கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் - திருவனந்தபுரத்தில் நடந்தது ...
பெரிய மந்து: 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தோடர் பழங்குடியினரின் கூரை வேயும் திருவிழா!
ஊட்டி முத்தநாடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
தோடர்களின் தலைமையிடமான முத்தநாடு மந்துவில் பாரம்பர்ய கோயிலான "முன்போ தேக்சி அம்மன்" கோயில் உள்ளது.
19 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்தக் கோயிலில் கூரை வேயும் விழா நடைபெறும்.
நீலகிரியில் மொத்தமாக 15 மந்துகள் உள்ளன. அதாவது தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் இடத்தை மந்து என்று கூறுவர். இந்த தோடர் மக்கள் கோயிலை புதுப்பிக்க மூங்கில், பிரம்பு மற்றும் ஆவில் வகை புல்லை பயன்படுத்துகின்றனர்.

இந்த விழா பற்றி தோடர் பழங்குடியினரான மீன்ஸ் குட்டாவிடம் பேசினோம்.
``மூங்கில், பிரம்பு, புல் இவை எல்லாம் கிடைப்பதற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும். இதற்காக இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை நாங்கள் காட்டுப் பகுதியிலேயே தங்கியிருந்து தேவையானவற்றைச் சேகரிப்போம். கிட்டத்தட்ட இரண்டு லாரிகள் முழுக்க, உள்ளூரில் கிடைக்காத அந்தப் பொருள்களைச் சேகரிப்போம்.
60 முதல் 70 பேர்வரை கேரள எல்லைக்குச் சென்று தேவையானவற்றைக் கொண்டு வந்து முன்போ தேக்சி அம்மனை வழிபட்டு, இரண்டு நாள்கள் விரதம் இருந்து கூரையை வேய்வோம்" என்றார்.
மந்து கோவில் மற்றும் தெய்வ வழிபாடு பற்றி...
``மந்தின் தெய்வம் `முன்போ தேக்சி அம்மன்'
நாங்கள் மகாபாரதத்தில் வரும் பஞ்சபாண்டவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் குலதெய்வமும் பஞ்சபாண்டவர்கள்தான். நாங்கள் ஒலி வடிவில் தெய்வ வழிபாடு செய்கிறோம்."
பெரிய மந்து வரலாறு பற்றி...
``ஊட்டியில் மொத்தம் இரண்டு பெரிய மந்து கோயில்கள் உள்ளன.
அதில் எங்கள் தலைமை மந்து முத்துநாடு மந்து தான்.
எப்பநாட்டில் ஒரு மந்து இருக்கிறது. ஆனால் அது 25 அடி தான். தலைமை மந்துதான் 35 அடி. இதுதான் எங்களின் பூர்வீக மந்து.







தோட மக்கள் 15 ஊர்களில் வசிக்கின்றனர். அவர்களின் முதல் பூர்வீக மந்து என்றால் அது முத்தநாடு மந்து தான்.
நாங்கள் எல்லோரும் வருடத்திற்கு ஒருமுறை `மொற்பந்த்' என்ற எங்கள் குலதெய்வ வழிபாட்டைச் செய்வோம். 15 ஊர்களிலும் இருந்து மக்கள் அன்று ஒரு நாள் கூடி அன்போடு விழாவை சிறப்பிப்போம்.
அதேபோல் தான் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை `முன்போ' பண்டிகையையும் 15 ஊர் மக்களும் சேர்ந்து கூரை வேய விரதம் இருந்து பண்டிகையைக் கொண்டாடுவோம்.
எவ்வளவுதான் காலம் மாறினாலும்... பழைமை மாறாமல் எங்கள் கலாசாரத்தை மறவாமல் நாங்கள் எல்லோரும் ஒன்று கூடி விழாவைக் கொண்டாடுகிறோம்" என்றார்.


















