``ரூ.5 லட்சம் சம்பளம்; வேலை இழந்ததால் மனைவி விவாகரத்து'' - டெலிவரி பாயாக மாறிய ப...
பீகார் தேர்தல்: 32% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு; 40% பேர் கோடீஸ்வரர்கள்! | Report
பீகார் சட்டமன்றத்திற்கு வரும் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்து இருக்கிறது. இரண்டு கட்டமாக நடக்கும் தேர்தலில் மொத்தம் 1314 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். அவர்களில் 32 சதவீதம் பேர் அதாவது 423 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அவர்களில் 354 பேர் மீது மிகவும் கடுமையான கிரிமினல் வழக்கு இருக்கிறது. இதில் 33 பேர் மீது கொலை வழக்கும், 86 பேர் மீது கொலை முயற்சி வழக்கும், 42 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதாகவும், 2 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் நிலுவையில் இருக்கிறது.

மேலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பாக போட்டியிடும் தலா 5 வேட்பாளர்கள் மீதும் கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இது தவிர ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி சார்பாக போட்டியிடும் 53 பேர் மீதும், பா.ஜ.க சார்பாக போட்டியிடும் 31 பேர் மீதும், காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் 15 பேர் மீதும், ஐக்கிய ஜனதா தளம் சார்பாக போட்டியிடும் 22 பேர் மீதும் கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கிறது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சி சார்பாக போட்டியிடும் 50 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
இதே போன்று தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 519 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். அவர்களுக்கு சராசரியாக 3.26 கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. கல்வியறிவில் வேட்பாளர்கள் பின் தங்கி இருக்கின்றனர். 519 வேட்பாளர்கள் 5 முதல் 12 வரை மட்டுமே படித்து இருக்கின்றனர். 651 வேட்பாளர்கள் பட்டப்படிப்பு முடித்துள்ளனர்.
நீதிஷ் குமார், தேஜஸ்வி, பிரசாந்த் கிஷோர் மோதல்
பீகாரில் நடக்கும் இத்தேர்தல் நிதீஷ் குமாருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி பா.ஜ.கவை விட கணிசமான அளவு குறைந்த இடங்களில் வெற்றி பெறும் பட்சத்தில் முதல்வர் பதவியை பா.ஜ.க எடுத்துக்கொள்ள அபாயம் இருக்கிறது. இதனால் இது நிதீஷ் குமாருக்கு வாழ்வா சாவா போராட்டமாக அமைந்துள்ளது.
எனவேதான் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பு 2.1 மில்லியன் பெண்களின் வங்கிக்கணக்கில் தலா 10 ஆயிரம் ரூபாயை வரவு வைத்திருக்கிறார். அதோடு அதே நாளில் பாட்னா மெட்ரோ ரயிலையும் தொடங்கி வைத்தார். மற்றொரு புறம் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவிற்கும் இது வாழ்வா சாவா போராட்டமாகவே அமைந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை தேஜஸ்வி யாதவ் பிடித்தாலும் முதல்வர் பதவியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
இதனால் தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இம்முறை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சியும் களத்தில் குதித்து இருக்கிறது. இதனால் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.

ஆம் ஆத்மி கட்சி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் 176 சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக வாக்குகளை பெற்று இருந்தது. இந்த 176 தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் 50 தொகுதிகள் குறைந்தாலும் 122 தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்று பா.ஜ.க நம்புகிறது.
மொத்தமுள்ள 243 தொகுதியில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே ஆட்சியை பிடித்துவிட முடியும் என்று கணக்கு போட்டு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக பீகாரின் அனைத்து பகுதிக்கும் சென்று பிரசாரம் செய்து வருகிறார். பீகார் வெற்றி அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தையும் பாதிக்கும் என்பதால் பீகாரில் வெற்றி பெற வேண்டும் என்பதில் பா.ஜ.க கூட்டணி தீவிரமாக இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதியில் வெற்றி பெற்றது. அதேசமயம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 110 தொகுதியில் வெற்றி பெற்றது. பா.ஜ.கவை விட ஒரு தொகுதியை ராஷ்ட்ரீய ஜனதா தளம் அதிகமாக பெற்ற போதிலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை மட்டும் பெற முடிந்தது.















