"உடன் பிறப்புகளின் வாக்குகளைப் பெற்று எங்களின் தயவில் தான் இந்த அரசு.!'- உதயநி...
`கொசுவை அழிக்க களமிறக்கப்பட்ட உளவாளி' | உளவன் - 01

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் நகரின் மேலே விமானம் பறந்து கொண்டிருந்தது. நள்ளிரவு. ஆழ்ந்த உறக்கத்தில் வண்ண வண்ண விளக்குகளின் ஒளியில் கனவு கொண்டிருந்தது சூரியன் மறையாத பேரரசு.
“ஃப்ரிட்ஸ் (Agent Fritz) இங்க குதிக்கிறியா?”
உலகின் வல்லரசு ஐக்கிய சாம்ராஜ்ஜியம் (United Kingdom). அதை நிலைகுலைய வைக்கப் போகும் சாகச கற்பனையில் மிதந்து கொண்டிருந்ததால், காதில் விழவில்லை. உசுப்பவும்தான் நினைவுக்கு வந்தார் எடி சேப்மென் (Eddie Chapman). ஜெர்மன் உளவுத்துறை சூட்டிய நாமகரணம் - ஃப்ரிட்ஸ் - அவருக்கு இன்னும் பழக்கமாகவில்லை.
“ஓகே… இங்க இருந்து ஹாட்ஃபீல்ட் சிட்டி (Hatfield) 30-40 மைல் இருக்கும்.” சொல்லிக் கொண்டே வான்குடையோடு குதித்தார், சொந்த நாட்டிலேயே ஜெர்மன் தேசத்துக்காக உளவு பார்க்க தயாரான எடி சேப்மென்.
இரண்டாம் உலகப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம் அது. பிரிட்டனின் விமானப் படையை சீர்குலைக்க ஏதாவது செய்ய வேண்டும். குறிப்பாக, இரட்டை எஞ்சின் கொண்ட De Havilland Mosquito என்ற விமானம், ஜெர்மன் ரேடாரின் கண்களில் சிக்குவதே இல்லை. பெயருக்கு ஏற்றார்போல, கொசு மாதிரி கிடைத்த இண்டு இடுக்குகளில் புகுந்து தப்பிவிடுகிறது.

பிரிட்டனின் விமானப் படை (RAF) ஹிட்லரின் காதுகளில் புகையை விட்டுக் குடைந்தது. மாயாஜாலம் செய்தன, மரத்தால் செய்யப்பட்ட பாகங்களைக் கொண்ட கொசு வகை விமானங்கள். கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. ஏதாவது செய்தாக வேண்டும். நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்தது ஜெர்மனியின் ராணுவ உளவுத்துறை அப்வேர் (Abwehr).
கொசு விமானங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஹாட்ஃபீல்ட் நகரத்தில் உள்ளது. அந்தத் தொழிற்சாலை மீது ஜெர்மன் விமானிகள் குண்டு மழை பொழிந்தனர். வைத்த குறி தப்பியது. தொழிற்சாலையை சுற்றி இருந்த பகுதிகளில் குண்டு விழுந்ததே தவிர, தொழிற்சாலைக்கு சேதமில்லை. ஹாட்ஃபீல்ட் தொழிற்சாலையை அழிக்கும் ஜெர்மனியின் ராணுவ முயற்சிகள் பலனளிக்கவில்லை.
குண்டு வீசி ஹாட்ஃபீல்ட் தொழிற்சாலையை அழித்ததெல்லாம் போதும், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். விமானப் படைக்கு சமிக்ஞை காட்டினர் அப்வேர் உளவு அதிகாரிகள். உள்ளூர்காரன் ஒருத்தன் சிக்கி விட்டான். திட்டமும் தாயார். நேரடியாக உளவாளியை அனுப்பி, குண்டு வைத்து ஹாட்ஃபீல்ட் தொழிற்சாலையை தகர்ப்பதுதான் திட்டம்.
ஆபரேஷன் ஹெர்ப் (Operation Herbst). இதுதான் அந்தத் திட்டத்துக்கு பெயர். Herbst என்றால் ஜெர்மன் மொழியில் “இலையுதிர்காலம்” (Autumn) என்று அர்த்தம். செய்வது என்னவோ அழித்தொழிப்பு வேலை. ஆனால், பெயரெல்லாம் சூழலியல் ஆர்வலர் ரேஞ்சுக்கு வைத்தனர். எந்தெந்த காலங்களில் நடக்கிறதோ அந்தந்த பருவகால பெயர்களை வைப்பது அப்வேர் உளவு அதிகாரிகளின் வாடிக்கை.
