மல்லிகா - சிறுகதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
“அன்பு இருக்காளாண்ணே?”
குரல் வந்த திசையைப் பார்த்தேன். மல்லிகாதான் நின்றுகொண்டிருந்தாள். நீல நிறப் பாவாடையும் வெள்ளை தாவணியும் அணிந்து புத்தகப் பையை தோளில் மாட்டியபடி நின்றாள் அவள். என் தங்கை அன்பரசியும் அவளும் ஒரே வகுப்பு. எட்டாம் வகுப்பு. தங்கையுடன் உட்கார்ந்து வீட்டுப்பாடம் எழுதவும், தேர்வுக்குப் படிக்கவும் என்று தினமும் எங்க வீட்டுக்கு வருவாள் மல்லிகா..
எனக்கு மூன்று தங்கைகள். அன்பரசிக்கு அடுத்து செல்வியும் காந்தியும். மல்லிகா என் தங்கைகள் மூவருக்கும் தோழி.
படிக்கப் போகிறேன் என்று நாலுபேரும் மாடிக்கு ஓடிவிடுவார்கள். கொஞ்ச நேரம் நிசப்தம் இருக்கும். திடீரென சிரிப்பு சத்தம் வீட்டை இரண்டாக்கும். இவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ ஊர் கதை பேசி கிண்டலும் கேலியுமாக ஒரே கூத்துதான் நடக்கும் அங்கே. ஆனால், பசங்க எல்லாம் நல்ல மதிப்பெண் வாங்கிவிடுவார்கள். அதனால் எங்க அப்பா இவர்களை ஒன்றும் சொல்லமாட்டார்..
ஆனால், என் பாட்டிக்கு மல்லிகாவை பிடிக்காது. “குதிரை” என்று திட்டுவார். “அதென்ன கெக்கெ பிக்கேன்னு ஒரே சிரிப்பு? பொட்டச்சியா லட்சணமா இருக்க வேண்டாம்?” என்று கருவிக்கொள்ளுவார். ஆனால் அவளை நேருக்கு நேர் பார்க்கும்போது பேசாமல் போய்விடுவார். கண்டிக்க முயன்றதில்லை.
ஏனென்றால் மல்லிகாவோட முகராசி அப்படி. அவளைப் பார்த்து திட்டுவதற்கு யாருக்கும் மனசு வராது. அப்படியொன்றும் மல்லிகா ஒரு அழகு தேவதை இல்லைதான். ஆனால் அந்த சிற்றூரில் அவளைவிட ஒரு அழகி இல்லை என்பது எல்லோரும் ஓப்புக்கொள்ளும் விஷயம் .
எங்கள் வீட்டுக்கு மூன்று வீடு தாண்டி ஒரு குறுக்குச் சந்து வரும். மாவு மில் மாசிலாமணித் தேவர் வீட்டு முடுக்கு என்று சொல்லுவார்கள். அந்த சந்தில்தான் மல்லிகாவின் வீடு.
மல்லிகாவோட அப்பா ஒரு புடவை வியாபாரி. வெளியூருக்குப் போய் புடவைகளை வாங்கி வந்து ஊர் ஊராகச் சென்று விற்றுவருவார். ஒரு வெள்ளைத் துணியில் கனசதுரமாக ஒரு மூட்டை. அதனை சுமக்கும் ஆள் பின்னால் வர இவர் கம்பீரமாக முன்னே நடந்து செல்லுவார். ஆள் நல்ல உயரம்; மாநிறமாக இருப்பார். நல்ல களையான முகம்; எப்போதும் சிரித்த முகமாகவே காணப்படுவார்.

அத்தனை புடவைகளையும் பார்த்துவிட்டு ஒன்றும் பிடிக்கவில்லை என்று சொல்லும் பெண்களிடம், “அடுத்த வாரம் புது ஐட்டம் வருது தாயி… உங்களுக்கு ரொம்ப புடிக்கும்…..” என்று சொல்லிவிட்டு கிளம்புவார். ஒரு முணுமுணுப்புகூட செய்யமாட்டார்.
