RCB: ரூ.16,700 கோடிக்கு விற்பனையான பெங்களூரு அணி; புதிய உரிமையாளர்கள் யார்?
பேனா மூடியின் மேலே சிறுதுளை எதற்கு? - இது தெரியாமப் போச்சே?! - 3
அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சாதாரணப் பொருள்களின் வடிவமைப்பிற்குப் பின்னால் ஒரு பெரிய காரணமோ அல்லது ஒரு வரலாற்றுச் சம்பவமோ ஒளிந்திருக்கும். அப்படி ஆச்சர்யம் தரக்கூடிய ஒன்றுதான் பேனா மூடியின் மேலே உள்ள அந்தச் சிறிய துளை.

பேனா மூடியை (Pen Caps) வாயில் வைத்து கடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. இந்தச் சாதாரண பழக்கம் பல நேரங்களில் பெரும் விபரீதங்களில் முடிந்துள்ளது. தவறுதலாகப் பேனா மூடியை விழுங்கும்போது, அது நேராகச் சென்று மூச்சுக்குழாயை அடைத்துக்கொள்கிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நேர்ந்த சம்பவங்கள் கடந்த காலத்தில் ஏராளம்.
இந்த அபாயத்தைத் தடுப்பதற்காக, உலகப் புகழ்பெற்ற பேனா தயாரிப்பு நிறுவனமான BIC (பிக்), 1991-ம் ஆண்டில் தனது புகழ்பெற்ற `க்ரிஸ்டல்' (Cristal) பேனாக்களின் மூடியில் ஒரு சிறிய துளையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. யாராவது தவறுதலாக மூடியை விழுங்க நேர்ந்தால், இந்தத் துளை வழியாக நுரையீரல் சுவாசிக்கத் தேவையான காற்று ஓரளவு உள்ளே செல்லும். இதனால் உடனடி மூச்சுத்திணறல் தவிர்க்கப்பட்டு, மருத்துவமனைக்குச் சென்று உயிரைக் காப்பாற்றப் போதுமான நேரம் கிடைக்கும்.

இந்தச் சிறிய வடிவமைப்பு மாற்றம் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்தைப் பார்த்த சர்வதேச தரக்கட்டுப்பாட்டு அமைப்புகள், இதனை ஒரு விதியாகவே மாற்றின. சிறுவர்கள் பயன்படுத்தும் பேனா மூடிகள் மூச்சுக்குழாயை அடைக்காதவாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்று ISO 11540 என்ற சர்வதேச பாதுகாப்புத் தரம் உருவாக்கப்பட்டது. இன்று உலகின் பெரும்பாலான முன்னணி பேனா தயாரிப்பு நிறுவனங்கள் இந்த விதியைப் பின்பற்றுகின்றன.
இந்தத் துளைக்கு மற்றொரு சிறிய பயன்பாடும் உண்டு. பேனாவை மூடும்போது உள்ளே ஏற்படும் காற்றழுத்தத்தை சமன் செய்து, மை கசிவதைத் தடுப்பதற்கும் இது உதவுகிறது. இருப்பினும், இதன் முதன்மை நோக்கமும், வெற்றி வரலாறும் உயிர்ப்பாதுகாப்பு சம்பந்தப்பட்டது மட்டுமே.















