செய்திகள் :

அதிக நாவல் பழ விளைச்சல்! வருங்கால வறட்சிக்கு எச்சரிக்கை மணியா? - தாவரவியல் வல்லுநர்கள் சொல்வதென்ன?

post image

"இந்தாண்டு நாவல் பழத்தின் அதிகப்படியான விளைச்சல் என்பது அடுத்து வரப்போகும் பெரிய வறட்சிக்காக இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் எச்சரிக்கை மணி..!" — கடந்த சில வாரங்களாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களைத் திறந்தாலே இத்தகையதொரு 'பகீர்' மெசேஜ் தான் நெட்டிசன்களை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.

வேதனையான விஷயம் என்னவென்றால், ஏதோ விபரமறியாதவர்கள் தான் இதைச் செய்கிறார்கள் என்று பார்த்தால், சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கும் படித்தவர்கள், பிரபலங்கள் கூட இந்த நாவல் பழ 'எச்சரிக்கை மணி' தகவலைத் தங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தீவிரமாகப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் பகிரும் பதிவுகளில், "திடீரென தும்பிகள் கூட்டம் கூட்டமாகப் பறந்தால் மழை வரப்போவதையும், நாய்களும் பூனைகளும் அபயக் குரல் எழுப்பினால் நிலநடுக்கம் வரப்போவதையும் உணர்த்துவது போல, இந்த ஆண்டு நாவல் பழங்கள் அளவுக்கு அதிகமாக விளைந்திருப்பது நமது பகுதிக்கு இயற்கை விடுத்திருக்கும் எச்சரிக்கை மணி!" என்று அட்வான்ஸ் பயத்தைக் கிளப்புகிறார்கள்.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த முறை சந்தைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலைய நடைபாதைகள் என எங்கு பார்த்தாலும் நாவல் பழங்கள் குவியல் குவியலாக விற்பனைக்குக் குவிந்து கிடப்பது நிஜம் தான். ஆனால், இதன் அதிக விளைச்சலுக்குப் பின்னணியில் இருக்கும் உண்மையான தாவரவியல் அறிவியல் என்ன?

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட அரசு தோட்டக்கலைத்துறையினரிடம் விளக்கம் கேட்டோம்...

ஆபத்து கால இனப்பெருக்கம்..!

"தாவரவியலில் 'ஸ்ட்ரெஸ் ஃப்ரூட்டிங்' (Stress Fruiting) எனப்படும் 'ஆபத்துக்கால இனப்பெருக்கம்' என்றொரு இயல்பான நிகழ்வு உண்டு. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட நாவல் போன்ற நீண்ட கால மரங்கள், தங்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் போகும்போதோ அல்லது வழக்கத்திற்கு மாறான கடுமையான கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும்போதோ ஒருவித சுற்றுச்சூழல் அழுத்தத்திற்கு (Environmental Stress) உள்ளாகலாம்.

நாவல் பழ விளைச்சல்

தங்களுக்கு ஏதோ ஆபத்து வரப்போகிறது, நாம் அழிவதற்குள் நம்முடைய அடுத்த தலைமுறையை (விதைகளை) உருவாக்கிவிட வேண்டும்' என்ற அவசர உந்துதல் தாவர ஹார்மோன்களால் மரங்களுக்குக் கடத்தப்படுகிறது. இதன் காரணமாக, மரம் தனது முழு ஆற்றலையும் பூக்கள் மற்றும் பழங்களை உருவாக்குவதில் செலுத்துகின்றன. இதனால் சில சமயங்களில் வழக்கத்தை விட மிக அதிக அளவில் பழங்கள் காய்க்கலாம். ஆனால் இது உறுதியானதல்ல.

காட்டு மரங்கள் மற்றும் சில பழ மரங்கள் தங்களின் உயிர் பிழைப்புத் திறனை அதிகரிக்க 2 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திடீரென அதிகப்படியான பழங்களை உருவாக்கும் 'மாஸ்டிங்' என்ற சுழற்சி முறையையும் பின்பற்றுகின்றன. எனவே, இது அந்த ஆண்டே பெரும் பஞ்சம் வரும் என்பதற்கான நேரடி அறிகுறி அல்ல.

