4 வயதுக் குட்டிப் பையன் விஜய்! - 48 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த அதிசய சந்திப்ப...
தூத்துக்குடி: சிஸ்டம் டெவலப்பரின் அர்த்தமுள்ள முன்னெடுப்பு; ட்ரெண்டிங்கில் கலக்கும் வாசிப்பு வண்டி!
எம்.சி.ஏ படித்துவிட்டு சிஸ்டம் டெவலப்பராக இருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த சைமன் அரவிந்த் சிங், புத்தகங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.
5,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்திருக்கும் சைமன், தான் மேம்பட உதவிய அந்தப் புத்தகங்கள் இளம் வாசகர்களுக்கும் உதவிட வேண்டுமென்ற முடிவை எடுத்திருக்கிறார். தன்னுடைய வேலை நேரம் போக, மாலை நேரங்களில் சாலையோரத்தில் தனது இரு சக்கர வாகனத்திலேயே புத்தகங்களைக் காட்சிப்படுத்தி வருகிறார். ஏராளமான இளம் தலைமுறை வாசகர்கள், இத்தகைய முயற்சியால் பயன்பெற்று வருகின்றனர்.
ஒரு மாலைப்பொழுதில் சைமனைச் சந்தித்து உரையாடினோம்.
'எனக்கு நூலகம் வைக்கனும் என்று மிகப்பெரிய ஆசை..'
"என்னுடைய பெயர் சைமன் அரவிந்த் சிங். நான் எம்.சி.ஏ படிச்சிட்டு சிஸ்டம் டெவலப்பராக இருக்கேன். இதுக்கு முன்னாடி நிறைய அலுவலகத்தில் வேலை பார்த்திருக்கேன். அப்பா இறந்து ரெண்டு வருஷமாகிருச்சு. அம்மா ஹவுஸ் வைஃப். எனக்கு நூலகம் வைக்கணும்னு பெரிய ஆசை. ஆனா பொருளாதார வசதி இல்ல. புத்தங்கள் மட்டும்தான் இருந்தது. இது குறித்து தம்பிகளிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது , தம்பி அன்பு நம்ம இரு சக்கர வாகனத்துல புத்தங்களை வைக்கலாம்னு யோசனை கொடுத்தார்.

அதற்கு அப்புறம் கடந்த 2024 ஏப்ரல் மாதம் 4ம் தேதி, என்னிடம் இருக்கும் புத்தங்கள் எல்லாவற்றையும் மக்களுக்கு வாசிப்பதற்காக கொடுக்க ஆரம்பித்தேன். இப்போதைக்கு தூத்துக்குடி வ.உ.சி கல்லூரிக்கு எதிரில் தினமும் இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை இந்த வாசிப்பு வண்டியை தொடர்ந்து நடத்தி கொண்டு வருகிறேன். மக்கள் இதை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். தினமும் குறைந்தது 20 பேராவது வாசிக்க ஆவலோடு வருகிறார்கள். சில நாள்களில் எனக்கு முன்னால் அவர்கள் வந்து பேராவலோடு காத்துக் கொண்டு இருப்பார்கள்.
மக்களின் உற்சாக வரவேற்பு....
எத்தனையோ மகிழ்ச்சியான தருணங்கள். நினைவுப்பூக்களாக கிடைக்க பெற்று இருக்கிறது. அதில் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், ஒரு நாள் ஒரு ஆட்டோ ஓட்டுநர் குமிழ்முனை வாசிப்பு வண்டிக்கு வந்திருந்தார். அவருக்கு வாசிப்பு என்றால் கொள்ளை பிரியம்.

தினமும் சவாரி முடிந்து மதிய வேளையில் நூலகம் சென்று புத்தகங்கள் எடுத்துவந்து வாசிப்பார். வாசித்த புத்தங்களில் இருந்து குறிப்பு எடுத்து கொள்வாராம். அவர் எடுத்த குறிப்புகள் படவரி பக்கத்தில் யாராவது பகிர்ந்து கொள்ளும் போது உற்சாகத்தில் மிதப்பாராம். இப்படி இனிமையாக சென்று இருந்தது அவரது வாசிப்பு வசந்தம். அவரது ஆட்டோ ஸ்டாண்டில் ஏற்பட்ட சிறு பிரச்னையால் அவரால் நூலகம் செல்ல முடியவில்லை.

மிகவும் கவலையுற்று இருந்தவர், இந்த வழியில் வரும் போது நம் குமிழ்முனை வாசிப்பு வண்டியை பார்த்ததும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நம்மிடம் வந்து நிறைய நேரத்தை செலவு செய்து அவர் வாசித்த புத்தகங்கள், அவரின் வாசிப்பு பிரியத்தை பகிர்ந்து கொண்டார். `இனி எனக்கு எந்த கவலையும் இல்லை. தினமும் இரவு குமிழ்முனைக்கு வந்து புத்தகம் எடுத்து சென்று வாசிப்பேன்' என்று கூறி, புன்னகை ததும்ப நம்முடைய வாசிப்பு வண்டியை ஆரத்தழுவிக் கொண்டார். இப்படி ஏதாவது ஒரு நிகழ்வு எங்களுக்கு உற்சாக மழையாக மக்களிடமிருந்து பரிசாக கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
'இதுவரை 120 புத்தகங்கள் வெளியிட்டுள்ளோம்....'
என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் புத்தகத்தின் சுகத்தையும், வாசனையும் நம் மனதை கட்டிப்போடும் வித்தையும் அவற்றால் ஒரு போதும் செய்ய இயலாது. பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை வாசகர்கள் அனைவரும் எங்களை வியந்து பாராட்டுகின்றனர். அவர்கள் எங்களுக்கு கொடுத்த உற்சாகம்தான் இன்றைக்கு வரை உத்வேகத்துடன் எங்களை அழைத்துச் செல்கிறது.

அது மட்டுமல்லாமல், இளம் எழுத்தாளர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் புத்தகம் போட எங்களுடைய 'குமிழ்முனை' பதிப்பகம் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது. இதுவரை 120 புத்தகங்கள் வெளியிட்டுள்ளோம். மேலும் தினம் ஒரு கவிதை போட்டி, வாசிப்பு திட்டம் , படைப்பாளர் அரங்க போட்டி, புத்தக விமர்சன போட்டி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை படவரி பக்க கலந்துரையாடல், புத்தகப் பார்வை, மாதம் இரண்டு முறை சுவையான இலக்கிய நிகழ்வு இப்படி குமிழ்முனை, வாசகர்களுக்காக விறுவிறுப்பாக ஓயாமல் செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

'அனைத்தையும் நான் மக்களுக்கு காட்சிப்படுத்துவேன்...'
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இரவு 8.00 மணி முதல் 10.00 வரை எங்கள் குமிழ்முனை வாசிப்பு வண்டி நிற்க வேண்டும். இதுவே எங்களது மிகப்பெரிய லட்சிய கனவு. நான் சமூகம் சார்ந்த புத்தகங்கள் மிகவும் படிப்பேன். அம்பேத்கர், சே.குவரா போன்ற புத்தகங்கள் என்னிடம் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அவை அனைத்தையும் நான் மக்களுக்கு காட்சிப்படுத்துவேன். மேலும் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள் புத்தகங்கள் ஏராளமாக வாசிக்கிறார்கள்.
செல்போனில் மூழ்கிக் கிடக்கும் மக்களை எங்களது குமிழ்முனை வாசிப்பு வண்டி, புத்தக வாசிப்பை நோக்கி இழுத்துச் செல்கிறது." என்று கூறி நிறைவு பெற்றார், சைமன்.



