மல்லிகாவின் அம்மா அதற்கு நேர்மாறானவள். நல்ல சிவப்பு நிறம், வெடவெடவென ஒல்லியான உடல், மத்திமமான உயரம்; எப்போதும் வாயில் குதப்பிய வெற்றிலை புகையிலை.. ஆளைப் பார்த்தாலே கொஞ்சம் பயமாக இருக்கும். யாரிடம் பேசினாலும், “வா..சண்டைக்கு” என்பதுபோலத்தான் பேசுவாள் அவள்.
ஒரு நள்ளிரவில் இவர்கள் வீட்டில் ஒரு திருடன் புகுந்துவிட்டான். அப்போது மல்லிகாவின் அப்பா ஊரில் இல்லை. இந்த அம்மாவே அந்த திருடனை மடக்கிப் பிடித்து, வாசலில் உள்ள பூவரச மரத்தில் கட்டிப்போட்டுவிட்டாள். பொழுது விடிவதற்குள் அவனை விறகு கட்டையால் சாத்து சாத்தென்று சாத்தியதில், வாயிலிருந்து ரத்தம் ஒழுக மயங்கிய நிலையில் இருந்தான் அவன். காலையில் ஊர் மக்கள் வந்து பார்த்து கேட்டதற்கு அப்புறம்தான் சொல்லுகிறாள், “களவாணிப் பய.. ராத்திரி ஊட்டுக்குள்ள பூந்துட்டான். அதான் புடிச்சி கட்டி வச்சேன்…”
என் தங்கை பள்ளியிறுதிக்கு அப்புறம் கல்லூரியில் சேர்ந்தாள். ஆனால் மல்லிகாவை கல்லூரிக்குப் அனுப்பவில்லை அவர் பெற்றோர். அப்பொழுதே அவள் ஒரு முழு பெண்ணாக பரிமளித்தாள். “சீக்கிரமா கல்யாணம் பண்ணிடுவாங்க போலிருக்கு” என்று சொன்னாள் என் தங்கை….
இந்த கால ஓட்டத்தில், நான் என் கல்லூரிப் படிப்பை முடித்து, சென்னையில் ஒரு வேலையில் அமர்ந்துவிட்டேன். என் தங்கை அவளது கல்லூரிப் படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே அவளுடைய திருமணம் நடந்தேறியது.
தங்கை திருமணம் முடிந்த கையோடு, எனக்கும் தூத்துக்குடிக்கு மாற்றல் கிடைத்து, நாங்கள் எல்லோரும் தூத்துக்குடியில் குடியமர்ந்தோம்.
கலை வீட்டுக்கு எதிர் பக்கம் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் வைத்திருக்கும் மணியை ஒரு நாள் தூத்துக்குடியில் பார்த்தேன். மணி என்னைவிட ஒரு வயது சிறியவன். என்னை ‘அண்ணாச்சி’ என்று கூப்பிடுவான். மல்லிகாவை ரகசியமாக சைட்டடிப்பவர் கோஷ்ட்டியில் இவனும் ஒருவன்… அவன்தான் சொன்னான், “உங்களுக்கு சேதி தெரியுமா அண்ணாச்சி? மல்லியோட அப்பா மண்டையப் போட்டுட்டாரு. மதுரையில சரக்கு வாங்கிக்கிட்டு இருக்கையில அங்கனையே உயிர் போயிடுச்சி. அவிய எல்லாம் வீட்டைக் காலி பண்ணிட்டு சொந்த ஊருக்குப் போயிட்டாவ….” அவர்களுக்கு சொந்த ஊர் திருநெல்வேலிக்கு அருகில் தச்சநல்லூர் என்னும் ஒரு சிற்றூர்.
“மல்லிகாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா மணி?”
அப்படி ஒன்றும் நடக்கவில்லையாம். சொந்தத்தில் மாப்பிள்ளை ரெடியா இருக்கிறானாம். கல்யாணமெல்லாம் அவங்க ஊரிலேயே நடத்திக்குவாங்களாம்.