அப்வேருக்கு கிடைத்த ஆபத்பாந்தவன்தான் சிறைக் கைதி எடி சேப்மேன்!
1942-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி. வான்குடை இதமான காற்றில் மிதந்து இறங்கியது. ஒருமுறை நினைவுபடுத்திக் கொண்டார். தன்னுடைய பெயர் இனிமேல் ஏஜெண்ட் ஃப்ரிட்ஸ். பிரிட்டனில் தரை இறங்கியதும் ஜார்ஜ் கிளார்க் (George Clarke). மறக்கக் கூடாது. எந்தக் காரணத்தை கொண்டும் நண்பர்களை பார்த்துவிடக் கூடாது. உடன் சுற்றிய தெருப் பொறுக்கிகளை பார்த்துவிடவே கூடாது. சேப்மேனின் உள்ளம் முழுவதும் குரோதத்தில் நிறைந்து கிடந்தது. தன்னை சிறையில் அடைத்த தேசத்தை பழிவாங்க இதைவிட சிறந்த வழி வேறு என்ன இருக்க முடியும்?
நாடும், நாட்டு மக்களும் நாசாமாய்ப் போனால் எனக்கு என்ன? போரில், பிரிட்டன் தோற்றால் என்ன? ஜெயித்தால் என்ன? உலகைக் கட்டியாண்ட பிரிட்டன் குடிமகன் தேசபக்தன் இல்லையா? சேப்மேனின் உள்ளத்தில் துளிகூட தேசப்பற்று இல்லையா? இருக்கத்தான் செய்தது.

வான்குடை மிதக்க, சேப்மேனின் நினைவுகளும் பறந்தன. வயது 28. போன மாதம் நவம்பர் 16-ம் தேதிதான் பிறந்தநாளைக் கொண்டாடினார். முதல் உலகப் போர் காலக்கட்டத்தில் இங்கிலாந்தின் கால்ட்மோர் பகுதியில் எடி சேப்மேன் பிறந்தார். அப்பாவுக்கு கப்பலில் பொறியாளராக பணி. பெரிய வருமானமெல்லாம் இல்லை. வறுமை காரணமாக குடும்பம் சண்டர்லாந்து பகுதிக்கு குடிபெயர்ந்தது. வகுப்பில் கெட்டிக்கார மாணவன். இருந்தாலும் படிப்பில் நாட்டமில்லை. நண்பர்களோடு ஊர் சுற்றுவதில்தான் சேப்மேனுக்கு ஆர்வம்.
பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு தெருக்களில் சாராய பாட்டில்களைப் பொறுக்கி விற்று, அந்தப் பணத்தில் திரைப்படம் பார்ப்பதுதான் எடி சேப்மேனுக்கு ஒரே வேலை. பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக தெருவில் திரிய, குற்ற உலகிற்குள் இழுத்துச் சென்றனர் நண்பர்கள். சேக்காளிகளோடு ஷோக்காக சுற்றித் திரிந்தார் சேப்மேன். ஆள் பார்க்க ஸ்டைலாக, அழகாக இருந்ததால் மதுவோடு, மாதுவும் சேர்ந்து கொண்டனர்.
இளைஞன் எடி சேப்மேனின் இப்போதைய தொழில், வீடுகளில் பூட்டை உடைத்து திருடுவது. பூட்டின் சாவித் துவாரத்தில் இரசாயன கலவைகளை செலுத்தி, லாவகமாக பூட்டை வெடிக்கச் செய்து வீடுகளில் கொள்ளையடிக்கும் கும்பல்களில் (Jelly Gang) கைதேர்ந்தவனாக அறியப்பட்டார். போலீஸின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, மாட்டிக் கொள்ளாமல் கொள்ளையடிப்பதில் கில்லாடி. ரகசிய டான்களின் உலகில் எடி சேப்மேனின் பெயர் கொடி கட்டிப் பறந்தது.
