``பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை: தவெக செயலாளர் மீது புகார்; என்ன நடவடிக்கை?" ...
பிரிட்டனை அதிரவைத்த 'கொலைகார' டாக்டர்; 132 பேரைக் கொன்று சொத்துகளை அபகரித்த கதை- குருதிச் சுவடுகள் 3
இங்கிலாந்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள 'ஈஸ்ட்போர்ன்', ஓய்வுபெற்ற செல்வந்தர்கள் அமைதியாக காலத்தைக் கழிக்கும் ஒரு ரம்மியமான நகரம். 1950-களில் அந்த நகரத்தின் மிக உயரிய மரியாதைக்குரிய மனிதராக வலம் வந்தவர் டாக்டர் ஜான் போட்கின் ஆடம்ஸ் (Dr. John Bodkin Adams).
கருணை உள்ளம் கொண்ட மருத்துவர், சர்ச்சுக்குத் தவறாமல் செல்பவர், வயதான நோயாளிகளின் இறுதி நாட்களில் அவர்களின் கையைப் பிடித்து ஆறுதல் சொல்பவர் என்ற பிம்பம் அவருக்கு இருந்தது.
ஆனால், அந்தக் கருணை முகமூடிக்குப் பின்னால் ஒரு கொடூரமான பணவெறி ஒளிந்திருந்தது. தன் நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமான போதை மருந்துகளைக் கொடுத்து, அவர்களை நிரந்தரத் தூக்கத்திற்கு அனுப்பிவிட்டு, அவர்களின் பல கோடி மதிப்பிலான சொத்துக்களைத் தன் பெயருக்கு உயில் எழுதி வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு ஒட்டுமொத்த பிரிட்டனையும் உலுக்கியது.

நம்பிக்கையைப் பெற்ற அணுகுமுறை
1899-ம் ஆண்டு வட அயர்லாந்தின் ரண்டால்ஸ்டவுன் என்ற ஊரில், ஒரு தீவிர மதப்பற்றுள்ள குடும்பத்தில் பிறந்தவர் ஜான் போட்கின் ஆடம்ஸ். தந்தை ஒரு கடிகாரத் தயாரிப்பாளர். சிறுவயதிலேயே தந்தையை இழந்த ஆடம்ஸ், தன் தாயாரின் கண்டிப்பான வளர்ப்பில் வளர்ந்தார். பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்த அவர், 1922-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் நகருக்குக் குடிபெயர்ந்தார்.
ஆரம்பத்தில் சாதாரண மருத்துவராகத் தொடங்கிய ஆடம்ஸ், மிக விரைவிலேயே நகரத்தின் செல்வந்தர்களின் நம்பிக்கையைப் பெற்றார். அதற்குக் காரணம் அவரின் அணுகுமுறை. வயதான, தனிமையில் வாடும் பணக்காரப் பெண்களைக் குறிவைத்து, அவர்களிடம் மிகுந்த பாசத்துடன் பழகினார். மற்ற மருத்துவர்கள் ஐந்து நிமிடத்தில் நோயாளியைப் பார்த்துவிட்டுச் செல்லும் காலத்தில், ஆடம்ஸ் மணிக்கணக்கில் அவர்களுடன் அமர்ந்து தேநீர் அருந்துவார்; அவர்களின் தனிமையைப் போக்குவார்.
மரணங்களும் மர்ம உயில்களும்
1945 முதல் 1956 வரையிலான காலகட்டத்தில், டாக்டர் ஆடம்ஸிடம் சிகிச்சை பெற்ற சுமார் 163 நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இறந்தவர்களில் 132 பேர் தங்கள் மரணத்திற்குப் பிறகு தங்கள் சொத்துக்கள், நகைகள், ரொக்கப் பணம் அல்லது விலைமதிப்பற்ற ஓவியங்களை டாக்டர் ஆடம்ஸுக்கு எழுதி வைத்திருந்தனர்.
