'ராஜினாமா செய்கிறேன்' - அறிவித்த சித்தராமையா; இனி கர்நாடகா முதல்வர் 'டி.கே.சிவக்...
`பிளேடை விழுங்கினால் வயிறு என்ன செய்யும்?' வியப்பூட்டும் அறிவியல் உண்மை! | அட அப்படியா! - 1
"கூர்மையான பிளேடு நம் வயிற்றுக்குள் போனால் கரைந்துவிடுமா, உண்மையா?" இந்தக் கேள்வியால் நமக்குள் ஆச்சரியமும் சந்தேகமும் எழுவது இயல்புதான். இதற்கான பதிலை பார்க்கும் முன், இதனை யாரும் வீட்டில் முயற்சி செய்யக் கூடாது! என்பதை கட்டாயமாக சொல்லிவிடுகிறோம்.!
1997-ம் ஆண்டு, இரைப்பை குடல் சார் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் (Gastrointestinal Endoscopy ஆய்வு இதழில் வெளியான தரவுகளின்படி) ஒரு விசித்திரமான சோதனையைச் செய்தார்கள். மனித வயிற்றில் சுரக்கும் இரைப்பை சாற்றை (Gastric Juice) எடுத்து, அதனுள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒற்றை விளிம்பு கொண்ட (Single-edged) இரும்பு பிளேடுகள், நாணயங்கள், பேட்டரிகளைப் போட்டு ஆய்வு செய்தனர்.

ஆச்சரியப்படும் விதமாக, வயிற்றில் உள்ள அமிலத்தில் போடப்பட்ட பிளேடு, வெறும் 24 மணி நேரத்தில் தனது எடையில் பெரும்பகுதியை இழந்து, மிக மெலிதாகி, தொட்டாலே உடையும் அளவுக்குச் சிதைந்து போனது! (நாணயங்களும் பேட்டரிகளும் அவ்வளவு எளிதாகக் கரையவில்லை).
அந்த சூப்பர் பவர் அமிலம் எது?
நம் இரைப்பையில் சுரப்பது சாதாரண திரவம் அல்ல; அது ஹைட்ரோகுளோரிக் அமிலம். இதன் வீரியத்தை அளவிடும் pH அளவு 1 முதல் 2 வரை இருக்கும். வேதியியல் ரீதியாகப் பார்த்தால், இது காரத்தன்மை கொண்ட பேட்டரி அமிலத்திற்கு இணையானது! நாம் சாப்பிடும் கடினமான உணவுகளை (மாமிசம், எலும்புத் துண்டுகள்) உடைப்பதற்கும், உணவோடு சேர்த்து நாம் அறியாமல் விழுங்கும் ஆபத்தான பாக்டீரியா, கிருமிகளைக் கொன்று நம்மைப் பாதுகாப்பதற்கும் இந்த வீரியமிக்க அமிலம் நமக்கு இயற்கையாகவே அத்தியாவசியமானதாக இருக்கிறது.

வயிறு ஏன் தன்னைத்தானே கரைத்துக் கொள்வதில்லை?
இவ்வளவு சக்திவாய்ந்த அமிலம் இரும்பு பிளேடையே கரைக்கிறது என்றால், ஏன் நம் வயிற்றைக் கரைப்பதில்லை என்ற கேள்வி எழுகிறதா? அங்குதான் இயற்கையின் மாபெரும் பாதுகாப்பு சிஸ்டம் ஒளிந்திருக்கிறது! நம் வயிற்றின் உட்புறச் சுவர் மியூகஸ் எனப்படும் தடிமனான, வழுவழுப்பான ஒரு கோழைப் படலத்தால் (முட்டை வெள்ளைக்கரு போன்ற திரவம்) மூடப்பட்டிருக்கும். இந்த மியூகஸ் படலம் பைகார்பனேட் நிறைந்தது என்பதால், அது அமிலத்தின் வீரியத்தைத் தடுத்து வயிற்றுச் சுவரைப் பாதுகாக்கும் ஒரு கேடயமாகச் செயல்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், நம் வயிற்றின் உட்புறச் செல்கள் மிக அதிவேகமாக வளரக்கூடியவை. அமிலத்தின் பாதிப்பால் ஏதேனும் செல்கள் சிதைந்தால் கூட, ஒவ்வொரு 3 முதல் 5 நாட்களுக்குள் வயிறு தனது உட்புறச் சுவரை முற்றிலும் புதிய செல்களால் புதுப்பித்துக் கொள்கிறது!
மிக முக்கியமான எச்சரிக்கை: (யாரும் வீட்டில் முயற்சி செய்யக் கூடாது!)
``அமிலம்தான் பிளேடைக் கரைத்துவிடுமே, அப்படியென்றால் தப்பித்தவறி பிளேடை விழுங்கினால் ஒன்றும் ஆகாதா?’’ என்ற கேள்வி வரலாம். அது மிக மிக ஆபத்தானது, மரணத்தைக் கூட விளைவிக்கலாம். ஏன் என்றால், வயிறு அமிலத்தால் பிளேடைக் கரைப்பதற்கு 24 மணி நேரம் ஆகும். ஆனால், பிளேடை விழுங்கிய அடுத்த சில நொடிகளிலேயே, அதன் கூர்மையான முனைகள் நம் தொண்டை, உணவுப்பாதை, வயிற்றின் உணர்திறன் மிக்க சுவர்களைக் கிழித்து, கடுமையான உள் ரத்தப்போக்கை ஏற்படுத்திவிடும்.

எனவே, இந்த ஆய்வு மனித வயிற்றின் அமிலத் தன்மையை நிரூபிக்க நடத்தப்பட்ட ஒரு அறிவியல் சோதனை மட்டுமே தவிர, மனிதர்கள் யாரும் இதைச் செய்து பார்க்கக் கூடாது. சுருக்கமாக... நம் உடல் ஒரு நடமாடும் வேதியியல் தொழிற்சாலை! இரும்பு பிளேடைக் கரைக்கும் அளவுக்கு ஒரு அமிலத் தொட்டியைத் தன் வயிற்றுக்குள் வைத்துக் கொண்டு, ஒரு சிறு பாதிப்பும் இல்லாமல் மனிதன் நடமாடிக் கொண்டிருப்பது இயற்கையின் ஆகச்சிறந்த வடிவமைப்பு என்பதில் சந்தேகமே இல்லை.!
