இரண்டாம் உலகப் போர் பிரிட்டனை கடும் பொருளாதார நெருக்கடியில் தள்ளி இருந்தது. வேலை வாய்ப்பு இல்லாமல் சுற்றிய இளைஞர்களுக்கு மத்தியில், ‘சுயதொழில்’ செய்து சுகபோகமாக வாழ்ந்தார் சேப்மேன். அவ்வப்போது சிறைக்கும் சென்று வந்தார். சிறைச்சாலை என்பது கொள்ளையர்களின் ஓய்வறை. திருடு. ஜெயிலுக்கு போ. ஜாமினில் வெளியே வா. நீ முன்னேறுவாய். இதுதான் கொள்ளையர்களின் வெற்றி மந்திரம்.
இங்கிலாந்தில் மட்டுமல்ல. பக்கத்தில் ஃபிரான்ஸுக்கும் விமானத்தில் பறந்து சென்று கொள்ளையடித்தார். சாகசம் என்ற சொல்லின் இன்னொரு சொல் சேப்மேன். வீடுகளில் புகுந்து திருடுவது, பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது எத்தனை நாளைக்கு? அழுத்துப் போன எடி சேப்மேன், காதலியோடு உல்லாச சுற்றுலாவுக்கு கிளம்பினார்.

சார்க் தீவு. பிரிட்டனின் ஆளுகைக்குள் இருந்த தன்னாட்சி பகுதி. ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீவு மீது ஜெர்மன் ஒரு கண் வைத்திருந்தது. ஆங்கிலக் கால்வாயின் தென்மேற்கு பகுதியில் இருந்த குட்டித் தீவில் ஜோடியாக வலம் வந்தார் சேப்மேன். போன இடத்தில் பொழுது போக்க பணம் வேண்டுமல்லவா? கிளுகிளுப்பிலும் ஒரு ரணகளம். தீவிலும் கைவரிசையக் காட்டி வசமாக சிக்கிக் கொண்டார்.
அங்குள்ள சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் காவல்துறை. போர் உக்கிரமடைய, தீவில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள், வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். ஒற்றைக் காலில் நின்ற ஜெர்மன் கொக்கு, நேரம் பார்த்து சார்க் தீவை கொத்தித் தூக்கியது. சிறை இருக்கும் பகுதியை அந்நிய நாடு கைப்பற்றிக் கொண்டால், சிறைவாசிகள் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்கள்? பிரிட்டன் கைதி ஜெர்மன் கைப்பற்றிய சிறையில். யாருக்காவது இந்த நிலை ஏற்படுமா?
விநோத கைதியான எடி சேப்மேன் விபரீதமாக சிந்தித்து, பிறந்தநாளின் போது அந்த முடிவை எடுத்தார். எப்படியாவது சிறையிலிருந்து தப்பிக்க வேண்டும். சிறை அதிகாரிகளிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். “என் தாய்நாடு எனக்கு எதுவும் செய்யவில்லை. என்னை சிறையில் தள்ளியது. ஓடினேன், ஓடினேன். சார்க் தீவுக்கே ஓடினேன். அங்கும் கொட்டடியில் இட்டது என்னை…” அதுக்கு? ஜெர்மன் அதிகாரிகள் முறைத்தனர். “என்னை விடுதலை செய்யுங்கள். ஜெர்மனிக்காக பிரிட்டனில் நான் உளவு வேலை பார்க்கிறேன். ஒற்றனாக பணி செய்து என் தாய்நாட்டை பழிவாங்குவேன்…” சபதம் செய்யாத குறையாக மன்றாடினார் சேப்மேன்.
ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம். சிறை வாழ்க்கையிலிருந்து விடுபட்டால் போதும். இதுதான் சேப்மேனின் ரகசிய திட்டம். ஆனால் ஜெர்மன் அதிகாரிகள் நம்ப வேண்டுமே…? நம்ப வைக்க வேண்டும். ஜெர்மன் அதிகாரிகள் தன்னை நம்புகிறார்களா என்பது முக்கியமில்லை. அவர்கள் தன்னை பயன்படுத்த விரும்ப வேண்டும் என்பதுதான் முக்கியம். விரும்ப வைக்க வேண்டும். தூண்டிலை வீசினார். இதுவரை செய்த கோக்குமாக்குத் தனங்களைக்கூறி, பணம் தந்தால் போதும் எந்த வேலையும் செய்யத் தயார் என உருகினார்.
