T20 World Cup: "இந்தியாவுடன் விளையாடுகிறோம்; ஆனால்" - ஐசிசிக்கு பாகிஸ்தானின் நிப...
`போடிநாயக்கனூர் ஏன்?’ - அதிமுகவுக்கு புத்துயிர் அளித்த ஜெயலலிதாவின் முதல் வெற்றி! | முதல் களம் 5
(`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர்.)
அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ராமச்சந்திரன் 1987, டிசம்பர் 24 அன்று மறைந்தபோது அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார்கள் அக்கட்சித் தொண்டர்கள். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தபோதிலும், எம்.ஜி.ஆர் மறைந்த சில நாட்களிலேயே கட்சி இரண்டாக பிளவுபட்டுப்போனது. இந்தப் பிளவிலிருந்து அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வைத்ததில், 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலும், போடிநாயக்கனூர் தொகுதியில் முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றியும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

எம்.ஜி.ஆர் மறைவின்போது நடைபெற்றது என்ன, அதிமுக இரண்டாக பிளவுபட்டது ஏன், அதுவரை தேர்தலிலேயே போட்டியிடாத ஜெயலலிதா, 1989 தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம், ஜெயலலிதாவின் பிரசார வியூகம் எப்படி இருந்தது, பெருவாரியான கட்சித் தொண்டர்களின் மனநிலை அப்போது என்னவாக இருந்தது, தேர்தலுக்குப் பின்னர் அதிமுக ஒன்றிணைந்தது எப்படி போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள 80-களின் ப்ளாஷ்பேக்குகளுக்குள் செல்லலாம்.
தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக கோலோச்சிய எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர், திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்துவந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்த பின்னர், 1982-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார் ஜெயலலிதா.
தொடர்ந்து அவர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், 1984-ஆம் ஆண்டு, அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயம், ஜெயலலிதா அதிமுகவுக்குள் வந்ததிலிருந்தே சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டது. அவரது வருகையை விரும்பாத ஆர்.எம்.வீரப்பன், காளிமுத்து, ராகவானந்தம், ஹெச்.வி.ஹண்டே, மாதவன் போன்ற கட்சியின் மூத்த தலைவர்களும் அமைச்சர்களும் ஜெயலலிதாவுக்கு எதிரான தனி கோஷ்டியாக செயல்பட்டனர். இந்த அணிக்கு ஆர்.எம். வீரப்பன் தலைமை வகித்தார். இன்னொரு பக்கம், ஜெயலலிதா ஆதரவு அணியில் கே.கே.எஸ்.எஸ். ஆர். திருநாவுக்கரசு, கே.ஏ.கிருஷ்ணசாமி போன்றோர் இடம்பிடித்தனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் 1987 ஆம் ஆண்டு, உடல் நலக்குறைவால் எம்.ஜி.ஆர் காலமானார். அவரது மறைவால் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார்கள் அதிமுக தொண்டர்கள். தலைவரற்ற நிலையில் தள்ளப்பட்டது அதிமுக.
அதே சமயம், எம்.ஜி.ஆரின் அடுத்த அரசியல் வாரிசு தாம்தான் என்பதை அதிமுக தொண்டர்களுக்கு உணர்த்தும் வகையில், சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டார் ஜெயலலிதா. அவருக்குப் பின்னாலிருந்து அதற்கான அரசியல் ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருந்தவர், ஜெயலலிதாவுக்கு நெருக்கமான தோழியாக பின் நாட்களில் திகழ்ந்த சசிகலாவின் கணவர் நடராஜன்தான்.
சென்னை ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது தலைமாட்டிலேயே இரண்டு நாட்களும் நின்று கொண்டே இருந்தார் ஜெயலலிதா. இறுதிச் சடங்குக்காக எம்.ஜி.ஆரின் உடல், ராணுவ வண்டியில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டபோது, ஜெயலலிதா அதில் ஏற முயல, அவர் எட்டி உதைக்கப்பட்டு கீழே தள்ளப்பட்டார். இதன் பின்னணியில், ஆர்.எம். வீரப்பன் ஆதரவாளர்கள் இருந்ததாக அப்போது குற்றம்சாற்றப்பட்டது. இந்த நிகழ்வு, ஜெயலலிதாவுக்கு மக்களிடையேயும் அதிமுக தொண்டர்களிடத்திலும் அனுதாபத்தைப் பெற்றுக்கொடுத்தது.
இந்த நிலையில், எம்.ஜி.ஆரின் உடல் மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்ட சில தினங்களிலேயே யார் அடுத்த முதல்வர் என்கிற கேள்வி அதிமுகவில் எழ, ஆர்.எம்.வீரப்பனின் ஆலோசனையின் பேரில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி அவர் பதவியேற்ற நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டசபை கூட்டப்பட்டபோது, ஜெயலலிதா ஆதரவு அணியினரும் ஆர்.எம்.வீரப்பன் ஆதரவு அணியினரும் மோதிக்கொண்டு, கைகலப்பில் ஈடுபட, மைக்குகள் உடைக்கப்பட்டு, ரத்தக்களறியுடன் அரங்கேறிய அமளியால், 23 நாட்களிலேயே ஆட்சி கலைக்கப்பட்டது.

அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்ட நிலையில், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இதனால், அடுத்து வந்த 1989-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டது. கட்சித் தலைவரின் மரணத்திலும் உட்கட்சி மோதலில் சிக்கித் தவித்த அதிமுக தொண்டர்கள் யாரைத் தேர்ந்தெடுப்பது எனக் குழப்பமடைந்தனர். எனினும், ஜெயலலிதா இதை தனக்கான ஒரு வாய்ப்பாக மாற்ற எண்ணினார். தன்னையே மொத்தக் கட்சிக்கும் ஒரே தலைவராக்கும் சோதனைக் களமாக இதை மாற்ற நினைத்தார். கூடவே, எம்.ஜி.ஆருக்கு மக்களிடையேயும் அதிமுக தொண்டர்களிடையேயும் இருந்த செல்வாக்கை, தனக்கானதாக மடைமாற்ற திட்டமிட்ட ஜெயலலிதா, போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டார்.
போடிநாயக்கனூர் தொகுதி அன்றைக்கு அதிமுக-வின் கோட்டையாக திகழ்ந்தது. எம்.ஜி.ஆர் ஒருமுறைகூட அங்கு போட்டியிடவில்லை என்றாலும், 1980 மற்றும் 1984 தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் அங்கு அமோக வெற்றி பெற்றிருந்தனர். கூடவே, அதிமுகவின் வாக்கு வங்கியாக இருந்த தேவர் சமுதாயத்தினரின் ஆதிக்கமும் அங்கு அதிகமாக காணப்பட்டது.
எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்ற வலையமைப்பும் அசைக்க முடியாத அளவுக்கு வலுவாக இருந்தது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே போடிநாயக்கனூர் தொகுதியைத் தேர்ந்தெடுத்தார் ஜெயலலிதா. தேர்தல் பிரசாரத்தின்போது எம்.ஜி.ஆரைப் போன்றே ஜெயலலிதா பிரமாண்டமான கூட்டங்களை நடத்தினார். பெண்கள் அரசியலில் அவமதிக்கப்படும் நிலைமை குறித்து அவர் பேசியது, பெண்களிடையே பெரும் அனுதாபத்தை உருவாக்கியது.
தனக்குப் பின்னர் அதிமுகவைத் தலைமையேற்று நடத்த வேண்டுமென எம்ஜிஆர் தன்னிடம் சத்தியம் வாங்கி இருந்தார் என்கிற ஜெயலலிதாவின் பேச்சில் உண்மை இருந்ததோ இல்லையோ, அந்தப் பேச்சு எம்.ஜி.ஆர் ரசிகர்களிடமும் அதிமுக தொண்டர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் மெதுவாக ஜெயலலிதா பக்கம் திரும்பத் தொடங்கினர்.

ஜனவரி 21 அன்று வாக்குப்பதிவு முடிந்து, பின்னர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, திமுக 151 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஜானகி அம்மாள் தலைமையிலான அணி 175 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜானகி, தோல்வியைத் தழுவினார்.
சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா தலைமையிலான அணி 27 இடங்களைக் கைப்பற்றியது. போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, 1,05,298 வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் முத்துமாணிக்கத்தை 60,673 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றி பெற்றார். தனது அணிக்கு கிடைத்த படுதோல்வியைத் தொடர்ந்து, அதிமுக நலம் விரும்பிகள் நடத்திய சில ரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார் ஜானகி அம்மாள்.
கட்சியை ஜெயலலிதா தலைமையில் ஒன்றிணைக்க சம்மதம் தெரிவித்து அவர் கடிதம் கொடுத்ததைத் தொடர்ந்து, பிரிந்து கிடந்த அதிமுக ஒன்றிணைந்து, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னமும் அதிமுகவுக்கு மீண்டும் கிடைத்தது.

அதனைத்தொடர்ந்து, தமிழக சட்டசபையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், துவண்டு கிடந்த அதிமுக மீண்டும் புத்துயிர் பெற்றது.
அந்தவகையில், போடிநாயக்கனூர் தொகுதியில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த முதல் தேர்தல் வெற்றிதான், அதன் பிறகான ஜெயலலிதாவின் 27 ஆண்டுகால (1989–2016) நீண்ட நெடிய அரசியல் போராட்டத்துக்கும் வெற்றிகளுக்கும் அடித்தளமிட்டு, அதிமுகவை நான்குமுறை ஆட்சிக்கட்டிலில் அமரவழிவகுத்தது.
மேலும், எம்.ஜி.ஆரின் நிழலில் இருந்து வெளியே வந்து, தனது சொந்த அரசியல் அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட ஜெயலலிதா, எதிர்கால முதலமைச்சராக உருவான தருணமும் அதுதான்!















