’மாணிக்கம் தாகூரை ராஜினாமா செய்யச் சொல்ல திமுக-விற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?...
சென்னையின் இருளை வென்ற மின்சுடர்: 1930-களின் தடைகளைத் தகர்த்த முதல் பெண் பொறியாளரின் கதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் அய்யலசோமயாஜுலா லலிதா 1919-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி தெலுங்கு பேசும் நடுத்தர குடும்பத்தில் சென்னையில் பிறந்தார். அவருக்கு நான்கு மூத்த மற்றும் இரண்டு இளைய உடன்பிறப்புகள் இருந்தனர். இந்தியாவில் குழந்தை திருமணங்கள் சாதாரணமாக இருந்த 1900-களின் முதல் காலாண்டில் தனது பதினைந்தாவது வயதில், 1934-ஆம் ஆண்டு லலிதா திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்த அவரது படிப்பு இடைநிலைப் பள்ளியில் தடைபட்டது. அவரது மகள் ஷியாமலா 1937--ஆம் ஆண்டு பிறந்தார். லலிதாவின் கணவர் இறந்தபோது ஷியாமலாவுக்கு நான்கு மாதங்களே ஆகியிருந்தது. தனது குடும்பத்தின் ஆதரவுடன், தனக்கும் தன் மகளுக்கும் ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள லலிதா சிந்தித்தார். இளம் விதவையாக குழந்தையுடன் இருந்த லலிதா, சுயசார்புடன் வாழ கல்லூரிக்குச் சென்று ஒரு தொழில்முறைப் பட்டம் பெற விரும்பினார்.

லலிதா தனது இடைநிலைத் தேர்வுகளை சென்னையில் உள்ள குயின் மேரி கல்லூரியில் எழுதி, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொழில்நுட்பக் கல்வி ஆண்களுக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்ட காலகட்டத்தில் தனது தந்தை மற்றும் சகோதரர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஒரு பொறியாளராக வேண்டும்என லலிதா தீர்மானித்தார். அவர் ஒரு சிறந்த மாணவியாக திகழ்ந்த போதிலும் ஆசியாவின் பழமையான தொழில்நுட்ப நிறுவனமான கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பயில்வது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை.
கிண்டி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் பேராசிரியராக பணிபுரிந்த லலிதாவின் தந்தை பப்பு சுப்பா ராவ் தனது மகளின் கோரிக்கையை ஏற்று அப்போதைய கல்லூரி முதல்வர் டாக்டர் கே.சி. ஷாக்கோவிடம் பேசினார். பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரியான, பொதுக் கல்வி இயக்குநர் சர் ஆர்.எம். ஸ்டேதம் என்பவரிடம் இருந்து ஷாகோ ஒப்புதல் பெற்ற பிறகு, லலிதா கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.
லலிதா 1940-ஆம் ஆண்டு மின் பொறியியல் மாணவியாக கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அதே ஆண்டு லீலம்மா ஜார்ஜ் மற்றும் தெரசியா ஆகிய இரண்டு பெண்கள் குடிமுறைப் பொறியியல் படிப்பதற்காக கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தனர். இவர்கள் மூவரும் 1943-ஆம் ஆண்டு பட்டம் பெற்றனர். லலிதாவுக்கு மின் பொறியியல் சிறப்புப் பட்டம் 1944 பிப்ரவரியில் வழங்கப்பட்டது.

1943-ஆம் ஆண்டு மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற லலிதா, ஜமால்பூர் ரயில்வே பட்டறையில் தனது தொழிற்பயிற்சியை நிறைவு செய்தார். 1944-ஆம் ஆண்டு சிம்லாவில் உள்ள இந்திய மத்திய தர நிர்ணய நிறுவனத்தில் பொறியியல் உதவியாளராகச் சேர்ந்தார். பின்னர், தனது தந்தையின் ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவுவதற்காக வேலையை விட்டுவிட்டார்.
எலக்ட்ரோமோனியம் என்ற மின்சார இசைக்கருவி, புகையில்லா அடுப்புகள் மற்றும் மின்சார சுடர் உருவாக்கும் கருவி உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைகளைப் பெற்றிருந்த லலிதாவின் தந்தையால் நிதிப் பற்றாக்குறை காரணமாக, 1948-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர முடியாமல் போனது. எனவே கல்கத்தாவில் உள்ள அசோசியேட்டட் எலக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் லலிதா வேலைக்கு சேர்ந்தார்.
அங்கு, அவர் மின் செலுத்துத் தடங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், துணை மின் நிலையத் திட்டங்ககள் ஆகியவற்றுக்கான வடிவமைப்புப் பொறியாளராகப் பணியாற்றினார். பக்ரா நங்கல் அணைத் திட்டத்திற்கான மின்மயமாக்கலை மேம்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். பின்னர், லலிதா ஒரு ஒப்பந்தப் பொறியாளராகப் பல தொழில்நுட்ப மற்றும் நிறுவல் பணிகளைத் திறம்பட மேற்கொண்டார்.
1953-ஆம் ஆண்டு லண்டன் மின் பொறியாளர்கள் கழகத்தின் இணை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட லலிதா, 1966-ஆம் ஆண்டு நிலைப் உறுப்பினரானார். 1964-ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற முதல் சர்வதேச மகளிர் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மாநாட்டில் இந்திய பிரதிநிதியாக கலந்து கொண்டது அவரது தொழில் வாழ்க்கையின் முக்கிய சாதனையாகும். 1964-ஆம் ஆண்டு ஜூன் 15 முதல் 21 வரை நியூயார்க் நகரில் நடைபெற்ற முதல் சர்வதேச மகளிர் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மாநாட்டிலும் லலிதா இந்திய பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகிய துறைகளில் உள்ள பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த லலிதா, தனது மகள் ஷியாமலா அறிவியல், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டில் சிறந்து விளங்க ஊக்குவித்தார். விதவை மறுமணத்தை ஆதரித்த அவர், தன் மகளின் நலனைக் கருத்தில் கொண்டு மறுமணம் செய்து கொள்ளவில்லை. 1977-ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற லலிதா, 1979-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் நாள் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவால் காலமானார்.
உயர் மின்னழுத்த மின் பரிமாற்ற வழித்தடங்களின் வடிவமைப்பில் ஈடுபட்ட லலிதா, மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மின்சாரத்தைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கான மின் பரிமாற்ற வழித்தட வடிவமைப்புகளை திட்டமிட்டார்.
மின்சாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் விநியோகிப்பதற்கும் துணை மின்நிலைய தளவமைப்பை உருவாக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டார். இது மின் விநியோகத்தின் பாதுகாப்பையும் செயல்திறனையும் மேம்படுத்த உதவியது. பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பான தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க உதவிய இவரது பணி, மின் அமைப்புகளில் மின்சார இடையூறுகளைத் தடுத்து விபத்துக்களைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகித்தது.
மின் பொறியியல் என் இரத்தத்தில் ஊறியுள்ளது என கூறியுள்ள லலிதா, அவரது காலத்திற்குப் பின் இத்துறைகளில் பணியாற்ற விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறார். உலகெங்கிலும் இந்தியாவிலும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளை தேர்ந்தெடுத்து கல்வி பெறும் பெண்களுக்கு தங்கள் பாதையில் தொடர்ந்து பயணிக்க, மனவுறுதியும் அத்துறையின் மீதான ஆர்வமும் தேவை என லலிதா வலியுறுத்துகிறார்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



















