புதுவை ஆளுநா் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் வாயிலாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமியின் வீடு, துணைநிலை ஆளுநா் மாளிகை, ஆட்சியா் அலுவலகம், ஜிப்மா் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு ஏற்கெனவே இரு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, சிலரை கைது செய்தனா். எங்கிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிய தேசிய குற்றப் பிரிவின் உதவி நாடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் கருவிகளுடன் வந்த போலீஸாா், அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதுகுறித்து புதுச்சேரி குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.