"ஹிட்லர்தான் எனது உத்வேகம்" - சர்ச்சையான தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்ச...
காலத்தை வென்ற கலைஞன் : ஒரு தேசாந்திரி வாழ்க்கையில் பல பருவங்களில் பயணித்த விஜய்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நான் தேசாந்திரியாகப் பயணம் செய்தபோது, மொழிகள் மாறின. பண்பாடுகள் மாறின. உணவுப் பழக்கங்கள் மாறின. மனிதர்களின் வாழ்க்கை முறைகளும், உலகைப் பார்க்கும் பார்வைகளும் மாறின.
பல இடங்களில், பல்வேறு மொழிகளைப் பேசும் மனிதர்களுடன் உரையாடும்போது, “உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்?” என்ற கேள்வி இயல்பாக எழும். உலக சினிமாக்கள் மீது எனக்கு இருக்கும் ஈடுபாட்டின் காரணமாக, நான் பொதுவாக ஒரு குறிப்பிட்ட நடிகரின் பெயரை உடனே கூறுவதில்லை. ஆனால் ஆச்சரியமான விதமாக, நான் சந்தித்த பலரும் தாமாகவே ஒரு பெயரைச் சொல்லுவார்கள். “விஜய்.”

அந்த பெயர் ஒருமுறை அல்ல. இருமுறை அல்ல. எண்ணற்ற முறை என் காதுகளில் ஒலித்திருக்கிறது. வட இந்தியாவின் ஒரு சிறிய கிராமத்தில் சந்தித்த இளைஞனிடமிருந்தும், வடகிழக்கு மாநிலங்களில் பழகிய மாணவர்களிடமிருந்தும், நகரங்களின் பரபரப்பான வீதிகளில் சந்தித்த சாதாரண மக்களிடமிருந்தும், “I love Vijay”, “Vijay is my favourite”, “I like Vijay” என்ற வார்த்தைகள் பலமுறை என்னை வந்தடைந்துள்ளன.
என் நினைவுகளோடு தொடர்ந்துப் பயணித்த ஒரு கலைஞன் என்றால் அது விஜய். எனக்கு விஜய் என்பது ஒரு நடிகரின் பெயர் மட்டுமல்ல,என் தலைமுறையின் கூட்டு நினைவுகளின் ஒரு பகுதி. சில நடிகர்களை நாம் ரசிகர்களாக மட்டுமே ரசிப்போம். ஆனால், சிலரை நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே உணர்வோம்.
அவருடைய திரைப்படங்கள் எனக்கு வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, என் வாழ்க்கையின் பல பருவங்களோடும், நினைவுகளோடும், உணர்வுகளோடும் பின்னிப் பிணைந்தவை. நான் எல்கேஜி படித்துக் கொண்டிருந்த காலத்தில் முதன்முதலாக பார்த்த விஜய் திரைப்படம் “ துள்ளாத மனமும் துள்ளும்” . அந்த வயதில் அந்த திரைப்படத்தின் ஆழத்தையோ, கதையின் உணர்வுகளையோ புரிந்துக்கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லை. இருந்தாலும் அந்த திரைப்படம் என் மனதில் ஒரு அழியாத தடத்தைப் பதித்தது.
குறிப்பாக “இன்னிசை பாடிவரும்” பாடல் என் நினைவுகளில் இன்னமும் பசுமையாக இருக்கிறது. என் சிறு வயது தோழி பத்மப்ரியா, அவளின் பள்ளியின் ஆண்டு விழாவில் அந்தப் பாடலுக்கு நடனமாடியதை நான் இன்றும் மறக்கவில்லை.

இன்று கூட அவளை சந்திக்கும்போது அந்த நிகழ்வை நினைவுக் கூர்ந்துப் பேசுவேன். ஒரு பாடல், ஒரு நடனம், ஒரு திரைப்படம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் வாழ்வது அந்த படத்தின் தாக்கத்திற்குச் சான்றாகும். அந்த திரைப்படத்தில் விஜயின் நடிப்பு மிகுந்த மென்மையுடனும் இயல்புடனும் அமைந்திருந்தது.
