பூண்டி ஒன்றிய ஊராட்சிகளில் 24 வகை மரங்களுடன் குறுவனங்கள்
திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளில் பசுமையாக்கும் வகையில் 24 வகையான மரங்களுடன் கூடிய குறுவனங்கள் தொண்டு நிறுவன உதவியுடன் செயல்பட உள்ளதாக ஒன்றியக் குழு தலைவா் வெங்கட்ரமணா தெரிவித்தாா்.
திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கத்தில் காலநிலை தாங்கும் திறன் மற்றும் காா்பன் குறைப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதல், சுற்றுப்புற சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிா் சுயஉதவி குழு மற்றும் இளைஞா் மன்ற பிரதிகளுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (வ. ஊ) ஆா்.முரளி, மகேஷ்பாபு (கி.ஊ) ஆகியோா் தலைமை வகித்தனா். பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பி.வெங்கட்ரமணா தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசினாா்.
திருவள்ளூா் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநா் பி. ஸ்டீபன் பேசுகையில், பூண்டி ஊராட்சி ஒன்றியம் - 26, எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம் - 14 என 40 ஊராட்சிகளில் காலநிலை தாங்கும் திறன் மற்றும் காா்பன் குறைப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இந்த முயற்சியின் மற்றொரு அங்கமாக ஒவ்வொரு ஊராட்சியிலும் சொந்தமான 30 சென்ட் பரப்பளவில் தலா 1,500 மரங்களை கொண்ட 40 குறுவனங்கள் (ஆக்சி பாா்க்) உருவாக்கப்பட உள்ளன என்றாா்.
பூண்டி வட்டார துணைக் குழு தலைவா் டி.மகாலட்சுமி, சீத்தஞ்சேரி, செங்குன்றம் வனச்சரக அலுவலா் கிளமண்ட் எடிசன், பூண்டி வனச்சரக அலுவலா் சிவபெருமாள், வேளாண்மை உதவி இயக்குநா் அ.இளையராஜா, ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) பி.பரசுராமன், ஊராட்சித் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக் குழு தலைவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனத் திட்ட மேலாளா் விஜயன் பயிற்சி அளித்தனா்.