U19 World Cup: 15 சிக்ஸ்,15 பவுண்டரி,175 ரன்கள் - அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; குவ...
அமெரிக்கா, ரஷ்யா - கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவிற்கு ப்ளஸ், மைனஸ் என்ன? | Explained
'இந்தியா எங்கிருந்து எண்ணெய் வாங்கப்போகிறது?' - இது இப்போது அமெரிக்கா Vs ரஷ்யாவில் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்று.
ரஷ்யா - உக்ரைன் போரை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று கடுமையாக முயன்று வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், அதற்கு ரஷ்ய அதிபர் புதின் இறங்கி வருவதாக இல்லை.
இதனால், அவருக்கு நெருக்கடி கொடுத்து வழிக்கு கொண்டுவர நினைக்கிறார் ட்ரம்ப்.
அதில் ஒன்று தான் - கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குகிறது. அதில் வரும் பணம் ரஷ்யாவின் உக்ரைன் உடனான போருக்கு உதவுகிறது என்று குற்றம்சாட்டி, கூடுதல் 25 சதவிகித வரியை இந்தியா மீது விதித்தது.
இதற்கு முன்னே, இந்தியா மீது 25 சதவிகித வரியை அமெரிக்கா விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வரி விதிப்பிற்கு பின், அவ்வப்போது 'இந்தியா ரஷ்ய எண்ணெயை இனி வாங்காது என்று கூறிவிட்டது... உறுதியளித்துவிட்டது' என்று பல முறை ட்ரம்ப் கூறிவிட்டார்.
இந்தத் திங்கட்கிழமை (பிப்ரவரி 2), ட்ரம்ப் இந்தியா மீதிருந்த வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்தார்... இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் குறித்தும் அறிவித்தார். அப்போதும் கூட இதைத் தான் சொன்னார்.
ஆனால், 'அடுத்த நிலைப்பாடு என்ன' என்பது குறித்து இந்தியா இந்த நொடி வரை வாயைத் திறக்கவில்லை.
இந்தியா, ரஷ்யா, கச்சா எண்ணெய்
2021-ம் ஆண்டு தரவுகளின் படி, இந்தியா தனது ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதியில் 0.2 சதவிகிதம் மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து வாங்கியது.
ஆனால், இப்போது இந்தியா தனது 88 சதவிகித கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறது.
'ஏன் இந்த அசுர வளர்ச்சி?' என்ற கேள்விக்கு, 'ரஷ்யா - உக்ரைன் போர்' தான் காரணம்.

2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது போரைத் தொடங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது வரிகளையும், தடைகளையும் மாறி மாறி விதித்தன.
இதனால், ரஷ்யாவின் பொருளாதாரம் பெரும் தள்ளாட்டத்தைக் கண்டது. காரணம், ரஷ்யாவின் முக்கிய வருமானங்களில் ஒன்று, 'கச்சா எண்ணெய் ஏற்றுமதி'.
அதனால், பிற நாடுகளை ரஷ்யா தங்களிடம் இருந்து எண்ணெய் வாங்க வைக்க குறைந்த விலைக்கு விற்றது. இதைப் பயன்படுத்தி இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கின.
2022-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு வரை, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்த தரவுகள்...
(*இது ஒரு நாள் கணக்கிற்கானது)
2022-ம் ஆண்டின் மத்தியில் இருந்து 10 லட்சம்+ பேரல்கள்,
2023 - 20 லட்சம்+ பேரல்கள்,
2024 - 17 - 18 லட்சம் பேரல்கள்,
2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் 17 - 20 லட்சம் பேரல்கள். அதன் பிறகு, இறக்குமதி படிப்படியாகக் குறைந்தது. இடையில் நவம்பர் மாதம் மட்டும் 20 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்யப்பட்டது. இது அதிகமாகும்.

இதே காலகட்டத்தில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிய தரவுகள்...
(*இதுவும் ஒரு நாள் கணக்கிற்கானது)
2022-ம் ஆண்டு குறித்த தரவுகள் இல்லை.
2023-ம் ஆண்டு 3 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான பேரல்கள்,
2024-ம் ஆண்டு அவ்வப்போது 3 - 4 லட்சம் பேரல்கள்,
2025-ம் ஆண்டு 2.80 - 4 லட்சம் பேரல்கள்.
ஒப்பந்தம் குறித்த அறிவிப்பின் போது, இந்தியா வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறினார் ட்ரம்ப்.
ஆனால், இந்தியா 2022-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு வரை பெரிதாக வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கவில்லை. அதற்கான தரவுகள் எங்கேயும் இடம்பெறவில்லை.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் என்ன லாபம்?
பல்வேறு ஆய்வுகளின் படி, 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை, இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததில் 17 பில்லியன் டாலர்களைச் சேமித்துள்ளது.
ஆனால், இந்தச் சேமிப்பு சாமானியர்களுக்கு உதவவில்லை என்றாலும், இந்திய ஏற்றுமதிகளுக்கு உதவியது.
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து இந்திய நிறுவனங்கள் சுத்திகரித்து, அதை ஏற்றுமதி செய்யும். அதற்கு இந்தச் சேமிப்புகள் பெரிய லாபமாக இருக்கும்.
தூரத்தை வைத்து பார்க்கும்போது, இந்தியாவிற்கு ரஷ்யா மிகப்பெரிய ப்ளஸ்.