ஒரு கணம் மல்லிகா என் மனக்கண்ணில் தோன்றினாள். அவள் பள்ளியிறுதி முடித்து இப்போது நான்கு ஆண்டுகளாகிவிட்டிருந்தன. இன்னேரம் சொந்தக்கார பையனை கல்யாணம் பண்ணிக்கொண்டு பிள்ளை பெற்றிருப்பாள். என்னை நேரில் பார்த்தால் விடமாட்டாள். “வீட்டுக்கு வாங்க அண்ணே. உங்க மருமகப்புள்ளையப் பாத்துட்டு போங்க என்பாள்…” இப்படியாக எண்ணமிட்டுக்கொண்டு வீடுதிரும்பினேன்.
அப்போது அன்பரசி வந்திருந்தாள். அவளிடம் மல்லிகாவை பற்றி நான் கேள்வியுற்ற செய்தியைச் சொன்னேன். “பாவம் மல்லி. அவ அம்மா ஒரு ராட்சசி. யாராவது உருப்படாத பயலைப் பாத்து கட்டி வச்சிருப்பா… நாம் ஒரு நாள் அவளப் போயி பாத்துட்டு வரலாமாண்ணே?” என்று கேட்டால் அன்பு.
“ஓ… போகலாமே… உன்னோட முசுட்டு மாப்பிள்ளை கிட்டே பெர்மிஷன் வாங்கிடு. இல்லைன்னா தையா தக்கான்னு குதிக்கப் போறார்” என்றேன் நான்.
ஒரு மாதம் கடந்திருக்கும். நாகர்கோயிலில் எங்கள் நண்பன் ஒருவனுக்குத் திருமணம். அலுவலகத்திலிருந்து கும்பலாக மோட்டார் சைக்கிளில் கிளம்பினோம். மொத்தம் ஐந்து பைக்குகளில் பத்து பேர். நானும், பிரசாத் எனும் மேற்குவங்காளத்து நண்பனும் என்னுடைய பைக்கில்.
திருமணம் முடிந்த கையோடு, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் என்று ஊர் சுற்றி இரண்டு நாட்கள் கழிந்தன. தூத்துக்குடி திரும்பிவரும் வேளையில், நெல்லையை நெருங்கும்போது எனது பைக்கின் ஹெட் லைட் வேலை செய்யவில்லை. மணி எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது. நன்றாக இருட்டியதோடு மட்டுமல்லாமல், மழைவேறு தூற ஆரம்பித்துவிட்டது.
இரண்டு நாள் அலைச்சலால் உடல் அசதி மேலோங்கியதால், நெல்லையில் அன்று இரவு தங்கிவிட்டு, மறு நாள் ஊருக்குத் திரும்பலாம் என்று நானும் பிரசாத்தும் முடிவு செய்தோம். மற்றவர்கள் நிற்காமல் ஊருக்குப் போய்விட்டார்கள். நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் போட்டோம். முதலில் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு சாப்பிடுவதற்காக கீழே இறங்கிப் போனபோதுதான் அவளைப் பார்த்தேன்.
உதட்டுச் சாயம், தலை நிறைய மல்லிகைப் பூ, முழங்கையை மறைக்கும் ரவிக்கை, பளபளக்கும் சேலை…. லாட்ஜ் வாசலில் இருந்த அந்த பெட்டிக்கடைக்கு அருகில் அரையிருட்டில் நின்றிருந்தாள் அவள். தொழில்முறையான பெண்மணி என்பது புரிந்தது.
ஆனால் இவளை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று தோன்றியது. ஆனால் எங்கே என்பது நினைவுக்கு வரவில்லை.

ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு திரும்புகையில், என்னையறியாமல் அந்த பெட்டிக்கடையை நோட்டமிட்டேன். அவள் அங்கேதான் நின்றிருக்கிறாள் இன்னமும். யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு இருப்பதைப் போல பதட்டத்துடன் இருப்பது தெரிந்தது.
பிரசாத் நேரே அந்த பெட்டிக்கடைக்கே போய் சிகரெட் வாங்கினான். நானும் அவனுக்குப் பின்னால் போய் நின்றேன். அப்பொழுது அந்தப் பெண் திடீரென இரண்டு தப்படி முன்னே வந்து, “அண்ணே… என்னைத் தெரியுதா? “ என்றாள்.
நான் ஒரு கணம் ஆடிப்போனேன். ஆமாம். அவள் மல்லிகாவேதான்.