அந்த திரைப்படத்தில் வரும் குட்டி என்ற கதாபாத்திரம் இன்றளவும் மறக்க முடியாத ஒன்று. திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் தனது காதலி உயர்ந்த பதவியில் இருப்பதை தொலைவில் இருந்து பார்த்தபடி, அவளது வாகனத்தைத் தொடர்ந்து ஓடும் விஜயும், அவருக்குப் பின்னால் அன்போடு ஓடும் அந்த நாயும், மனித அன்புக்கும் உயிரினங்களின் பாசத்திற்கும் இடையிலான அழகிய உறவை வெளிப்படுத்துகின்றன. அந்த நாயை அவர் கையாளும் விதத்திலும், அதனுடன் பகிர்ந்துகொள்ளும் அன்பிலும் ஒரு அபூர்வமான மனிதநேயம் ஒளிந்திருக்கிறது.
“காதலுக்கு மரியாதை” திரைப்படத்தை நினைத்தாலே முதலில் மனதில் தோன்றுவது அதன் மென்மையான காதலும், அமைதியான உணர்வுகளும் தான். அந்த திரைப்படத்தில் விஜய் வெளிப்படுத்திய காதலின் நாகரிகம், பணிவு மற்றும் அன்பின் ஆழம் இன்றளவும் மனதை வருடுகிறது.
“என்னைத் தாலாட்ட வருவாளோ” என்ற பாடல் ஒலிக்கும் ஒவ்வொரு முறையும், காதலை ஆரவாரமாக அல்லாமல் அமைதியாக உணர்த்திய அந்த இளைஞனின் முகம் நினைவில் மலர்கிறது. அந்தக் காலத்தில் பல இளைஞர்களின் இதயங்களை அவர் கொள்ளையடித்ததற்குக் காரணம் அவரது அழகோ, நடனமோ மட்டுமல்ல,காதலை மதிக்கும் அந்த நெஞ்சின் தூய்மையே. அதேபோல் “யூத்” திரைப்படமும் என் மனதில் தனித்த இடம் பெற்றுள்ளது.

காதலை உண்மையாக நேசித்து, அதற்காக இறுதிவரை போராடும் ஒரு இளைஞனின் மனநிலையை அந்த திரைப்படம் அழகாகச் சித்தரிக்கிறது. காதலுக்காக காத்திருப்பதும், விட்டுக்கொடுக்காமல் நம்பிக்கையுடன் இருப்பதும் எவ்வளவு உயர்ந்த உணர்வு என்பதை அந்த கதாபாத்திரம் உணர்த்தியது. “ப்ரண்ட்ஸ் “ திரைப்படம் என் குழந்தைப் பருவ நினைவுகளோடு பின்னிப்பிணைந்த ஒன்று. அந்த திரைப்படத்தில் வரும் அரவிந்த் கதாபாத்திரத்தின் நகைச்சுவை, நட்பின் மீது கொண்டிருந்த அளவற்ற பாசம் மற்றும் நண்பர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் மனப்பான்மை என்னை மிகவும் பிடித்த ஒன்று. அந்த திரைப்படத்தின் தாக்கம் எங்கள் நட்பிலும் பிரதிபலித்தது.
என் தோழிகளான ஷோபனா, திலகா மற்றும் நான் மூவரும் அந்த திரைப்படக் கதாபாத்திரங்களோடு நம்மை ஒப்பிட்டு பேசிக்கொண்ட நாட்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. “நான்தான் விஜய்”, “இல்லை, நான்தான் விஜய்” என்று குழந்தைத்தனமான வாக்குவாதங்களில் கூட அந்த கதாபாத்திரங்களின் தாக்கம் வெளிப்பட்டது. அதன்பிறகு என்னை ஆழமாக பிடித்த திரைப்படம் “ப்ரியமானவளே” .
வெளிப்படையாக கவலையற்ற இளைஞனாகத் தோன்றும் கதாநாயகன், தனது மனைவியிடம் வெளிப்படுத்தும் அன்பும் அக்கறையும் அந்த திரைப்படத்தின் உயிர்நாடியாக அமைந்திருந்தது. குறிப்பாக விஜயின் சின்னச் சின்ன முகபாவனைகள், புன்னகை, வசன உச்சரிப்பு ஆகியவை அந்த கதாபாத்திரத்திற்கு தனித்துவமான அழகை அளித்தன. அந்த திரைப்படம் முழுவதும் நேர்மறை உணர்வுகளால் நிரம்பியிருந்தது.
எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான விஜய் திரைப்படம் என்றால் அது நிச்சயமாக “குஷி” தான். அந்த திரைப்படத்தில் இடம்பெறும் பெண் கதாபாத்திரம் பல இடங்களில் என்னுடைய சிந்தனைகளையும் குணாதிசயங்களையும் பிரதிபலிப்பது போல எனக்குத் தோன்றும். அதனால் அந்த திரைப்படம் எனக்கு வெறும் படமல்ல, அது என் வாழ்க்கையோடு இணைந்த ஒரு உணர்வு. விஜய் நடித்த சிவா என்ற கதாபாத்திரம் இன்றளவும் மறக்க முடியாத ஒன்று. அவரது துறுதுறுப்பான பேச்சு, குறும்புத்தனம், காதலை வெளிப்படுத்தும் விதம், நடனங்கள், நகைச்சுவை என அனைத்தும் அந்த கதாபாத்திரத்தை உயிர்ப்புடன் நிறுத்தின. அந்த திரைப்படத்தின் வசனங்கள் எனக்கு மனப்பாடம் என்றே சொல்லலாம்.

பல முறை அந்த திரைப்படத்தை பார்த்திருப்பதால், தொலைக்காட்சியில் ஒலியை குறைத்துவிட்டு நானே வசனங்களைப் பேசும் அளவிற்கு அது என் மனதில் பதிந்திருக்கிறது. நண்பர்கள் கூட சில நேரங்களில் என் பேச்சு அல்லது செயல்களைப் பார்த்து, “இது குஷி படத்தோட பெண் கதாபாத்திரம் மாதிரி இருக்கே!” என்றுக் கூறுவார்கள். அதேபோல் “சச்சின்” திரைப்படமும் என் பள்ளிப் பருவ நினைவுகளோடு கலந்திருக்கிறது. விடுமுறை நாட்களில் அத்தை வீட்டிற்கு சென்று, என் தம்பி விக்கியுடன் சேர்ந்து அந்த திரைப்படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். அப்போது அவன் வீட்டில் வாங்கி வைத்திருந்த சிடிக்களில் பெரும்பாலானவை விஜய் திரைப்படங்களாகத்தான் இருந்தன. சச்சின் திரைப்படத்தின் இளமைத் துடிப்பு, காதல், நகைச்சுவை மற்றும் கதாபாத்திரங்களின் இயல்புத்தன்மை என்னை மிகவும் பிடித்த ஒன்று. குறிப்பாக அந்த திரைப்படத்தில் வரும் பெண் கதாபாத்திரத்தில் என்னுடைய சில குணங்களை நான் காண முடிந்தது.
என்றென்றும் புத்துணர்ச்சியை அளிக்கும் திரைப்படம் என்றால் அது “கில்லி” . எவ்வளவு சோர்வாக இருந்தாலும் அந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டால் மனதில் ஒரு புதிய உற்சாகம் பிறக்கும். அதில் வரும் கபடி வீரரான வேலு கதாபாத்திரம் சாதாரண இளைஞனின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் பிரதிபலிக்கிறது.
திரைப்படத்தின் இறுதியில் விமான நிலையத்திலிருந்து கதாநாயகியை அனுப்பிவிட்டு மீண்டும் கபடி மைதானத்தில் விளையாடும் காட்சியும், அப்போது எதிர்பாராத விதமாக கதாநாயகி அவரது முன்னால் தோன்றும் தருணமும் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது புதிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் துள்ளலான ஆற்றலை வழங்குபவை.
மனதில் இருக்கும் சோர்வையும் கவலையையும் மறக்கச் செய்து, வாழ்க்கையை மீண்டும் உற்சாகமாக எதிர்கொள்ளும் மனநிலையை உருவாக்குகின்றன. அதனால் தான் கில்லி திரைப்படம் எனக்கு எப்போதும் ஒரு நேர்மறை ஆற்றலின் அடையாளமாக இருக்கிறது. “திருப்பாச்சி, ஆதி, சிவகாசி,மதுர, நண்பன், தமிழன் போன்ற திரைப்படங்களிலும் விஜய் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருப்பார். ஒரு திரைப்படத்தில் பார்த்த விஜயை மற்றொரு திரைப்படத்தில் காண முடியாது. ஒவ்வொரு கதைக்கும் ஏற்றபடி தன்னை மாற்றிக்கொள்ளும் அவரது திறமையே அவரை ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கச் செய்திருக்கிறது.

