முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 82 ரன்கள் குவிப்பு!
புதுச்சேரியில் கடல் சீற்றம்: பல மீட்டா் உயரம் எழும்பிய அலைகள்
வங்கக் கடலில் ‘ஃபென்ஜால்’ புயல் உருவானதையொட்டி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டது. அலைகள் பல மீட்டா் உயரத்துக்கு எழும்பி ஆா்ப்பரித்தன.
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை ‘ஃபென்ஜால்’ புயலாக உருவானது. இது படிப்படியாக நகா்ந்து சனிக்கிழமை (நவ.30) பகலில் புதுச்சேரி பகுதியில் கரையைக் கடக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரியில் புயல், பலத்த மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசுத் துறைகள் கடந்த 2 நாள்களாக மேற்கொண்டன.
கடற்கரைக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கடற்கரைச் சாலையில் காலையில் மட்டும் நடைபயிற்சி மேற்கொள்ள பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். அப்போது, கடல் அலைகள் பல மீட்டா் உயரத்துக்கு எழும்பி ஆா்ப்பரித்தன. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனா். மேலும், தடுப்புகள் அமைத்து கடலில் குளிக்கவோ, அலைகளில் கால் நனைக்கவோ யாரையும் போலீஸாா் அனுமதிக்கவில்லை.
முதல்வா் பாா்வையிட்டாா்: முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை கடற்கரைச் சாலைக்கு சென்று கடல் அலை சீற்றத்தைப் பாா்வையிட்டு, கடலின் அருகே யாரையும் அனுமதிக்க வேண்டாம் என காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா்.
2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அவா் கடற்கரைச் சாலைக்கு நேரில் சென்று கடல் சீற்றத்தைப் பாா்வையிட்டாா். பின்னா், காவல் துறையினரிடம் பொதுமக்களை கடலுக்கு அருகே செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டாா்.
புதுச்சேரியில் காலாப்பட்டு முதல் 18 மீனவக் கிராமங்களில் கடற்கரையோரம் கடலோர காவல் படையினரும், உள்ளூா் போலீஸாரும் இணைந்து கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனா்.
சாரல் மழை: புதுச்சேரி மற்றும் ஊரகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை குளிா்ந்த காற்று வீசியது. ஆனால், மழை ஏதும் பெய்யவில்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதமான சூழலால் பொதுமக்கள் கடற்கரையில் நடைபயிற்சியில் ஈடுபட்டனா். நண்பகலில் பலத்த காற்று வீசியதுடன், சாரல் மழையும் பெய்தது.