`ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை; ஆனால் பழனிசாமி பாராட்டுகிறா...
சென்னை: போதைப் பொருள் வழக்கில் சிக்கிய உதவி இயக்குநர், நடிகை - அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்!
தலைநகரில் போதைப் பொருள் விற்பனை, கடத்தல் சம்பவங்களை தடுக்க போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த டீம், சென்னை முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் குறித்த தகவல்களை ரகசியமாக சேகரித்து அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்தநிலையில்தான் சினிமா பிரபலங்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்யப்படுவதாக இந்தப் பிரிவில் உள்ள அதிகாரிகளுக்கு சமீபத்தில் ரகசிய தகவல் கிடைத்தது. அதனால் போலீஸ் டீம் சந்தேக வளையத்துக்குள் சிலரை கொண்டு வந்து அவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தனர். 04.02.2026-ம் தேதி இரவு, வளசரவாக்கம், மெகாமார்ட் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த 4 பேரை போலீஸார் சோதனை செய்தனர். சோதனையில் காருக்குள் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து காரில் வந்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் (31), கார்த்திக் ராஜா (31) காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த யஷ்வந்த் (25) நெசப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (35) ஆகியோரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில் இவர்கள் போதைப் பொருள் விற்பனை செய்யும் நெட்வொர்க் என தெரியவந்தது. மேலும் இவர்கள் கொடுத்த தகவலின்பேரில், போதைப் பொருள் வைத்திருந்த மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் (33), கேரளா, பாலக்காடு பகதியைச் சேர்ந்த அல்விபின்ஷா (27), சென்னை வடபழனியைச் சேர்ந்த நிவேதா (எ) வின்சி நிவேதா (26), மண்ணடியைச் சேர்ந்த தமீம் நிஸ்வான் (27), வடபழனியைச் சேர்ந்த அஞ்சு கிருஷ்ணா (30) ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். இவர்களிமிருந்து போதைப் பொருள்கள், 7 ஐபோன் உட்பட 10 செல்போன்கள், ஒரு கார், டைரி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில் அஞ்சு கிருஷ்ணா என்பவர் துணை நடிகையாக நடித்து வருகிறார். மற்றவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``வார இறுதி நாள்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதை பார்ட்டிகள் ரகசியமாக நடந்து வருகின்றன. அதிலும் செலிபிரிட்டிகள் பங்கேற்கும் பார்ட்டிகளில் விலை உயர்ந்த போதைப் பொருள்கள் சப்ளை செய்யப்படுகின்றன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போதைப் பொருள் நெட்வொர்க்கை பிடிக்க நடவடிக்கை எடுத்தோம். வாகனச் சோதனையில் முதலில் சிக்கிய விக்னேஸ்வரன், வெங்கடேஷ்குமார், கார்த்திக்ராஜா, யஷ்வந்த் ஆகியோர் தனியார் நிறுவனங்களில் வேலைப்பார்த்தபடியே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இவர்களின் செல்போன்களை ஆய்வு செய்தபோதுதான் ஸ்ரீராம் என்பவர் குறித்த தகவல் கிடைத்தது. இவர், தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருக்கிறார். அதைத் தொடர்ந்து அவரைப் பிடித்து விசாரித்தபோது அல்விபின்ஷா என்பவரின் பெயரை ஸ்ரீராம் கூறினார்.

அதைத் தொடர்ந்து அல்விபின்ஷாவைப் பிடித்தோம். அப்போதுதான் சென்னை வடபழனியில் குடியிருக்கும் நிவேதாவுக்கும் போதைப் பொருள் விற்பனையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். இவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை அஞ்சு கிருஷ்ணா என்பவர் இருந்தார். அவரிடம் போதைப் பொருள் குறித்து விசாரித்தபோது அவர் முதலில் எந்த தகவலும் சொல்லவில்லை. அடுத்து அவர் தங்கியிருந்த அறையின் கட்டிலுக்கு அடியில் போதைப் பொருள்கள் இருந்தன. அதை கைப்பற்றியதோடு நடிகை அஞ்சு கிருஷ்ணாவையும் கைது செய்திருக்கிறோம். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் உதவி இயக்குநர் நிவேதாவிடமிருந்து நடிகை அஞ்சு கிருஷ்ணா போதைப் பொருள்களை வாங்கி பயன்படுத்தி வந்திருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் நிவேதாவுக்கு எங்கிருந்து போதைப் பொருள் சப்ளை செய்யப்படுகிறது என விசாரித்தபோது போதைப் பொருள் நெட்வொர்க் டீம் குறித்த முக்கிய தகவல் கிடைத்திருக்கிறது. அவர்களைப் பிடித்தால் முழு நெட்வொர்க்கையும் பிடித்து விடலாம். உதவி இயக்குநர் நிவேதாவிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கோலிவுட் வட்டாரத்தில் உள்ள பிரபலமான நடிகை, நடிகர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். தர்மபுரியைச் சேர்ந்த நிவேதா, சினிமா இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். அப்போதுதான் அவருக்கு நடிகை அஞ்சு அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் இருவரும் தோழிகளாகியிருக்கிறார்கள். இந்தச் சமயத்தில்தான் நிவேதா மூலம் அஞ்சு போதைக்கு அடிமையாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. நிவேதாவின் பின்னணியில் ஒரு பெரிய போதை நெட்வொர்க் செயல்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது" என்றனர்.

















