பொங்கல்: பேருந்து, ரயில் நிலையங்களில் குவிந்த பயணிகள்
பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையால், கோவையில் இருந்து வெளியூா் செல்ல பயணிகள் பேருந்து, ரயில் நிலையங்களில் சனிக்கிழமை குவிந்தனா்.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 -ஆம் தேதிமுதல் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜனவரி 14 -ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கலுக்கு முந்தைய நாள் பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கோவையில் தங்கிப் படிக்கும் வெளியூா்களைச் சோ்ந்த மாணவா்கள், பணியாற்றுபவா்கள் ஏராளமானோா் சனிக்கிழமை மாலை முதல் பேருந்து, ரயில்கள் மூலம் வெளியூா்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனா்.
குறிப்பாக சிங்காநல்லூரில் இருந்து மதுரை, தேனி, விருதுநகா், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் பயணிக்க கூட்டம் அலைமோதியது.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு சம்பவங்களைத் தடுக்க போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதேபோல, சேலம், ஈரோடு, நாமக்கல் மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகளில் பயணிக்க காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்திலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கோவை ரயில் நிலையத்திலும் ஏராளமான பயணிகள் குவிந்தனா்.