வானிலை சாதகம்:

இந்தாண்டு நமக்கு அதிக நாவல் விளைச்சலுக்கு காரணம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிலவிய வறண்ட வானிலையும், அதற்கு முந்தைய பருவமழைக்கால நிலத்தடி நீர் இருப்புமே ஆகும். நாவல் மரத்திற்குப் பூக்கும் தருணத்திலும், பிஞ்சு பிடிக்கும் தருணத்திலும் வறண்ட, வெப்பமான வானிலை இருந்தால் பூக்கள் கொட்டாமல் அப்படியே காய்களாக மாறி அவை பழமாக மாறும். அதுதான் அதிக விளைச்சலுக்குக் முக்கியக் காரணம்.

விவசாயிகளுக்கு லாபம்:

சொல்லப்போனால் விவசாயிகளுக்கு அதிக பராமரிப்புச் செலவில்லாமல் நல்ல லாபம் தரக்கூடியது நாவல் மரம் . இன்று அதிக விளைச்சல் தரக்கூடிய ஏராளமான நாவல் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல மகசூல் தருகிறது. அதுவும் அதிக விளைச்சலுக்கு ஒரு முக்கிய காரணம். அதிக விளைச்சல் விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரக்கூடியதுதானே. அந்த வகையில் இது மகிழ்ச்சிக்குரியதுதானே தவிர யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை..' என்றனர்.

கிராம எல்லைக் கோவில் மரங்கள் குறித்த ஆய்வு நூலாசிரியரான தாவரவியல் துறையின் மூத்த பேராசிரியர் (ஓய்வு) கார்த்திகேயனை தொடர்பு கொண்டு இதுபற்றி பேசினோம்.

தாவரவியல் துறை பேரா.கார்த்திகேயன்

இது சூழல் அறிகுறியா?:

"நாவல் பழம் இந்த ஆண்டு அதிகமாகக் காய்த்திருப்பது என்பது எவ்வகையிலும் 'சூழல் அறிகுறி' (Ecological indicator) கிடையாது. அதாவது, இது வரப்போகும் வறட்சிக்கான இயற்கை தரும் எச்சரிக்கை அறிகுறி அல்ல. வெயில் அதிகமாக இருந்த காரணத்தினால் இந்த மலர்கள் அதிகமாகப் பூத்துக் காய்த்துள்ளன, அவ்வளவுதான்.

'இனி எதிர்காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும் அல்லது வறட்சி வரும்' என்பதற்கு இது காரணம் கிடையாது.

பொதுவாகத் தாவரங்கள் குளிர்கால மலர்கள், வெப்பகால மலர்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. இந்த காலகட்டத்தில் நாவல் பழம் காய்ப்பது என்பது அதன் தன்மையாகும்.

தாவரங்களில் பூக்கள் பூப்பதற்கும், அவை கனியாவதற்கும் வெப்பநிலை மிக முக்கியக் காரணியாக விளங்குகிறது. இதனை ஆங்கிலத்தில் 'வர்னலைசேஷன்' என்று குறிப்பிடுகிறார்கள். நாவல் பழத்தைப் போலவே ஆனா பழம் (அன்னாசி வகை) போன்ற தாவரங்களும் வெப்ப காலங்களில் பூத்துக் கனி கொடுக்கக்கூடியவை; பரங்கி, பூசணி போன்றவை இளவேனில்கால அல்லது வசந்தகால முடிவில் வரக்கூடியவை.

ஒரு மாற்றுச் சிந்தனை:

எதிர்காலத்தில் பூமி வறட்சி அடையும் என்பதற்காக நாவல் மரங்கள் இப்போது அதிகமாகக் காய்த்துள்ளது என்றால், ஒருவேளை பூக்கள் குறைவாகப் பூத்து பழங்களின் விளைச்சல் குறைந்தால், அதற்கு "வெப்பம் வராது அல்லது வறட்சி ஏற்படாது" என்று அர்த்தமாகிவிடுமா? என்ற மாற்றுச் சிந்தனையையும் நாம் யோசிக்க வேண்டும்.

மனிதத் தவறுகளே காரணம்:

பூமி வெப்பமடைவதற்கும் வெயில் அதிகரிப்பதற்கும் மரங்களை அழிப்பது, நீர் மேலாண்மை திட்டங்களின் தோல்வி, குளம் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாதது போன்ற மனிதத்தவறுகளே பல காரணங்களாக இருக்கின்றன. வெப்பத்தைத் தாங்கக்கூடிய மரவகைகள் மற்றும் பூக்கள் வெப்ப காலத்தில் பூத்துக் காய்த்து கனியாவது இயற்கையானது.