இது என்ன கோலம்? ஏன் இந்த கோலம்? எனக்கு வார்த்தை வரவில்லை.
நான் திகைத்து நின்ற வேளையில் அவள் மேலும் முன்னால் வந்து என் கையைப் பற்றிக்கொண்டாள்.
“என்னை காப்பாத்துங்கண்ணே… என்னை உங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு போயிடுங்க. இல்லேன்னா நா செத்துடுவேண்ணா….” என்று அழ ஆரம்பித்தாள்.
பிரசாத் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்தான். பெட்டிக்கடைக்காரன் கடையை விட்டு வெளியே வந்து என்னை உற்றுப் பார்த்தான். அங்கே நின்ற சிறு கூட்டமும் என்னையே முறைப்பதுபோல என் உடம்பெல்லாம் குறுகுறுத்தது.
ஒரு வழியாக வாயைத் திறந்து பேசினேன். “என்ன ஆச்சு மல்லிகா? ஏன் இப்படி? உங்க அம்மா எங்கே?”
அவள் உடைந்து அழுதாள். “எங்க அம்மையாலதான் நான் இப்படி நிக்கேன் அண்ணே…. அவ கொடுமை தாங்கமத்தான் நா இப்படியாயிட்டேன்………” என்று தேம்பினாள்.
எனக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை.
அப்பொழுது அங்கே வந்தான் அந்த வாலிபன். இருபத்தி ஐந்து வயது இருக்கும். கல்லூரி மாணவன் போல உடையலங்காரம். சட்டையை இன் பண்ணி பெல்ட் அணிந்து பார்க்க டீசென்ட்டாக இருந்தான்.
வந்தவன் ஒரு கையால் என் சட்டையைப் பிடித்து என்னை எக்கித் தள்ளினான். மறு கையால் பளார் என்று மல்லிகாவின் கன்னத்தில் ஒரு அறைவிட்டான். “ஐயோ …..: என்று அலறிய அவள் அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டாள்.
“என்னாட்டீ.. புது சொக்காரன் வந்துட்டானா? அவனோட ஓடிப்போவலாமுன்னு ப்ளான் போடுதியா? கொடலை உருவிடுவேன்… நாயே….” என்று திட்டிவிட்டு, என்னை நோக்கித் திரும்பினான்.
“யார்லே நீ? என்ன பேசிகிட்டு இரிக்கே என் பெண்டாட்டிக்கிட்டே??? மருவதையா ஓடிடு… இல்லே உன்னை இந்த இடத்திலேயே பொலி போட்டுவேன்…..”என்று மிரட்டியதோடு தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு மடக்குக் கத்தியை எடுத்து விரித்தான்.
பிரசாத் என் கையைப் பிடித்து இழுத்தான், “வந்துடு போயிடலாம்…”
“அண்ணே என்னை விட்டுட்டு போயிடாதீங்க அண்ணே என்று மல்லிகா கதறினாள். அவளுக்கு மேலும் நான்கு ஐந்து அடி விழுந்தது அவள் கணவனிடமிருந்து.
திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நான் அவ்விடத்தைவிட்டு அகன்றேன்.
வேறு வழி எனக்குத் தெரியவில்லை.
என் கண்முன்னால் அந்த அற்புதப் பெண் சீரழிந்தாள்.
“என்னைக் காப்பாற்று” என்று கதறியபோதும் கையாலாகத மனிதனாக நான் ஓடி வந்துவிட்டேன்.
ஆண்டுகள் பல கடந்துவிட்டன. மல்லிகாவின் நினைவு வந்தாலே என் மனம் கனத்து நான் துவண்டு போய்விடுகிறேன். இப்போதும் திடீரென்று மல்லிகா என் கனவில் வருகிறாள். சிரிக்கச் சிரிக்க பேசுகிறாள். திடீரென்று “என்னைக் காப்பாத்த மாட்டியா?” என்று கதறுகிறாள். அவளது கைகள் என்னை நோக்கி நீள்கின்றன
நானோ அவளிடமிருந்து தப்பி ஓட எத்தனிக்கிறேன். என் கால்கள் கல்லாய் போயின; நகர மறுக்கின்றன





















