MAHER: 19-வது பட்டமளிப்பு விழாவை வெற்றிகரமாக நடத்திய மீனாட்சி உயர்கல்வி மற்றும் ...
பெங்களூரு: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி; நடுரோட்டில் சுட்டுக் கொலைசெய்த இளைஞரால் பரபரப்பு!
பெங்களூருவில் வசிப்பவர் பாலமுருகன் (40). தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆவார். அவர் தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார். இவர் மனைவி புபனேஷ்வரி (39). இவர் அரசு வங்கி ஒன்றில் துணை மேலாளராகப் பணியாற்றி வந்தார். பாலமுருகனுக்கு வேலை இல்லாததால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பாலமுருகன் தன் மனைவியின் நடத்தைமீது சந்தேகப்பட்டார். இதுவும் அவர்களிடையே அடிக்கடி சண்டை வரக் காரணமாக இருந்தது.
அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு வருடமாக புபனேஷ்வரி தன் கணவரிடமிருந்து பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். புபனேஷ்வரி நேற்று மாலை வேலை முடிந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரது வருகைக்காகக் காத்திருந்த பாலமுருகன், தன் மனைவி அருகில் வந்ததும் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் நான்கு முறை அவரைச் சுட்டார்.

இதில் இரண்டு தோட்டாக்கள் புபனேஷ்வரியின் தலையில் பட்டன. மற்ற இரண்டு தோட்டாக்கள் கை மற்றும் தோள் பகுதியில் பட்டன. புபனேஷ்வரி ரத்த வெள்ளத்தில் சரிந்தவுடன் பாலமுருகன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு நடந்தே சென்று துப்பாக்கியுடன் சரணடைந்தார். துப்பாக்கிச்சூடு சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். இது குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து புபனேஷ்வரியை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். பட்டப்பகலில் நடந்த இப்படுகொலைச் சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் புபனேஷ்வரி கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் தன் கணவருக்கு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்தக் கோபத்தில்தான் பாலமுருகன் இத்துப்பாக்கிச்சூட்டை நடத்தி இருக்கிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புபனேஷ்வரிக்கு வேறு ஒரு கிளைக்கு பணியிட மாறுதல் கிடைத்தது. இதையடுத்து தன் கணவரிடம் சொல்லாமல் ஒயிட்ஃபீல்டு என்ற இடத்தில் இருந்து... ராஜாஜி நகர்ப் பகுதியில் புதிய வீட்டில் புபனேஷ்வரி குடியேறிவிட்டார்.
புபனேஷ்வரியின் நடத்தையில் பாலமுருகன் சந்தேகப்பட்டது இருவரது பிரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் விவாகரத்து நோட்டீஸை பாலமுருகனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புபனேஷ்வரி வசித்து வந்த புதிய வீட்டை, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பாலமுருகன் கண்டுபிடித்தார். உடனே அந்த வீட்டிற்கு அருகில் பாலமுருகன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கிக்கொண்டு தன் மனைவியின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார். இதற்காக, தான் பார்த்து வந்த வேலையைக்கூட ராஜினாமா செய்துவிட்டு மனைவியின் நடமாட்டத்தை பாலமுருகன் கண்காணித்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். புபனேஷ்வரியின் மரணத்தைத் தொடர்ந்து அவரின் பெற்றோருக்கு போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர்.


