அந்தக் காலக்கட்டத்தில் சாதாரண மருத்துவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஆடம்பர வாழ்க்கையை ஆடம்ஸ் வாழ்ந்தார். விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், வைர நகைகள், பிரமாண்டமான பங்களா என அவரின் சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்தது.

பிடிபட்ட தருணம்
1950-ல் எடித் ஆலிஸ் மோரெல் என்ற 81 வயதான செல்வந்த பெண்மணி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆடம்ஸிடம் சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு வலியைக் குறைப்பதாகக் கூறி, மார்பின் மற்றும் ஹெராயின் போன்ற கடுமையான போதை மருந்துகளைத் தொடர்ந்து ஊசி மூலம் செலுத்தினார் ஆடம்ஸ்.
நாளடைவில் எடித் சுயநினைவை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அந்த நேரத்தில், தன் சொத்துக்கள் அனைத்தையும் டாக்டர் ஆடம்ஸுக்கு எழுதி வைப்பதாகப் பல உயில்களை அவர் மாற்றினார். இதில் அவரின் மகனுக்குச் சேர வேண்டிய சொத்துக்களும் அடங்கும். 1950 நவம்பரில் எடித் மரணமடைந்தார். அவரின் மரணச் சான்றிதழில் மூளையில் ரத்தக்கசிவு என்று ஆடம்ஸ் எழுதினார். மேலும், தன் உடலை உடற்கூறாய்வு செய்யக் கூடாது என்றும், உடனடியாக எரித்துவிட வேண்டும் என்றும் உயிலில் ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டிருந்தது. இதன்படி உடல் எரிக்கப்பட்டது.
ஆனால், 1956-ம் ஆண்டு ஈஸ்ட்போர்ன் நகரத்தில் பரவிய வதந்திகள் காவல்துறையின் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக, கெர்ட்ரூட் ஹல்லெட் என்ற மற்றொரு செல்வந்த பெண்மணி தற்கொலை செய்துகொண்டதாக ஆடம்ஸ் சான்றிதழ் அளித்திருந்தார். ஆனால், அவர் இறப்பதற்கு முன்பே ஆடம்ஸுக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கித் தந்திருந்ததும், இறந்த பிறகு பெரும் தொகை ஆடம்ஸுக்குச் சென்றதும் போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
விசாரணையும் வழக்கும்
இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து யார்டு துப்பறியும் பிரிவு அதிகாரி ஹெர்பர்ட் ஹன்னம் இந்த வழக்கை விசாரிக்க ஈஸ்ட்போர்ன் வந்தார். மருந்தகங்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஆடம்ஸ் தன் நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமான மார்பின் மற்றும் ஹெராயின் மருந்துகளை வாங்கியது அம்பலமானது.
1956 டிசம்பரில் ஆடம்ஸ் கைது செய்யப்பட்டார். எடித் ஆலிஸ் மோரெல் கொலை வழக்கில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 1957-ம் ஆண்டு லண்டனில் உள்ள புகழ்பெற்ற 'ஓல்ட் பெய்லி' நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பிரிட்டன் வரலாற்றிலேயே மிக அதிக நாட்கள் (17 நாட்கள்) நடந்த கொலை வழக்குகளில் இதுவும் ஒன்றானது.

நீதிமன்றத்தில் நடந்த திருப்பங்கள்
அரசுத் தரப்பு வாதம்: சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு, திட்டமிட்டு அதிகப்படியான போதை மருந்துகளைக் கொடுத்து எடித்தை ஆடம்ஸ் கொலை செய்தார்.
