தனக்குப் போட்டியாக வந்த சொந்தக் கட்சி வேட்பாளர்; வேட்பு மனுவைக் கிழித்துத் தின்ற...
புதுச்சேரி: அதிர வைக்கும் போலிமருந்து மோசடி; மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சிக்குவார்களா?
இந்தியாவின் பிரபல மருந்து நிறுவனங்களான `சன் ஃபார்மா' மற்றும் `டாக்டர் ரெட்டிஸ்' பெயரில், இந்தியா முழுவதும் போலி மருந்துகளை சப்ளைச் செய்த கும்பலை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர்.
அந்தப் போலி மருந்து தொழிற்சாலைகளுக்கும் அவற்றின் குடோன்களுக்கும் சீல் வைத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், முக்கிய குற்றவாளியான சிவகங்கையைச் சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன் உள்ளிட்ட 26 பேரைக் கைது செய்தனர்.
அதையடுத்து இந்த மோசடிக் கும்பலுடன் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அரசு அதிகாரிகள் என அனைவரும் தொடர்பில் இருந்ததால், 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT - Special Investigation Team) அமைத்து உத்தரவிட்டார் ஆளுநர் கைலாஷ்நாதன்.

அதையடுத்து போலி மருந்துக்கும்பலுக்கு ஜி.எஸ்.டி மோசடியில் உடந்தையாக இருந்த முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டார்.
அதேசமயம், காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு அளித்தன. ஆனால், `புதுச்சேரி காவல்துறையின் எஸ்.ஐ.டியே விசாரிக்கட்டும்' என்று உறுதியாக அவற்றை நிராகரித்த கவர்னர், அதன்பிறகு வழக்கை சி.பி.ஐ மற்றும் என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றினார்.
இதற்கிடையில் போலியாகத் தயாரிக்கப்பட்ட 34 மருந்து நிறுவனங்களின் மருந்துகளை விற்பதற்குத் தடை விதித்து, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை மருந்தகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.
இந்த நிலையில்தான் மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று, ஒருசில மருத்துவர்கள் சி.பி.ஐ-க்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய இந்திரா காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர், ``மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் போலி மருந்து உற்பத்தி நடைபெற்றிருக்க வாய்ப்புகளே இல்லை.
சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை, சில ஆண்டுகளுக்கு முன்பு தனித் துறையாக மாறிவிட்டது. அப்போதில் இருந்தே அங்கு எதுவும் சரியாக நடப்பதில்லை.

மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகள் தரமானதா, போலியாக மருந்துகள் விற்கப்படுகிறதா, காலாவதியான மருந்துகள் இருக்கிறதா என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள்தான் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆனால் அவர்கள் அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை. அதனால் அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள், வாங்கிய சொத்துகளின் விவரங்களைக் கணக்கிட வேண்டும்.
அத்துடன் போலி மருந்து மோசடியில் முக்கிய குற்றவாளிகள், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளிடம் செல்போனில் பேசிய விவரங்களையும் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும்" என்றனர்.

