ஜெர்மன் அதிகாரிகள் யோசித்தனர். சேப்மேனின் குற்றங்களை ஆராய்ந்தனர். Jelly Gang பின்னணி, அப்வேர் உளவுத்துறை அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெடிப் பொருட்களை கையாள்வதை சாதகமான அம்சமாகப் பார்த்தனர். குற்றவாளிகள், உளவு வளைக்குள் எளிதாக பொருந்துவர் என அப்வேர் கணக்கு போட்டது. இறுதியில் சேப்மேனை விடுதலை செய்ய ஒப்புக் கொண்டனர்.

ஃபிரிட்ஸ் என்ற உளவாளி புறப்பட்டான். நார்வே நாட்டில் உள்ள ஜெர்மானிய உளவு பயிற்சி மையத்தில் சேப்மேனுக்கு பயிற்சி அளித்தனர். வெடிகுண்டு தயாரிப்பு, ரேடியோ தகவல் தொடர்பு, சங்கேத பாஷை என போதுமான அளவுக்கு பயிற்சிகளை வழங்கினர். முக்கியமாக, உளவு தகவல்களை அனுப்ப, பெறத் தேவையான குறியாக்கம் - மறைகுறியாக்கம் (Encoding - Decoding) பற்றி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
என்னதான் பிரிட்டிஷ்காரனாக இருந்தாலும், தெருப் பொறுக்கியல்லவா? இனி, அந்த மாதிரி இருக்க முடியாதே. பிரிட்டிஷ் உச்சரிப்பு, பப்களில் மதுபான வகைகளை கேட்கும் ஸ்டைல் என அச்சு அசல் நடுத்தர வர்க்க பிரிட்டன்காரராக மாற்றி, சேப்மேனை தேர்ந்த உளவாளியாக வார்த்தெடுத்தனர். இப்படித்தான் ஒரு மாயாவி உருவானான்.
இன்னும் சற்று தூரத்தில் நிலத்தில் கால் பதித்து விடலாம். இருட்டில் கவனமாக வான்குடையை இறக்கிய சேப்மேன், கொண்டு வந்த பொருட்களை சரிபார்த்தார். ஆயிரம் பவுண்ட் பணம். கொஞ்சம் ஷில்லிங் சில்லறைக் காசுகள். துணிமணிகள். பிரிட்டன் பிராண்ட் சிகரெட் பாக்கெட்டுகள். அனைத்தும் அட்டகாசம். வயர்லெஸ் கருவிதான் அபாயகரமாகத் தெரிந்தது.
`லிவர்பூல் நகரில் கப்பல் கம்பெனியொன்றில் குமாஸ்தா. போர் காரணமாக வேலை பறிபோய்விட்டது. இராணுவ பென்சன் மாதந்தோறும் கிடைக்கிறது' - இதுதான் ஜார்ஜ் கிளார்க்கின் அடையாளம். இதுக்குத் தகுந்தாற்போல ஆவணங்கள் அனைத்தும் பையில் இருந்தது. படிப்பறிவற்ற போக்கிரியின் அடையாளத்தை மறைப்பதற்கான கச்சிதமான ஏற்பாடுகளை செய்திருந்தது அப்வேர் உளவுத்துறை.
இருட்டில் எதுவும் தெரியவில்லை. குதித்த இடம் சேறும் சகதியுமாக இருந்தது. ஹாட்ஃபீல்ட் தொழிற்சாலைக்கு குண்டு வைப்பதுதான் முதல் அசைன்மெண்ட். எப்போது, எப்படி? யோசித்துக் கொண்டே, தட்டுத் தடுமாறி நடந்து சென்ற சேப்மேனை பிரிட்டன் காவல்துறை மடக்கியது. அவரிடமிருந்த பொருட்கள் சந்தேகத்தை அதிகப்படுத்தவும், பிரிட்டன் உள்நாட்டு ராணுவ உளவுத்துறை MI5 (Military Intelligence 5) அதிகாரிகளிடம் சேப்மேனை ஒப்படைத்தனர்.!
(உளவு தொடரும்..!)
பாகம் 2 : பிரிட்டனில் ஒரு கால்… ஜெர்மனியில் ஒரு கால்!




















