Narges Mohammadi: அமைதிக்கான நோபல் வென்றவருக்கு 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - கா...
மேம்பாலத்தின் அருகே நின்ற காரில் 3 பேரின் சடலம்; கொலையா? தற்கொலையா?
மேற்கு டெல்லியின் பீராகர்கி மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில், முதியவர் மற்றும் பெண் உட்பட மூன்று பேர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதியம் 3.50 மணியளவில், மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை ஓரம் நின்றிருந்த கார் ஒன்றில், மூன்று பேர் நீண்ட நேரமாக அசைவின்றி இருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, காரின் கதவை உடைத்து திறந்தபோது உள்ளே இருந்த மூன்று பேரும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். மேலும், காரினுள் ஒருவித 'விஷப் பொருளின்' கடுமையான நெடி வீசியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் பாப்ரோலா கிராமத்தைச் சேர்ந்த ரந்தீர் சிங் (76), சிவ நரேஷ் சிங் (47). லட்சுமி தேவி (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ரந்தீர் சிங் ஓட்டுநர் இருக்கையிலும், மற்ற இருவரும் பின் இருக்கையிலும் அமர்ந்திருந்தனர். இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த ரந்தீர் சிங்கின் உறவினர், சிவ நரேஷை அடையாளம் காட்டினார். ஆனால், உயிரிழந்த பெண் லட்சுமி தேவிக்கும், மற்ற இருவருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து தெரியவில்லை. காரில் இருந்த பணம், கைபேசிகள் மற்றும் அந்தப் பெண் அணிந்திருந்த நகைகள் அப்படியே இருந்ததால், இது கொள்ளைக்காக நடந்த கொலையாக இருக்க வாய்ப்பில்லை எனக் காவல்துறைக் கருதுகிறது.
காரில் இருந்து ஒரு குளிர்பான பாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் விஷம் ஏதேனும் கலக்கப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகத்தில், அது ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் வாகனத்தை முழுமையாக ஆய்வு செய்திருக்கின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி, ``மூன்று பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த அறிக்கை வந்த பிறகுதான் இது தற்கொலையா அல்லது சதிச் செயலா என்பது உறுதியாகத் தெரியும்," என்றார்.
பட்டப்பகலில் மேம்பாலத்தின் அருகிலேயே கார் ஒன்றில் மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


















