படும் தொகை செலவல்ல, அனைத்தும் முதலீடு. மேம்பட்ட நவீன பயிற்சிகள் வழங்கப்பட்டன. பிரிட்டனின் முக்கிய பகுதிகளை குண்டு வீசி அழிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களின் புகைப்படங்களை அனுப்புவதுதான் அடுத்த அசைன்மென்ட். சிறப்பு பயிற்சிகளை முடித்துக் கொண்டு, மீண்டும் ரகசியமாக பிரிட்டனுக்குள் வந்தார் எடி சேப்மேன்.
சார்க் தீவில், சிறைக் கொட்டடியிலிருந்து தப்பிப்பதற்காக உளவாளியாக மாறி, வான்குடையில் இறங்கிய உடனேயே போலீஸில் சிக்கிக் கொண்டாரே சேப்மேன்… எப்படி வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்? ஜெர்மனிக்கு நீர்மூழ்கிக் கப்பலில் தப்பித்தது எப்படி? MI5 அதிகாரிகளின் விசாரணை வளையத்தை எப்படி உடைத்தார்?
ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்...
வான்குடையில் குதித்த எடி சேப்மேன் சகதியில் விழுந்து எழுந்து நடந்தார். சேற்றுக் கறையோடு நடப்பவரைப் பார்த்ததும் ரோந்துப் பணியில் இருந்த காவலர்களுக்கு சந்தேகம். அவர் அதெற்கெல்லாம் பயப்படவில்லை. இயல்பாகக் காட்டிக் கொண்டார். ஆனால், விசாரணையில் வயர்லெஸ் கருவி சிக்கியது. வசமாக மாட்டிக் கொண்டோம், இனி தப்பிக்க முடியாது. சுதாரித்துக் கொண்ட சேப்மேன், தான் ஜெர்மன் உளவாளி என்பதை உடனே ஒப்புக் கொண்டார். MI5 உயரதிகாரிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்ய கேட்டுக் கொண்டார்.
எடி சேப்மேனின் துணிச்சலான பேச்சால் காவலர்கள் குழம்பினர். ஏதோ ஆபத்தான பேர்வழியென சந்தேகப்பட்டு, MI5 அதிகாரிகளை வரவழைத்தனர். உளவாளிகளை சித்ரவதை செய்வதற்கான பிரத்யேக முகாமுக்கு சேப்மேனை தூக்கிச் சென்றனர். அந்த முகாமின் பெயர் Camp 020. உளவாளிகளைப் பிடித்தால் இங்கு வைத்து ‘விசாரிப்பது’தான் வழக்கம். ஆள் புத்தி சுவாதீனமானவரா என முதலில் பறிசோதித்தனர்.

எடி சேப்மேன் தெளிவாகச் சொன்னார். நான் ஜெர்மன் உளவாளிதான். என்னை நம்புங்கள். என்னை இப்படியே விட்டு விடுங்கள். ஜெர்மன் உளவாளி போலவே இருந்து, பிரிட்டனுக்காக - தாய்நாட்டுக்காக ஜெர்மனியில் உளவு வேலை பார்க்கிறேன்.
இந்த யோசனை நன்றாக இருந்தது. இருந்தாலும் இவர் உண்மையிலேயே ஜெர்மன் உளவாளிதானா?
ஆபத்தான சூழ்நிலைகளில் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக இருந்து, எதிரியை நண்பனாக மாற்ற வேண்டும். எடி சேப்மேனுக்கு Jelly Gang தொழில் கற்றுத் தந்த பாடம் இது. ஜெர்மனியில் உளவுப் பயிற்சி எடுத்தது, வெடிகுண்டு நிபுணத்துவம், ஜெர்மன் உயரதிகாரிகளின் பெயர்கள், அப்வேர் உளவு தலைமை அலுவலகம் இருக்கும் இடம் என அனைத்தையும் சொன்னார் சேப்மேன். இதன் பிறகுதான் MI5 அதிகாரிகள் நம்பினர்.
அவர் ராணுவ பென்சன் சான்றிதழ் வைத்திருந்தார். அதில், கப்பல் கம்பெனியில் வேலை பார்த்து, போர் காரணமாக வேலையிழந்த குமாஸ்தா ஜார்ஜ் கிளார்க் என்றிருந்தது. ஜெர்மன் உளவுத்துறையின் முட்டாள்தனத்தை புரிந்து கொண்டனர். பிரிட்டனில் சாதாரண குடிமகனுக்கு ராணுவ பென்சன் வழங்குவது கிடையாது. அப்வேர் அதிகாரிகளுக்கு இதுகூட தெரியாதா? MI5 அதிகாரிகள் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்க எடி சேப்மேனின் மூளை இவர்களைவிட வேகமாக சிந்தித்தது.