விஜயின் திரைப்படங்களை நான் நேசிப்பதற்கான காரணம் அவரது வெற்றியோ, புகழோ மட்டுமல்ல. அவர் ஏற்ற கதாபாத்திரங்களில் வெளிப்பட்ட மனிதநேயம், அன்பு, நட்பு, மரியாதை மற்றும் மென்மைதான். கதாநாயகியை அவர் கையாளும் விதத்திலும் கூட ஒரு நாகரிகம் இருக்கும். காதலை வெளிப்படுத்தும்போதும், நட்பை கொண்டாடும்போதும், குடும்பத்தை மதிக்கும்போதும், எவருடைய மனதையும் காயப்படுத்தாத ஒரு மென்மையான அணுகுமுறை அவரது பல கதாபாத்திரங்களில் வெளிப்பட்டிருக்கிறது. காலம் மாறலாம். தலைமுறைகள் மாறலாம்.
திரைப்படங்களின் மொழியும் வடிவமும் மாறலாம். ஆனால் சில நினைவுகள் மட்டும் காலத்தை வென்று நிலைத்திருக்கும். என் வாழ்க்கையில் அப்படிப்பட்ட அழியாத நினைவுகளில் ஒன்றாக விஜயின் திரைப்படங்கள் என்றும் இடம்பிடித்திருக்கும். அவை வெறும் திரைக்கதைகள் அல்ல, என் மனதின் ஒரு பகுதி. என் குழந்தைப் பருவத்தின் வாசனை. என் இளமையின் இசை. என் நினைவுகளின் நித்திய அத்தியாயம். இன்று நான் விஜயின் புதிய திரைப்படங்களை தொடர்ந்து பார்ப்பது குறைந்திருந்தாலும், அவரது பழைய திரைப்படங்கள் என் மனதில் இன்னும் நிலைத்திருக்கின்றன. பலர் விஜயின் பயணத்தை மிகவும் எளிதாகப் பார்க்கிறார்கள்.
“அவருடைய தந்தை திரைப்பட இயக்குநர்”, “அவருக்கு வாய்ப்புகள் எளிதாகக் கிடைத்தன” என்று சில வாக்கியங்களில் அவரது பயணத்தைச் சுருக்கிவிடுகிறார்கள். ஆனால் ஒரு படைப்பாளியாக நான் அந்த பார்வையை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு மனிதனின் பிறப்பிடத்தை வைத்து அவருடைய பயணத்தை அளவிட முடியாது. ஒரு மனிதர் எங்கு பிறந்தார் என்பது முக்கியமல்ல, அவர் எத்தனை தடைகளை கடந்து தனது இடத்தை உருவாக்கினார் என்பதுதான் முக்கியம். ஒருவர் கோடீஸ்வரனின் மகனாக இருக்கலாம்.
ஆனால் அந்த மனிதனின் தனிப்பட்ட போராட்டங்களையும், அவர் மனதில் நிகழ்ந்த தனிமைகளையும், அவர் எதிர்கொண்ட விமர்சனங்களையும், அவர் தன்னைத்தானே நிரூபிக்க எடுத்த முயற்சிகளையும் வெளியிலிருந்து யாராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது.
வெளியில் இருந்து நின்று கருத்துக்களைச் சொல்வது எளிது. ஆனால் அந்தப் பாதையில் நடந்து சென்றவரின் காலடிச் சுவடுகளில் மறைந்திருக்கும் வலிகளையும் முயற்சிகளையும் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானதல்ல. விஜயின் ஆரம்பகால திரைப்படங்களை இன்று திரும்பிப் பார்க்கும்போது, ஒரு நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவர் எடுத்த அயராத முயற்சிகள் தெளிவாகத் தெரிகின்றன.

ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், தன்னை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களுக்குக் கூட தனது உழைப்பின் மூலம் பதில் சொல்ல வேண்டும் என்ற உறுதியும் வெளிப்படுகின்றன. ஒரு நடிகராகத் தொடர்ந்து தன்னை அப்டேட் செய்துகொள்வது எளிதல்ல. 'தளபதி' என்று அன்போடு அழைக்கப்படும் அவர், சமூகப் பொறுப்புணர்வு கொண்ட படங்களிலும் நடித்தது பாராட்டுக்குரியது. அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று, காலத்தின் மாற்றங்களை உணர்ந்து தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் அவரது மனப்பாங்கு.