ரஷ்யாவில் இருந்து குறைந்தபட்சம் 24 நாள்களிலும், அதிகபட்சம் 40 நாள்களிலும் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு கொண்டு வந்துவிடலாம். அதனால், போக்குவரத்து செலவுகளும் குறையும்.
ரஷ்யா நடத்தும் போர், உலக நாடுகள் அதன் மீது விதித்துள்ள வரிகள், தடைகள் போன்றவை அதனுடனான வணிகத்திற்கு பெரும் குறை.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி
அமெரிக்கா மற்றும் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியா மீது விதித்துள்ள வரி குறைகிறது.
மேலும், இந்தியா உடன் அமெரிக்காவிற்கு ஒப்பந்தமும் முடிவாகி உள்ளது. இவை இரண்டுமே இந்தியாவிற்கு மிகப்பெரிய ப்ளஸ்.
எண்ணெய் இறக்குமதிக்கு பெயர்போன பகுதி மத்திய கிழக்காசிய நாடுகள். அங்கே நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்த நேரத்தில், இந்தியா போன்ற பெரிய நாடு கச்சா எண்ணெயை அமெரிக்காவில் இருந்து வாங்குவது சந்தையை விரிவுபடுத்துகிறது.
அமெரிக்காவின் எண்ணெய் தரமான எண்ணெய். அதனால், அதை இந்திய நிறுவனங்கள் சுத்திகரிப்பது எளிது. இதனால், சுத்திகரிப்பு செலவுகள் பெருமளவில் குறைக்கப்படும்.
மைனஸ் பக்கத்தைப் பார்த்தால்...
அமெரிக்காவில் இருந்து எண்ணெய் வாங்கும்போது ரஷ்யாவில் இருந்து பேரலுக்கு 10 - 11 டாலர்கள் தள்ளுபடி கிடைத்த சலுகை இங்கே கிடைக்காது.
அடுத்ததாக, அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் கொண்டு வர 54 நாள்கள் ஆகும். ரஷ்யாவை ஒப்பிடும்போது, போக்குவரத்தில் அமெரிக்காவில் இருந்து எண்ணெய் கொண்டு வர அதிக செலவுகள் ஆகும். இது பேரலுக்கு 7 - 12 டாலர்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்த இரண்டினாலும் இந்தியாவிற்கு இதுவரை இருந்து வந்த இறக்குமதி செலவுகளை அதிகமாக்கும்.

வெனிசுலாவில் இருந்து இறக்குமதி...
தற்போது அரசியல் காரணங்களுக்காக, வெனிசுலா எண்ணெய் சலுகையில் கிடைக்கிறது. இது ரஷ்யாவின் சலுகையை விட பெரியது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் சில பொதுத்துறைகளின் டிவிடென்டுகள் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வெனிசுலாவில் கிடைக்காமல் இருக்கின்றன. இந்த வணிகத்தைத் தொடர்வதன் மூலம், இந்தப் பாக்கிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
நெகட்டிவ் பக்கத்தைப் பார்த்தால், வெனிசுலாவில் கிடைக்கும் கச்சா எண்ணெய் கடினமான வகை கச்சா எண்ணெய் ஆகும். இதை சுத்திகரிக்க அதிக செலவுகள் ஆகும்.
போக்குவரத்துச் செலவுகள் அதிகம். காரணம், வெனிசுலாவில் இருந்து இந்தியாவிற்கு எண்ணெய் வர கிட்டத்தட்ட 50 நாள்கள் ஆகும்.
அரசியல் நிலையற்ற தன்மை இருக்கும் வெனிசுலாவில் இருந்து தற்போது எண்ணெய் வாங்க இந்திய அரசு முடிவு எடுத்தால் அது சிக்கல் தான்.
ஆனால், இவை எல்லாமே, 'இந்தியா இந்த முடிவை எடுத்தால்?' என்கிற அடிப்படையில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவின் முடிவு என்ன என்பதை விரைவில் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.














