செய்திகள் :

உஷார்... செல்லப்பிராணிகளை பலிவாங்கும் வெப்ப அலை: Heat Stroke அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்!

post image

கொளுத்தி எடுக்கும் இந்தக் கோடை வெயில், மனிதர்களாகிய நம்மை மட்டுமல்ல... நம் வீட்டுச் செல்லப்பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகள் உள்ளிட்ட ஜீவன்களையும் கடுமையாக பாதிக்கவே செய்கிறது. குறிப்பாக சென்னை, வேலூர் போன்ற வெப்பமயமான நகரங்களில், இந்த ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke) பிரச்னைகள் செல்லப்பிராணிகள் உரிமையாளர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

வீடுகளில் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக ஒன்றிப்போயிருக்கும் உங்கள் செல்லப்பிராணிகளின் நலனில் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் இந்தக் கோடை காலத்தில் துளியும் அலட்சியம் காட்டக் கூடாது. இந்த வெப்ப அலையின் தாக்கத்தால் மனிதர்களே நிலைகுலைந்து போய்விடும் நிலையில், இந்தச் சிறு ஜீவன்கள் எம்மாத்திரம்?

உள்ளூர் இன நாய்கள், பூனைகளைக் கடந்து, நமது சமூகம் வெளிநாட்டு நாய் மற்றும் பூனை இனங்களையும் பரிச்சயப்பட்டுக் கொண்டிருக்கிறது. `என்னோட வளர்ப்பு நாய் ரொம்ப வேகமா.. அதிகமா மூச்சு விடுது', `என்னோட பூனை வெயிலில் ரொம்ப சோர்வா இருக்கு' எனக் கூறுபவர்கள், `ஆனால், இதெல்லாம் வெயில் காலத்தில் சகஜம் தானே! ஒன்றும் பயப்பட வேண்டாம்' எனக் காட்டும் சிறு அலட்சியம், சில சமயங்களில் உயிரையும் பறித்துவிடுகிறது என்பது கசப்பான உண்மை.

Heat

நாயோ பூனையோ... ஒரு பிராணியின் உடல் வெப்பநிலை அதீத நிலையை அடைந்து, அதன் உடலின் மெக்கானிசத்தால் அத்தகைய வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் நிலையிலேயே, ஹீட் ஸ்ட்ரோக் என்பது ஏற்படுகிறது. மனிதர்களாகிய நமக்கு நம்முடைய உடலே, வெப்பத்தைக் குறைப்பதற்கான வேலைகளைச் செய்யும். உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது, வியர்வை மூலம் வெப்பமானது தணிக்கப்படுகிறது.

ஆனால், நாய்க்கோ... பூனைக்கோ அப்படி இல்லை. நாய்கள் வாயால் மூச்சு விடுவதன் (Panting) மூலம் மட்டுமே வெப்பத்தைக் குறைக்க முயற்சிக்கும். அதே பூனைகள் என வரும்போது, அவற்றின் காலடிப் பகுதிகளில் (Paw pads) மட்டும் வியர்வைச் சுரப்பிகள் (Sweat glands) இருக்கும். அதன் மூலம் கொஞ்சம் வெப்பம் வெளியேறும். ஆனால் இது கோடை வெயிலுக்குச் சொல்லிக்கொள்ளும்படி பயன்தராது. அதனால் அதிக வெயிலில் அவற்றின் உடல் சீக்கிரம் சூடாகிவிடும்.

Heat Stroke அறிகுறிகள் - நாய்கள்

  • வழக்கத்தை விட அதிகமாக மூச்சு விடுதல்

  • நாக்கு சிவந்து வெளியே தொங்குவது

  • சோர்வு மற்றும் தளர்ச்சி

  • வாந்தி

  • நடக்க முடியாமல் தடுமாறுதல்

  • கண்கள் மங்குவது அல்லது சிவந்து போவது

  • திடீர் மயக்கம்

இதில் சில அறிகுறிகள் தென்படலாம்... சில அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். எனவே அறவே அலட்சியம் கூடாது.

Heat Stroke

Heat Stroke அறிகுறிகள் - பூனைகள்

  • வழக்கத்தை விட மிகவும் சோம்பலாக இருப்பது

  • உணவு சாப்பிடாமல் இருப்பது

  • வாயைத் திறந்து நாயைப் போல் மூச்சு விடுவது (இது கொஞ்சம் ஆபத்தான அறிகுறி)

  • உடல் தொட்டுப் பார்க்க முடியாத அளவுக்குச் சூடாக இருப்பது

  • மனிதர்களைத் தவிர்த்து இருட்டான இடங்களில் மறைந்து படுத்துக்கொள்வது

  • வாந்தி அல்லது எச்சில் இயல்புக்கு மாறாக வடிவது (Drooling)

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால், சிறுநீரகச் செயலிழப்பு, மூளைச் சேதம், வலிப்பு (Fits) போன்ற பெரிய பிரச்னைகளும் வரலாம். சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படலாம்.

எந்த வகைச் செல்லப்பிராணிகளுக்கு ஆபத்து அதிகம்?