ஒரு கலைஞனாக மட்டுமல்ல, ஒரு மனிதனாகவும் காலத்தின் ஓட்டத்தோடு பயணித்து, தன்னை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக தோன்றுகிறார். குறிப்பாக அவரது திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களில் ஒரு தனித்துவமான அனுபவமாகவே இருந்து வருகின்றன. ஒரு திரைப்படத்தின் பாடல்களுக்காக மட்டுமல்ல, அவர் பேசப்போகும் “என் நெஞ்சில் குடியிருக்கும்” என்பதை கேட்க சில நிமிடங்களுக்காகவே கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள். அவரது ரசிகர்கள் அந்த மேடைப் பேச்சுகளை வெறும் உரைகளாகக் கேட்பதில்லை, தங்களுக்கான ஊக்கமாகவும், நம்பிக்கையாகவும், வாழ்வியல் பாடங்களாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
கடந்த முப்பது ஆண்டுகளாக அவரது ரசிகர்களின் அந்த உணர்வுப் பிணைப்பை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். சில நேரங்களில் அவரது ஒரு வரிக்காகவே கண்களில் கண்ணீர் மல்கும் ரசிகர்களையும் கண்டிருக்கிறேன். அவரைப் பற்றிய இன்னொரு விஷயம் எனக்கு பிடித்தது, வாழ்க்கையை அவர் பார்க்கும் பரந்த பார்வை. வெற்றியின் உச்சியில் நிற்கும் மனிதராக மட்டுமல்லாமல், தோல்விகள், விமர்சனங்கள், சவால்கள், தனிப்பட்ட போராட்டங்கள் என வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைக் கடந்துவந்த ஒருவரின் முதிர்ச்சியான புரிதல் அவரது வார்த்தைகளில் வெளிப்படுகிறது.

இன்று அவர் பெற்றிருக்கும் உயரம் ஒரே நாளில் உருவானதல்ல, பல வருடங்களாக இடைவிடாத உழைப்பும், பொறுமையும், தன்னம்பிக்கையும் சேர்ந்து கட்டியெழுப்பிய பயணத்தின் விளைவு. அந்த உழைப்பை ஒரு படைப்பாளியாக நான் ஆழமாக மதிக்கிறேன். எனக்குத் தெரிந்த பல இளைஞர்கள், அவரது உரைகளில் இருந்து ஒரு சிறிய வரியையாவது எடுத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறார்கள். இந்தக் கட்டுரை ஒரு ரசிகையின் கண்மூடிய புகழாரம் அல்ல. இது முற்றிலும் ஒரு படைப்பாளியின் பார்வை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக என் வாழ்க்கையின் பல்வேறு பருவங்களோடு இணைந்து பயணித்த ஒரு கலைஞனைப் பற்றிய என் நினைவுகளின் பதிவு.
நான் இங்கே எழுதப்போகிறது அரசியல்வாதி விஜயைப் பற்றியதல்ல. புகழின் உச்சியில் நிற்கும் ஒரு நட்சத்திரத்தைப் பற்றியதுமல்ல. ஒரு நடிகராகவும், ஒரு கலைஞராகவும், தனது உழைப்பால் கோடிக்கணக்கான மக்களின் நினைவுகளில் இடம்பிடித்த ஒரு மனிதனைப் பற்றிய என் தனிப்பட்ட அனுபவங்களின் தொகுப்புதான் இது. ஏனெனில் சில கலைஞர்கள் திரைப்படங்களில் மட்டுமே வாழ்வதில்லை. அவர்கள் நம் நினைவுகளில் வாழ்கிறார்கள். நம் குழந்தைப் பருவங்களில் வாழ்கிறார்கள். நம் பயணங்களில் வாழ்கிறார்கள். நம் வாழ்க்கையின் மறக்க முடியாத அத்தியாயங்களாக மாறிவிடுகிறார்கள்.
ஏனெனில் அவர்கள் ஒரு நடிகரை மட்டுமல்ல, ஒரு காலத்தின் மனநிலையையும், அந்தக் காலத்து மனிதர்களின் கனவுகளையும், உணர்வுகளையும் அறிந்துகொள்ள வேண்டும். எனக்கு ஒருநாள் குழந்தைகள் பிறந்தாலோ, அல்லது அடுத்த தலைமுறையினரிடம் ஒரு செய்தியை விட்டுச் செல்லும் வாய்ப்பு கிடைத்தாலோ, நான் அவர்களிடம் சொல்ல விரும்பும் முக்கியமான விஷயம் இதுதான்.
