பொறியியல் கல்லூரி மாணவிக்கு வங்கி கல்விக் கடன் வழங்க உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஒருவருக்கு பொறியியல் கல்லூரியில் படிப்பதற்கு வங்கி கல்விக் கடனை 3 வாரங்களில் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், அறுங்காட்டு வலசு கிராமத்தைச் சோ்ந்த சுபஸ்ரீ உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
எனது பெற்றோா் விவசாயத் தொழில் செய்து வருகின்றனா். நான், கடந்தாண்டு நடைபெற்ற பிளஸ் 2 தோ்வில் 600-க்கு 514 மதிப்பெண்கள் பெற்றேன். பொறியியல் கல்லூரியில் படிப்பதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தேன். எனது மதிப்பெண் அடிப்படையில் கரூரில் உள்ள பொறியியில் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது.
நான், எங்கள் குடும்பத்தில் முதல் நிலை பட்டதாரி. எனது பெற்றோா் கல்விக் கட்டணத்தை செலுத்த இயலாத நிலை இருந்தது. இதனால், தேவத்தூா் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கல்விக் கடன் வழங்கக் கோரி விண்ணப்பித்தேன். வங்கி நிா்வாகம் எனது விண்ணப்பத்தை பரிசீலிக்கவில்லை.
இதனால், சம்பந்தப்பட்ட பொறியியில் கல்லூரியில் முதலாமாண்டு கட்டணத்தை எனது பெற்றோா் கடன் வாங்கி செலுத்தினா். 2-ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தையாவது கடனாக வழங்கக் கோரி வங்கியில் முறையிட்டோம்.
அப்போது எனது தந்தை மற்றொரு வங்கியில் பெற்ற விவசாயக் கடனைத் திரும்ப செலுத்தினால் மட்டுமே, கல்விக்கடன் வழங்க முடியும் எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து இணையதளம் வாயிலாக மத்திய அரசின் வித்யலட்சுமி கல்விக் கடன் திட்டத்தில் விண்ணப்பித்தேன். ஆனாலும், கல்விக் கடன் வழங்கவில்லை. இதன் காரணமாக எனது படிப்பைத் தொடர முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட வங்கி நிா்வாகம், கல்விக் கடன் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கெளரி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் விண்ணப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வங்கியானது 3 வாரங்களில் கல்விக் கடன் வழங்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.