பிரிட்டனுக்குள் வந்த ஜெர்மன் உளவாளியை சும்மா விட்டுவிடுவார்களா?
உண்மையில், பிரிட்டனுக்குள் வந்தது ஜெர்மனிக்கு உளவு பார்க்கத்தானே. அது தனக்கு மட்டும்தானே தெரியும். வந்தது வந்துவிட்டேன், இனி உங்களுக்கு உளவு பார்க்கிறேன் என்றால் விட்டுவிடுவார்களா? ஆக, ஒரு பொய்யைச் சொல்ல வேண்டும். அந்தப் பொய், உண்மையை விட நம்பத் தகுந்ததாக இருக்க வேண்டும்.
“இங்க பாருங்க… ஹாட்ஃபீல்ட் விமான தொழிற்சாலையை வெடிகுண்டு வைத்து தகர்க்கணும். இதுதான் எனக்கான அசைன்மெண்ட். தகர்த்துடுவோம். தகர்த்திட்டதா தகவல் கொடுத்திட்டா ஜெர்மன் அப்வேர் உடனே நம்பிடும்…”

“என்ன…? குண்டு வைப்பியா?” MI5 அதிகாரிகள் அடிக்கப் பாய்ந்தனர்.
“ஹலோ… குண்டு வச்சு தகர்த்தது போல காட்டுவோம். ஏதாவதொரு இடத்துல குண்டை வெடிக்க வச்சி, அத ஃபோட்டோ எடுத்து அனுப்பி, அவங்கள நம்ப வச்சிட்டா போதும்…” தன்னுடைய வழிக்கு கொண்டு வர MI5 அதிகாரிகளிடம் நயமாகப் பேசினார்.
‘என்னை நம்புகிறார்களா என்பது முக்கியமில்லை, அவர்கள் என்னை பயன்படுத்த விரும்புவது தான் முக்கியம்.’ ஜெர்மன் அதிகாரிகளிடம் பயன்படுத்திய அதே யுக்திதான். அமைதியாக இருந்தார். MI5 அதிகாரிகள் யோசித்தனர்.
ஜெர்மன் அப்வேரைப் பொறுத்தவரை ஏஜெண்ட் ஃப்ரிட்ஸ், தங்களுக்காக பிரிட்டனில் வேலை பார்க்கும் ஓர் உளவாளி. அப்படியே இருந்துவிட்டு போகட்டும். உண்மையில், அவர் MI5-ன் உளவாளியாக நமக்காக வேலை பார்ப்பார். அதாவது இரட்டை உளவாளி. ஓகே சொல்லிவிட்டு, எடி சேப்மேனை எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என யோசித்தனர் MI5 அதிகாரிகள்.
ஒரு நல்ல நாள் இரவில், கட்டடம் ஒன்றை குண்டு வைத்து தகர்த்தனர். இடிபாடுகளில் விமான உதிரி பாகங்களை வைத்தனர். அதை புகைப்படமெடுத்தார் எடி சேப்மேன். ஹாட்ஃபீல்ட் விமான நிலைய தொழிற்சாலையை தகர்த்து விட்டதாக சங்கேத மொழியில் தகவல் அனுப்பினார். அப்வேர் அதிகாரிகள் நம்பிவிட்டனர். எடி சேப்மேன் நட்சத்திர உளவாளியாக கொண்டாடப்பட்டார்.
பின்னர் ஃபிரான்ஸுக்கு நீர்மூழ்கிக் கப்பலில் சென்றது, அப்வேரின் பாராட்டு விழா, விருது வாங்கியது, கட்டுரை எழுதியது… எல்லாமே MI5 திட்டம்தான். இந்தத் திட்டத்துக்கு MI5 வைத்த பெயர் ஆபரேஷன் டிஃப்ராஸ்ட் (Operation Defrost).
பிரிட்டன் உளவுத்துறையில் எடிசேப்மேனுக்கு பெயர் என்ன தெரியுமா? ஏஜெண்ட் ஸிக்ஸாக் (Agent Zig Zag). ஆமாம், அங்கேயும் இங்கேயும் உளவாளி என்ற பொருளில் இந்தப் பெயரை வைத்தனர்.
இதுதான் அந்த மூன்றாவது பூஜ்ஜியம்.
(உளவு தொடரும்..!)
பாகம் 3: ஜெர்மன் உளவுத்துறையில் இந்திய வம்சாவளி கவிஞர்


