திரைப்படங்களை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காதீர்கள். அவற்றை ஒரு காலத்தின் கண்ணாடியாகவும், மனித உணர்வுகளின் ஆவணமாகவும், சமூகத்தின் நினைவுச் சுவடாகவும் பாருங்கள். இயக்குநர் பாலுமகேந்திரா சார் அடிக்கடி கூறிய ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடிக்கும். “நல்ல படங்களையும் பார்க்க வேண்டும்; கெட்ட படங்களையும் பார்க்க வேண்டும். அப்போதுதான் சினிமாவைப் புரிந்துகொள்ள முடியும்” என்பார். அந்த வார்த்தைகளுக்குள் ஒரு ஆழமான ஞானம் ஒளிந்திருக்கிறது.
ஒரு படைப்பின் உயரத்தை உணர்வதற்கும், அதன் குறைகளை அறிந்துகொள்வதற்கும், பரந்த பார்வை அவசியம். அந்த வகையில், நான் வளர்ந்த தலைமுறையின் உணர்வுகளோடு கலந்து வாழ்ந்த பல திரைப்படங்கள் விஜயின் ஆரம்பகால படைப்புகளில் இருக்கின்றன. அவை வெறும் வணிகத் திரைப்படங்கள் அல்ல,ஒரு காலத்தின் காதல், நட்பு, குடும்ப பாசம், நம்பிக்கை, தியாகம், மனிதநேயம் ஆகியவற்றை சுமந்து நிற்கும் நினைவுக் களஞ்சியங்கள்.
இன்றைய தலைமுறையினருக்கு அந்த திரைப்படங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கிறது. ஒரு தலைமுறை ரசித்த கலைப்படைப்புகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது என்பது வெறும் நினைவுகளைப் பகிர்வது அல்ல, அது ஒரு பண்பாட்டு மரபை பாதுகாப்பதாகும்.
அதனால் தான், நாளைய தலைமுறையினர் உலக சினிமாக்களையும் பார்க்கட்டும், புதிய படைப்புகளையும் ரசிக்கட்டும். அதே நேரத்தில், அவர்கள் ஒரு முறை திரும்பிப் பார்த்து, தங்கள் முன்னோர்கள் ரசித்த அந்த பழைய திரைப்படங்களின் உலகிற்குள்ளும் பயணிக்க வேண்டும். ஏனெனில் சில திரைப்படங்கள் காலத்தை கடந்தும் உயிருடன் இருக்கும். சில கதாபாத்திரங்கள் தலைமுறைகளை கடந்தும் மனிதர்களின் நினைவுகளில் வாழும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா. என் வாழ்க்கையின் பல பருவங்களில், உங்கள் திரைப்படங்கள் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், இனிய நினைவுகளையும் வழங்கியிருக்கின்றன. அதற்காக எனது அன்பான நன்றிகள். ஒரு கலைஞனாக எண்ணற்ற பரிமாணங்களில் பல கதாபாத்திரங்களை உயிர்ப்பித்த நீங்கள், இன்று ஒரு புதிய சமூகப் பொறுப்பை ஏற்றிருக்கிறீர்கள். அந்தப் பயணம் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் அமைய வேண்டும். இது திரைக்கதை எழுதப்பட்ட உலகமல்ல,மக்களின் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைந்த நிஜ வாழ்க்கை.
உங்களை நம்பி நிற்கும் மக்களின் நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேபோல், எப்போதும் நேர்மறை சிந்தனைகளையும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும் பொதுவெளியில் பகிர்ந்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதும் என் விருப்பம். நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும், மனநிறைவும் உங்களுக்கு என்றும் துணையாக இருக்கட்டும். “எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே.” புகழும் வெற்றியும் காலத்தோடு மாறலாம்; ஆனால் மனிதர்கள் மனதில் விதைக்கும் நம்பிக்கையும் நினைவுகளும் நிலைத்திருக்கும். அந்த நம்பிக்கையை என்றும் காத்து, இன்னும் பல நல்ல செயல்களாலும் நேர்மறை எண்ணங்களாலும் மக்களின் மனங்களில் வாழ வாழ்த்துக்கள்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.


