நாவல் பழ விளைச்சல்

சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது பறவைகள், விலங்குகள் மற்றும் மீன்கள் தங்களின் இருப்பிடத்தை மாற்றிக்கொள்வது அல்லது ஒலியெழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. தாவரங்களுக்கும் பூகம்பம் போன்ற நிகழ்வுகளை உணரும் திறன் உண்டு. ஆனால், அவை சில மணி நேரங்களுக்கு முன்புதான் நடக்குமே தவிர, மூன்று மாதங்களுக்கு முன்பே அவற்றால் உணர்ந்து காட்ட முடியாது. தாவரங்கள் தற்போதைய சூழ்நிலையை உணருமே தவிர, பின்னாடி வரப்போகும் வறட்சியை முன்னாடியே யோசித்துச் சொல்லக்கூடிய அளவுக்கான திறன் அவற்றிற்கு இல்லை.

மனிதர்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் போது நிழலை நோக்கி ஓடுவதும், உடல் குளிர்ந்தவுடன் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் போன்ற உடலின் தற்காப்பு செயல்பாட்டைப் (Body mechanism) போன்றதே தாவரங்களின் செயல்பாடும் (Plant mechanism) ஆகும்.

உண்மையான வறட்சி அறிகுறி எது?

பனை மரம் கடுமையான வறட்சியையும் வெப்பத்தையும் தாங்கி வளரக்கூடிய ஒரு தாவரமாகும். அந்த பனை மரத்தின் குருத்தே கருகிப் போகிறது என்றால், அங்கு நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே சென்றுவிட்டது மற்றும் கடுமையான வெப்ப காலம் நிலவுகிறது என்று பொருள். இதுதான் உண்மையான வறட்சி அறிகுறி.

"எனவே நாவல் பழத்தின் அதிக விளைச்சல் என்பது வருங்கால வறட்சிக்கான எச்சரிக்கை மணி அல்ல...!" எனத் தெளிவுபடுத்துகிறார் பேரா. கார்த்திகேயன்.

போர்க்களத்திலும் குறையாத கடல் ஆமைகள் மீதான கரிசனம்; உலகை உலுக்கிய சுற்றுச்சூழல் ஆர்வலர் மரணம்!

லெபனான் நாட்டில் நடக்கும் பயங்கரமான போருக்கு மத்தியிலும், தான் நேசித்த கடற்கரையையும், அங்கு வாழும் ஆமைகளையும் காப்பாற்ற நினைத்த ஒரு பெண்ணின் கதை சோகமாக முடிந்துள்ளது.லெபனானின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல்... மேலும் பார்க்க

`சுற்றுச்சூழலின் Bio Indicators'- தனித்துவமான புலி வண்டுகள் குறித்து விளக்கும் பல்லுயிர் ஆய்வாளர்கள்

இவ்வுலகில் வாழும் அத்தனை உயிர்களும் சூழலியலோடு ஒன்றி இயங்குவதோடு மட்டுமன்றி, சுற்றுச்சூழலின் நிலையையும் உயிர் காட்டியாக (Bio indicators) இருந்து சுட்டுகின்றன.மழை வருவதை முன்கூட்டியே உணர்த்தும் தும்பிக... மேலும் பார்க்க

``தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 'El Nino' தீவிரம் அடைய வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் 'எல் நினோ' (El Nino) காலநிலை மாற்றம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது தீவிரமடைந்து ... மேலும் பார்க்க

Philliphines-ல் சக்திவாய்ந்த நில நடுக்கம்: ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸ் நேரப்படி, இன்று காலை 7.40 மணிக்கு, பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான மிண்டானாவில் 7.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதையொட்டி, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில... மேலும் பார்க்க

சூரியனில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 வெடிப்புகள்! - சிக்கலை சந்தித்த ரேடியோ சேவைகள்; என்ன நடந்தது?

சூரியனில் இந்த வாரம் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்குள், அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த சூரியப் புயல்களை (Solar Flares) பூமிக்கு நேராக அனுப்பி வைத்துள்ளது. இதன் காரணமாக, பூம... மேலும் பார்க்க