கோவை சிறுமி கொலை வழக்கில் கைதானவர் மீது சக கைதிகள் தாக்குதல் – சிறைக்குள் நடந்தது என்ன?
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, கடந்த 21ம் தேதியன்று மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பததால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர் மறுநாள் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் அச்சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்ததும், அவரது நண்பரான மோகன் குற்றத்தை மறைக்க உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக காவல் துறையினர் கைது செய்ய முயன்ற போது கார்த்திக் தப்பியோட முயன்றபோது, கட்டடத்தில் இருந்து கீழே விழுந்ததில் வலது கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், நேற்று முன்தினம் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் சிறைக்குள் கார்த்தி மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஸ்பூன், தட்டு உள்ளிட்ட பொருள்களால் தாக்குதல் நடத்தியதில், பலத்த காயம் அடைந்த கார்த்தி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




