எதிர் தரப்பு வாதம்: ஆடம்ஸின் வழக்கறிஞர் ஜெஃப்ரி லாரன்ஸ் மிகத் திறமையாக வாதாடினார். எடித்தின் உடல் எரிக்கப்பட்டுவிட்டதால், அவர் போதை மருந்தால்தான் இறந்தார் என்பதற்கு நேரடித் தடயவியல் ஆதாரம் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
செவிலியர்களின்சாட்சியம்: எடித்தைக் கவனித்துக்கொண்ட செவிலியர்கள் ஆடம்ஸுக்கு எதிராக சாட்சியம் அளித்தனர். ஆனால், செவிலியர்கள் தினமும் எழுதி வைத்திருந்த குறிப்பேடுகளை ஆடம்ஸின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோது, செவிலியர்களின் சாட்சியத்திற்கும் குறிப்பேடுகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பது தெரிந்தது.
அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சர் பேட்ரிக் டெவ்லின், மருத்துவ உலகிற்கும் சட்ட உலகிற்கும் ஒரு புதிய கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். அதுதான் இரட்டை விளைவு கோட்பாடு (Doctrine of Double Effect).
அதாவது, "தீராத வலியால் துடிக்கும் ஒரு நோயாளியின் வலியைக் குறைப்பதற்காக மருத்துவர் கொடுக்கும் மருந்து, தற்செயலாக அந்த நோயாளியின் ஆயுளைக் குறைத்து மரணத்திற்கு வழிவகுத்தால், அது கொலையாகக் கருதப்படாது. ஏனெனில் மருத்துவரின் நோக்கம் வலியைக் குறைப்பதே தவிர, கொலை செய்வதல்ல" என்பதே அந்தக் கோட்பாடு.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், 1957 ஏப்ரல் 9-ம் தேதி, ஜூரிகள் வெறும் 44 நிமிட ஆலோசனைக்குப் பிறகு டாக்டர் ஆடம்ஸை `குற்றமற்றவர்' என அறிவித்தனர். மற்றொரு கொலை வழக்கான கெர்ட்ரூட் ஹல்லெட் வழக்கையும் அரசுத் தரப்பு வாபஸ் பெற்றது.

தீர்ப்புக்குப் பிந்தைய வாழ்க்கை
கொலை வழக்கிலிருந்து தப்பினாலும், போதை மருந்துகளைத் தவறாகக் கையாண்டது, போலி சான்றிதழ்கள் வழங்கியது போன்ற குற்றங்களுக்காக ஆடம்ஸின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டது; அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால், 1961-ம் ஆண்டு மீண்டும் மருத்துவ உரிமத்தைப் பெற்று ஈஸ்ட்போர்னிலேயே தன் தொழிலைத் தொடர்ந்தார்.
1983-ம் ஆண்டு, தன் 84-வது வயதில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு, நிமோனியா காய்ச்சலால் ஆடம்ஸ் மரணமடைந்தார். அவர் இறக்கும்போது அவரிடம் சுமார் 4,00,000 பவுண்டுகள் (இன்றைய மதிப்பில் பல கோடி ரூபாய்) சொத்து இருந்தது.
டாக்டர் ஜான் போட்கின் ஆடம்ஸ் வழக்கு, குற்றவியல் வரலாற்றில் ஒரு புதிராகவே இன்றும் பார்க்கப்படுகிறது. சட்டத்தின் பார்வையில் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டாலும், பின்னாளில் வரலாற்றாசிரியர்களும் மருத்துவ நிபுணர்களும் ஆய்வு செய்தபோது, ஆடம்ஸ் ஒரு தொடர் கொலையாளியாகவே இருந்திருக்க அதிக வாய்ப்புள்ளது என்று கருதினர்.
நோயாளிகளின் நம்பிக்கையைப் பணமாக்கி, பிறகு அவர்களைப் பிணமாக்கிய அந்த மருத்துவரின் கதை, பிரிட்டன் மருத்துவத் துறையில் கடுமையான சட்டத் திருத்தங்கள் கொண்டு வரவும், மரணச் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள் மாற்றப்படவும் முக்கியக் காரணமாக அமைந்தது.



