Heat Stroke-ன் தாக்கத்துக்கு வகை பேதமின்றி நாம் வீட்டில் வளர்க்கக்கூடிய நாட்டு இன (Indie Breed) நாய்கள் மற்றும் பூனைகள் உள்ளிட்ட அனைத்து பிராணிகளும் பாதிப்புக்குள்ளாகலாம். அதிலும் சில குறிப்பிட்ட இன வகைகள் இந்த வெப்ப வாதத்துக்கு எளிதில் இலக்காகக் கூடும்.

அதில் முக்கியமானவை:

  • Persian, Himalayan, Maine Coon, Ragdoll, Siamese போன்ற நீண்ட முடி கொண்ட பூனைகள் (குறிப்பாக முக அமைப்பு தட்டையாக இருக்கும் Full Punch Face பூனைகள்).

  • Pug, Bulldog, Shih Tzu போன்ற தட்டையான முகம் கொண்ட (Flat-face) நாய்கள்.

  • வயதான செல்லப்பிராணிகள் மற்றும் 2-4 மாதக் கால குட்டிகள்.

  • உடல் பருமன் பிரச்னை உள்ள பிராணிகள்.

  • வெயிலில் அதிகம் இருக்கக்கூடிய வெளிப் பிராணிகள் (Outdoor pets).

Heat Stroke
Persian - Heat Stroke

Heat Stroke ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்?

  1. மேலே குறிப்பிட்டிருக்கும் அறிகுறிகள் தென்பட்டால், உடனே குளிர்ந்த இடத்திற்கு அவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.

  2. உடலில் சாதாரணக் குழாய் நீரைத் தெளித்து அல்லது ஈரத்துணியால் துடைத்து, மின்விசிறி (Fan) அல்லது ஏசி (AC) அருகில் ஓய்வெடுக்க வைக்க வேண்டும். (மிகக் குளிர்ந்த ஐஸ் தண்ணீரை நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது).

  3. குடிக்கத் தண்ணீர் கொடுக்க வேண்டும். அவை சுயமாக அருந்தாத பட்சத்தில், மெதுவாகப் புகட்டலாம். ஆனால் மயக்க நிலையில் இருந்தால் கட்டாயப்படுத்தித் தண்ணீர் புகட்ட (Force Feeding) வேண்டாம்; அது நுரையீரலில் இறங்க வாய்ப்புள்ளது.

  4. நிலைமை சரியாகவில்லை என்றால், கொஞ்சமும் தாமதிக்காமல் அருகிலிருக்கும் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

Persian - Heat Stroke

Heat Stroke தாக்கத்திலிருந்து எப்படிப் பாதுகாப்பது?

1. நீர்ச்சத்து (Hydration) மிக அவசியம்!

உங்கள் வீட்டில் செல்லப்பிராணிகள் உலாவும் பல இடங்களில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பவுல்களில் வைக்க வேண்டும். பழைய தண்ணீரை மாற்றிப் புதிய தண்ணீர் வைப்பதை உறுதி செய்ய வேண்டும். மதிய நேரத்தில் குளிர்ந்த நீர் வைக்கலாம். பூனைகளுக்குத் தண்ணீரில் அவற்றிற்குப் பிடித்தமான 'Treats' அல்லது 'Broth' கலந்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடும்.

2. Wet Food எனும் லைஃப் சேவர்!

வெறுமனே உலர்ந்த உணவுகளை (Dry Foods) கொடுப்பதைத் தவிர்த்து, தினமும் ஒருவேளையாவது ஈரப்பதம் மிகுந்த உணவுகளை (Wet Foods) கொடுக்க வேண்டும். இது உடலில் நீர்ச்சத்தை இயல்பாகவே அதிகரிக்கும்.

3. மதிய வெயிலைத் தவிர்க்கவும்

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சிமெண்ட் தரை அல்லது தார் ரோடு வெப்பம் அவற்றின் பாதங்களைப் புண்ணாக்கிவிடும். வீடுகளில் ஏசி (AC) வசதி இருப்பின், மதிய நேரத்தில் அவற்றைப் பயன்படுத்தலாம்.

Grooming

4. Grooming-ன் முக்கியத்துவம்!

அதிக முடி கொண்ட பிராணிகளுக்கு 'சம்மர் ஹேர் கட்' செய்வது வெப்பத்தைக் குறைக்க உதவும். உடலில் முடி குறைவாக இருக்கும்போது காற்றோட்டம் மேம்படும், வெப்பம் உடலில் தங்குவது குறையும்.

செல்லப்பிராணிகளால் தங்களுடைய உடல் பிரச்னைகளை நம்மிடம் நேரடியாகச் சொல்ல முடியாது. அவற்றின் உடல் மொழி மற்றும் நடவடிக்கைகளை வைத்து நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மேற்சொன்ன எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் செல்லப்பிராணிகளுக்கும் இந்தக் கோடை காலம் பாதுகாப்பானதாக அமையும்!

யானை - மனித எதிர்கொள்ளல்: 5 நாள்களில் பறிபோன 3 உயிர்கள் - நீலகிரியில் தொடரும் சோகம்!

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மேற்க... மேலும் பார்க்க